தாமரைச் செல்வியின் 'யாரொடு நோவோம்?" - வ.ந.கிரிதரன் -
தாமரைச்செல்வியின் 'செங்காரிப்பசு' சிறுகதைத்தொகுப்பின் முதற் கதை 'யாரொடு நோவோம்'. தொகுப்பின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. வாணி என்னும் பெண்ணின் வாழ்வை மையமாகக்கொண்ட கதை. யுத்தத்தின் இறுதிக்காலத்தில் மக்கள் அடைந்த துயரின் குறியீடாக அமைந்த கதை. யுத்தத்தின் இறுயில் வாணிக்கு ஏற்பட்ட நிலைதான் ஆயிரக்கணக்கான பலருக்கும் ஏற்பட்டது. தொடர்ச்சியான படையினரின் ஷெல்லடி, தொடர்ச்சியான மக்களின் இடப்பெயர்வு, இடப்பெயர்வுகள் ஏற்படுத்திய வலி, எறிகணைத்தாக்குல்களினால் ஏற்பட்ட படுகாயங்கள், இழந்த உடலுறுப்புகள் , குடும்ப உறவுகள் பிரிக்கப்படல், (சில சமயங்கள் நிரந்தரமாகவே அமைந்து விடுகின்றன) இவ்விதமாக மக்கள் மேல் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கதை விபரிக்கின்றது.
அவளது வாழ்க்கை வறுமை மிக்கது. அவளது தந்தை விதானையாரின் காணியில் குடிசை போட்டு வாழ்பவன். அவ்விதம் வாழ்ந்துகொண்டே விதானையாரின் வயலையும் பார்த்துக்கொள்கின்றான். வேணியும் குடும்பச்சூழல் காரணமாகப் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லத்தொடங்குகின்றாள். இவ்விதமாக வாழ்ந்தவள் வாழ்க்கையில் செல்வராசா குறுக்கிடுகின்றான். விதானையாரின் வயலில் வேலை செய்ய வருபவன் மீது இவளுக்குக் காதல் முகிழ்க்கின்றது. திருமணம் செய்து வாழத்தொடங்குகின்றாள். குழந்தை பிறக்கின்றது. போர்ச்சூழல் செல்வராசாவையும் பிரித்து விடுகின்றது. அவன் காணாமல் போகின்றான். தேடித்தேடி வாடிப்போகின்றாள் வாணி.
தொடரும் போர் பரந்தன் தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரை அவளைத் துரத்தி அடிக்கின்றது. உறவுகளைக் குழந்தையுட்படப் பிரிந்து விடுகின்றாள். தாக்குதல்களுக்குள்ளாகி , ஆஸ்பத்திரியில் காலம் கழித்து, ஒரு கையிழந்த நிலையில் , மீண்டும் அவள் தாயையும், குழந்தையையும் கண்டடைகின்றாள். தாயும் சிறிது காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள். இவ்விதம் செல்லும் வாழ்க்கையில் திரவியம் எதிர்ப்படுகின்றான். முன்னாட் போராளியான அவனும் உறவுகளைப் போரில் இழந்தவன். கணவன் காணாமல் போய் விட்டான். இனியும் அவன் உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை என்னும் நிலையில், நினைப்பில் கைக்குழ்ந்தையுடன் , ஒரு கையுடன வாழ்க்கைப்போராட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருந்த வேணி திரவியத்துடன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்கின்றாள். ஒரு குழந்தையும் பிறக்கின்றது.