தமிழ் மொழியும் தமிழ் இசையும்! - க. நவம் -
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம் அமைதி பெறுகின்றது. இனிமையான இசையை இரசிப்பதென்பது ஓர் அலாதியான அனுபவம்! இதனால்தான் “இசையில்லாத வாழ்க்கை இனிக்காது” என்று நீட்சேயும் – ”துன்பத்தைத் துடைப்பதற்கே இசை உண்டாக்கப்பட்டது” என்று ஷேக்ஸ்பியரும் சொல்லிச் சென்றார்கள் போலும்!
மேலும், இசையானது சிந்தனையைத் தூண்டவல்ல ஒரு சிறந்த சாதனமாகும். புறவயமான இன்பத்திலும் மேலாக, இசை அறிவின் ஓர் ஊடகமாகவும், ஆன்ம ஈடேற்றத்தின் சாதனமாகவும், அகவயமாகப் பயன் தரவல்லது. தியானம், முறுக்கேறிய உணர்வுகளிலிருந்து தளர்ந்து விடுபடுதல், மனதில் காட்சிப்படுத்தல் - மற்றும் ஞாபகசக்தி, ஒழுங்கு, ஒழுக்கம், உடலாரோக்கியம், கலை-கலாசார விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் - போன்ற பல்வேறு நன்மைகளையும் இசை தன்னகத்தே கொண்டது.
உலகில் வேறெந்த இனத்திற்குமே இல்லாத இசையுறவு தமிழினத்திற்குள்ளது. தாயின் வயிற்றில் கருக்கொண்டதும் நலங்குப் பாடல், மண்ணில் வந்து பிறந்ததும் தாலாட்டு என்று ஆரம்பித்து - குழந்தைப் பருவத்தில் நிலாப்பாடல், வாலிபப் பருவத்தில் வீரப்பாடல், காதற்பாடல், சற்று முதிர்ந்த பருவத்தில் ஆன்மீகப் பாடல் எனத் தொடர்ந்து, உயிர் பிரிந்த பின்னர் ஒப்பாரிப் பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்குமெனத் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. இது தமிழினத்திற்கு மட்டுமேயுள்ள தனித்துவமான இசை அடையாளம்.
உண்மையில், நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். நாம் நமது தாயின் கருப்பையில் இருந்தபோது, நமது கண்களால் எதையுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால் காதுகளால் அந்த இசையைத் தொடர்ந்து இரசித்துக்கொண்டு இருந்தோம். அது வெறொன்றுமல்ல, நமது தாயின் இதயத்துடிப்புத்தான். எப்போதுமே தாலாட்டுப்போல, அந்த இதயத் துடிப்பின் இசையில நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.