வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்! - வ.ந.கிரிதரன் -
எனக்கு இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில் என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர். அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான்.
இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும் விண்ணை ஆராய்வதற்குரிய் வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம். அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.
இவர் ஒரு வழக்கறிஞர். வானியலில் ஆர்வம் மிக்கவர். இலங்கை வானியற் சங்கத்தின் செயலாளராக 1965 - 1967 இல் இருந்திருக்கின்றார். இவர் பெயர் செந்தில்நாதன்.
ஆனால் இவரது வானியல் துறை சம்பந்தமான கட்டுரைகள் எவற்றையும் நான் ஈழநாடு போன்ற அக்காலகட்டத்தில் வெளியான தமிழ்ப்பத்திரிகைகளில் கண்டதாக நினைவிலில்லை. வெளிவந்திருந்தாலும் என் கவனத்தில் படும் அளவுக்கு அதிகமாக அது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ஏன் வானியற் சங்கத்தின் செயலாளராக இருந்த இவர் வானியற் கழகம் பற்றி அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்பற்கான காரணம் தெரியவில்லை. என்னைப்போன்ற வானியற் துறையில் ஆர்வம் மிக்க மாணவர்கள் பலர் அதனால் நிச்சயம் பலனடைந்திருப்பார்கள்.