படித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ்! இருபது ஆண்டுகால நாவல்களின் அறிமுகத்தை விமர்சனப்பாங்கில் பதிவுசெய்யும் அரிய முயற்சி! - முருகபூபதி -
தமிழ் நாவல் நூற்றாண்டு காலம் 1976 இல் வந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவர் இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி இரண்டு நாட்கள் ஆய்வரங்குகளை நடத்தினார். அக்காலப்பகுதியில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறாண்டு பிறந்துவிட்டது என்ற தகவல் தமிழகத்திற்கும் தெரியாதிருந்தது. அப்போது அங்கே முதல்வராக இருந்தவர் பல நாவல்கள் எழுதிய கலைஞர் கருணாநிதி. பின்னாளில் சிட்டி சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதினார்கள். அதற்கு முன்பே, இலங்கையில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய மதிப்பீட்டு நூலையும் எழுதிவிட்டார். ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூலை சில்லையூர் செல்வராசன் 1967 ஆம் ஆண்டளவில் எழுதி வெளியிட்டுள்ளார். கைலாசபதியும் 1968 இல் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியதையடுத்து, தமிழக விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அதற்கு எதிர்வினையாற்றி மார்க்ஸீயக் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற விமர்சனத்தை நடை இதழில் எழுதினார்.
அதனை இலங்கையில் பூரணி காலாண்டிதழ் மறுபிரசுரம் செய்ததையடுத்து, பேராசிரியர் நுஃமானும் அதற்கு நீண்ட எதிர்வினையை மல்லிகையில் தொடராக எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக மு. பொன்னம்பலமும் மல்லிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். சில பதிப்புகளைக்கண்டுள்ள கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் மற்றும் ஒரு பதிப்பினைக்கண்டது. இந்த புதிய பதிப்பினை காலச்சுவடு வெளியிட்டது. நூலகர் நடராஜா செல்வராஜா, ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு என்ற விரிவான நூலை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
இத்தகைய இலக்கிய வரலாற்றுப்பின்னணியுடன் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி மாத இதழ், தனது 150 ஆவது இதழாக ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழை 475 பக்கங்களில் பெறுமதி மிக்க ஆவணமாகவே வெளியிட்டுள்ளது. அதன் உள்ளடக்கமும் கனதியும் பிரமிப்பைத்தருகிறது. அதற்காக உழைத்த ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். மொத்தம் 107 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.