போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி....

- கவிஞர் சேரன் -
அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத் தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:
" தமிழ்நதியினுடைய எழுத்துக்கள் அல்லது நான் எழுதுகிற கவிதைகள், எங்களுடைய போராட்டம் தொடர்பான அனுபவங்களுக்கூடாக வருகிற படைப்புகளை எல்லாம் போரிலக்கியம் அல்லது போராட்ட இலக்கியம் என்று என ஒருவகையாக எல்லைப்படுத்தப்பட்ட முத்திரை குத்திப் பார்க்கிற ஒரு விமர்சனப் போக்கு வந்திருக்கிறது. அது பொருத்தமானதன்று. போரிலக்கியம் என்று சொல்வது போதுமென்று சொன்னால் - உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் - போர் நடந்துகொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு அரசாங்கமும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் போர்முனைக்கு அனுப்பும். வன்னியில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது 'The Hindu Group ', 'The Front line ஆகிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அதை ஆங்கிலத்தில் Embedded Journalist, Embedded Writers என்று சொல்வார்கள். தமிழில் சரியாகச் சொல்வதென்று சொன்னால் (சிரிக்கிறார்) 'உடன்படு' எழுத்தாளர்களை அனுப்பியிருந்தன. அதுபோல, ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்துகொண்டிருந்தபொழுது சில முக்கியமான கனடிய கவிஞர்களை கனடிய அரசாங்கம் அந்தப் போர்முனைக்கு அனுப்பியிருந்தது. சில கட்டுப்பாடுகள்... அங்கே இராணுவம் சொல்வதைத்தான் எழுதவேண்டும். அதையும் போரிலக்கியமென்றுதான் பார்க்கிறார்கள். அதுபோல, போரிலே கொடுமைகள் செய்த ஏராளமான படையினர், அவர்களை வழிநடத்தியவர்கள் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் போரிலக்கியம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எழுதுவதற்கும் பாதிப்பை நிகழ்த்தியவர்கள், கொலையாளிகள் எழுதுவதற்குமிடையிலான வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். எப்படிப் பார்க்கிறேனென்று சொன்னால், வெறுமனே போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் என்று சொல்லி எங்களுடைய படைப்புகளை முத்திரை குத்திவிட முடியாது. "
போர் இலக்கியத்தைச் சேரன் பொதுமைப்படுத்தியதாக உணர்கின்றேன். போர்களுக்கு மத்தியில் தம் உயிரைப்பணயம் வைத்துப் பயணித்த ஊடகவியலாளர்கள் எல்லோருமே பிரச்சாரகர்களாக இருந்து விடுவதில்லை. பலர் அங்கு நிலவும் போர்ச்சூழலை, மாந்தரை, உயிரினங்களையெல்லாம் தம் எழுத்துகளூடு , புகைப்படங்களூடு, ஓவியங்களோடு பதிவு செய்திருக்கின்றார்கள். அவற்றுக்குகாக கலை, இலக்கிய உலகின் முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றார்கள். சில போர்களை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன. உதாரணத்துக்கு இரசாயனக் குண்டினால் பாதிக்கப்பட்டு, உடம்பு எரிந்த நிலையில் நிர்வாணமாக ஓடிய வியட்நாமியச் சிறுமியின் புகைப்படத்தைக் குறிப்பிடலாம். அது போருக்கெதிராக அமெரிக்கர்களைத் திசை திருப்பியதில் முக்கிய பங்கு வகித்தது.