தேடியெடுத்த கட்டுரை: வில்லூன்றி மயானம்! - அ.ந.கந்தசாமி -
- 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம். 1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
வில்லூன்றி மயானம்! - அ.ந.கந்தசாமி -
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சாதிப்பேயின் கோரதாணடவம். கொடிகாமத்தில், அச்சுவேலியில் , சங்கானையில் இரத்த களரி - இவற்றை எல்லாம் கேட்கும்போது நாம் வாழ்வது இருபதாம் நூற்றாண்டா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? மனிதனை மனிதனாக மதிக்காத சமுதாயத்தின் அநியாயச் சட்டங்களை அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்று துடி துடிக்காத முற்போக்குவாதி யார்? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வாயளவில் பேசிக்கொண்டு தீண்டாமைப்பேயை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இன்னும் வாலாயம் செய்து வரும் சாதி வெறியர்களை என்னவென்பது? சாதிப்பேயின் வெறியாட்டம் சங்கானையில் ஐம்பது வயதுக்கார்த்திகேசுவின் உயிரைக் குடித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சாதி ஒழிப்புப் போரில் இந்தக் கார்த்திகேசு இரண்டாவது நரபலி. முதலாவது நரபலி 1944ம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதியன்று வில்லூன்றிச் சுடலையில் மாலை ஆறு, எழ்ழு மணியளவில் முகிலுக்குப் பின்னே மறைந்தும் வெளிவந்தும் கொண்டிருந்த சந்திரன் சாட்சியாக அளிக்கப்பட்டது. 'டுமீல்' என்று ஒரு துப்பாக்கி வேட்டு. இலங்கை முழுவதும் அதனால் அதிர்ச்சி! யாழ்ப்பாணம் ஆரியகுளத்து முதலி சின்னத்தம்பி தியாகியானான்.