முகநூற்பதிவுகள்: இலங்கை அரசியலில் கடல் அட்டையும் தமிழ் அரசியல்வாதிகளின் அறிவீனமும். - தமயந்தி சைமன் -
- அவ்வப்போது பதிவுகள் இணைய இதழில் முகநூலில் பதிவு செய்யப்படும் சிறப்பான பதிவுகள் மீள்பிரசுரம் செய்யப்படும். இது அவ்வகையான பதிவுகளிலொன்று. எழுத்தாளரும், புகைப்படக்கலைஞரும், கடலியற் துறையில் ஆழ்ந்த அறிவும் மிக்க தயமந்தி சைமன் அவர்களைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகு நன்கு அறியும். அவர் முகநூலில் அண்மைக்காலமாகப் பதிவு செய்து வரும் கடலட்டை பற்றிய பதிவுகளில் இப்பதிவும் ஒன்று. - பதிவுகள்.காம் -
"......... ஏனெண்டால், இந்தத் தொழில் எங்களுடயவர்களுக்குத் தெரியாத ஒரு தொழில்...." -அங்கஜன் இராமநாதன் , பா.உ. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.-
சீனர்களை வரவேற்க நீங்கள் எந்தக் காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும் ஏதோ..... போனால் போகட்டுமென மனதை ஆற்றுப் படுத்தலாம். இப்படியொரு காரணத்தை அங்கஜன் சொல்வதென்பது மிகமிகக் கேலித்தனமாக இருக்கிறது. "கைக்கெட்டிய கூலிக்காக கடப்பெட்டிய விடுப்பை விதைப்பதுபோல்" குத்துமதிப்பில் கருத்துச் சொல்லப்படாது. இது ஒரு சரியான தலைமைத்துவப் பண்புமல்ல. எல்லாத் தரப்பாரின் கரிசனையும் இப்போ கொஞ்சக் காலமாக இலங்கைக் கடல்மீதும், கடல் வளங்கள் மீதும், கடற்சூழல் மீதும் மையங் கொண்டிருக்கின்றது. இந்தப் பெரும் பேறுபெற்ற காலமானது இலங்கை வரலாற்றின் பக்கங்களில் பிளாட்டினத்தில் பொறித்து பவுத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேவேளை மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இப்படியான பொறுப்பு மிக்கவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றிப் பிரசங்கிப்பதற்குமுன் உங்கள் பேசுபொருள் தொடர்பாக ஆய்ந்தறிந்து, சரியான தெளிவோடு பேச வேண்டும். நீங்கள் ஒரு இனக்குழுவின் தலைவர்கள். பல லட்சம் மக்களின் தலைச்சன் பிரதிநிதிகள். மிகப்பெரும் பொறுப்புமிக்க பணியைத் தாங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தைகளையும் பொறுப்போடும், கவனத்தோடும் பேசவேண்டும். காவோலையின்மேல் பெய்வதுபோல் சகட்டுமேனிக்க்கு வாயில் வந்ததையெல்லாம் குத்துமதிப்பில் பேச முடியாது. அறிவுசார் உலகமும், பகுத்தறியும் அடுத்த தலைமுறையும் உங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் கடலட்டைத் தொழில்
இரண்டாம் உலகமகா யுத்தம் முடிந்த காலத்திலேயே கடலட்டை எமக்கு அறிமுகமாயிற்று. நாச்சிக்குடா மம்முக் காக்கா என்று கரையோரச் சமூகங்களால் கொண்டாடப்படும் முக்கம்மது காக்கா. (இவர் "லத்தீப் மாஸ்ரர்" என்று 70களில் மிகவும் அறியப் பட்ட ஒரு முஸ்லிம் ஆசிரியரின் தந்தை என்று நினைக்கிறேன்) மற்றும் நாச்சிக்குடா ஹச்சுக்காக்கா, கறுத்த மரக்காயர், சூசை போன்றோர்களது முயற்சிகளால் கடலட்டைத் தொழில் எமது கரையோர மீனவச் சமூகங்களிடையே மிகப்பெரும் வருமானம் ஈட்டும் தொழிலாக நடைமுறையில் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சியை ஏற்ற காலப் பகுதியில் இந்தக் கடலட்டைத் தொழில் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக தொழிலாளர்களுக்கான சிறு கடன்களை வழங்கியும், கடலட்டைத் தொழிலுக்கான உபகரணங்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய ஆவன செய்தும் ஊக்குவித்தது. இந்தக் காலகட்டத்தில் கடலட்டைத் தொழில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. (இவர்களே பின்னைய காலங்களில் இதற்கு எதிராக செயற்பட்டு பின்னடையச் செய்தார்கள் என்பது இன்னொரு கதை).