ஆய்வு: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவலும் , ;குருட்டு வாழ்க்கை சிறுகதையும் சோபாகிளிஸ்ஸின் எடிப்பஸ் நாடகமும்! - வ.ந.கிரிதரன் -
அண்மையில் செங்கை ஆழியான் தொகுத்திருந்த ஈழகேசரிச் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலச் சிறுகதையொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன் தலைப்பு 'குருட்டு வாழ்க்கை' இதனைப்பற்றி முன்பும் அறிந்திருக்கின்றேன். ஆனால் வாசித்திருக்கவில்லை. இப்பொழுதுதான் முழுமையாக வாசிக்கக் கிடைத்தது. இது வெளிவந்தது ஈழகேசரியின் 17.05.1942 பதிப்பில். அ.ந.க பிறந்தது ஆகஸ்ட் 8, 1924. அதன் படி இச்சிறுகதை வெளியானபோது அ.ந.க.வுக்கு வயது பதினெட்டு. தொகுப்பிலுள்ள அ.ந.க பற்றிய குறிப்பில் அ.ந.க.வின் முதலாவது சிறுகதை அவரது பதினேழாவது வயதில் ஈழகேசரியில் வெளியானதென்றும் , சிப்பி என்னும் புனை பெயரில் எழுதிய பகல் வெள்ளி என்னும் சிறுகதை 1941இல் பிரசுரமானதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சிறுகதை வெளியானபோது அ.ந.க.வின் வயது 17 என்பதால் அதுவே அவரது பிரசுரமான முதலாவது சிறுகதையாகவுமிருக்கக் கூடும். (அ.ந.க ஈழகேசரியின் மாணவர் பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவைதாம் அவரது பிரசுரமான எழுத்துகள். அப்பகுதியிலும் அவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. அது அவர் மாணவராக இருந்த சமயம் எழுதிய சிறுகதை).
இச்சிறுகதையின் கதைச்சுருக்கம் வருமாறு: கதைசொல்லியான ராமலிங்கம் நண்பன் சேகரனைப் பலவருடங்களுக்குப் பின்னர் சந்திக்கின்றான். அப்பொழுது அவன் குருடாகவிருக்கின்றான். அவன் தன் வாழ்வின் கதையைக் கூறுகின்றான். அப்பொழுது அவன் தான் இரு தடவைகள் குருடானதாகக் குறிப்பிடுகின்றான். அவன் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. அவனது பாடசாலைக்கண்மையிலிருந்த பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த அட்வகேட் ஒருவரின் மகளான ராஜம்மாவை அவன் காதலிக்கின்றான். இதனை அவன் நண்பனான ராமலிங்கத்திடம் கூடக் கூறவில்லை. பின்னர் படிப்பு முடிந்து கிராமத்துக்குத் திரும்பியதும் பெற்றோரிடம் இது பற்றிக் கூறுகின்றான். அச்சமயம் ஊரில் பரவிய அம்மை சேகரனுக்கும் தொற்றி விடுகின்றது. அதனால் அவன் கண்பார்வை போய்விடுகின்றது. கண் பார்வை போய்விட்ட சேகரனுக்கு ராஜம்மாவைப் பெண் கொடுக்க அவளது பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். இதனைக் கேள்விப்பட்ட சேகரன் மனமொடிந்து விடுகின்றான். அவனது பெற்றோரோ அவனுக்கு இன்னுமொரு பெண்ண மணம் முடிக்க முயற்சி செய்கின்றனர். சேகரனோ அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் ராஜம்மாவின் பெற்றோர் சம்மதித்து விட்டதாகப் பொய் கூறி இன்னுமொரு பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைக்கின்றனர். அந்தப்பெண்ணும் அவனது மனக்கண்ணாக விளங்கி அவனுடன் அன்பாக வாழ்ந்து வருகின்றாள்.