சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’ - கே.எஸ்.சுதாகர் -
இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’. எல்லாளன் ராஜசிங்கம்.(ரஞ்சித்), மக்கள்நல மருத்துவ சங்கத்தலைவர் இசிதோர் பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) ஆகிய இருவரும் நூலுக்கு முன்னரை எழுதியிருக்கின்றார்கள்.
1984 இல், இந்தியாவில், ரெலோவில் (TELO)---தமிழ் ஈழ விடுதலை இயக்கம்--- ஏற்பட்ட உட்கட்சிப்பிளவு காரணமாக 13 ஆண்களும் 30 பெண்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்கள். அந்த நேரத்தில் எல்லாளன் ராஜசிங்கம், சிவகாமியைச் சந்திக்கின்றார். அது முதல் கொண்டு, சிவகாமியைப் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்கின்றார் அவர். தோழர் தோழிகளுக்கிடையேயான தொடர்புகள் தடைப்பட்டமையும், 2016 ஆம் ஆண்டில் எல்லாளன் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்’ புத்தகம் வெளிவந்த பின்னர் மீண்டும் தொடர்புகள் துளிர்விட்டதையும் எல்லாளன் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார். சிவகாமி இயக்கத்திலிருந்து விடுபட்டதன் பிற்பாடு, அவரை இசிதோர் பெர்னாண்டோ அறிந்து கொள்கின்றார். 1983 இனக்கலவரத்தின் பிற்பாடு, மருந்து உட்பட அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது - இசிதோர் பெர்னாண்டோவும் வேறு சிலருமாகச் சேர்ந்து மருந்தகம் (பார்மஷி) ஒன்றைத் திறக்கின்றார்கள். இந்த மருந்தகத்தை நிர்வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர் தான் சிவகாமி என்கின்றார் இசிதோர் பெர்னாண்டோ . எமது இன விடுதலைப் போராட்டத்தில் பல பெண்கள் இணைந்து போராடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய பதிவுகள் பெரிதாக வந்ததில்லை. அவர்கள் தாங்களாக முன்வந்து எழுதினால் தான் உண்டு என்ற நிலைமை. இங்கே சிவகாமி, யாழினி இருவரும் – போராட்டம் பற்றியும், உட்கட்சிப் பூசலில் ஏற்பட்ட அநீதி அவலங்களைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லியிருக்கின்றார்கள். புத்தகத்தின் பெரும்பகுதியை சிவகாமிதான் எழுதியிருக்கின்றார்.