
இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில் உயிர் இல்லையாயின் - வாசகரின் மனதைப்பிணிக்கும் கலைத்தன்மை இல்லையாயின் – அதிற் பயனேதுமில்லை. இதனூடாக, இலக்கிய வடிவங்களிற்குத் திட்டவட்டமான வரையறைகளைக் கொடுக்கமுடியாதென்பதையும், அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை புரிந்துகொள்ளலாம் என்பதையுமே, நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை என்ற இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.
இவ்வாறு தனது அங்குமிங்குமாய்… நூலில் எழுத்தாளர் அ. யேசுராசா மறைந்துவிட்ட எழுத்தாளர் அ.செ. முருகானந்தனின் மனித மாடு சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பின் தொடக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
அண்மையில் கனடா ரொறன்றோ தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்திய கலந்துரையாடலில், அங்கே வதியும் இலக்கிய திறனாய்வாளர் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் நீண்டதோர் உரையை நிகழ்த்தியபோது, யேசுராசாவின் அங்குமிங்குமாய் … நூல்தான் நினைவுக்கும் வந்தது. யேசுராசாவும் இந்த நூலில் ஆங்காங்கே எம்மவர் படைப்புகள் குறித்து எழுதும்போது இந்த அழகியல் விடயத்தையும் தூவிச்சென்றுள்ளார். மொத்தம் 75 பதிவுகளைக்கொண்ட இந்த நூல், ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் போக்குகளையும் இனம் காண்பித்தவாறு, மொழிபெயர்ப்பு, ஓவியம், இசை, திரைப்படம், பயணங்கள், அவதானிப்புகள், நூல் விமர்சனங்கள் மற்றும் யேசுராசாவுக்கு மிகவும் பிடித்தமான கலை, இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் பேசுகின்றது. அத்துடன் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால கட்டத்தின் ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் யேசுராசா தனது பாணியில் நினைவூட்டியிருக்கின்றமையால், அதனை வாசிக்கும்போது கடந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.
யேசுராசா, சிறுகதைப்படைப்பாளி, விமர்சகர், தொகுப்பாளர், பதிப்பாளர், இதழாசிரியராக இயங்கிய அனுபவம் மிக்கவர். அத்துடன் கலா ரசிகர். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர். அலை, கவிதை, தெரிதல் முதலான இதழ்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான திசை வார இதழின் துணை ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர். எனவே, யேசுராசா கலை, இலக்கிய உலகில் கற்றதும் பெற்றதும் அநேகம்.
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ். குருநகரில் பிறந்திருக்கும் இவர், இம்மாதம் தனது 76 ஆவது பிறந்த தினத்தை நெருங்குகிறார்.
கலை, இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு அவசியம் என்பதில் உறுதியானவர்.
சிலசமயங்களில் அவரது பதிவுகளில் அறச்சீற்றத்தையும் காணமுடியும். அங்குமிங்குமாய்… நூலில் அவரது ஐந்து பக்கங்களுக்கு விரியும் என்னுரையிலும் யேசுராசாவின் அறச்சீற்றத்தை காணமுடிகிறது. ஒரு காலத்தில் இவருடன் நல்ல நண்பர்களாக திகழ்ந்த சிலரும், இந்த அறச்சீற்றத்தை சகிக்க முடியாமல் இவரிடமிருந்து ஒதுங்கிச்சென்றுவிட்ட துயரத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. முன்னர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அவதானித்தேன். பின்னர் புகலிட தேசத்திலிருந்தும் ( அவுஸ்திரேலியா ) பார்க்கின்றேன். ஆனால், யேசுராசா அதற்கெல்லாம் மனதளவில் அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்தும் கலை, இலக்கியத் தேடலுடன் இயங்கிக்கொண்டேயிருப்பவர்.
கருத்துப்பகைமை தனிப்பட்ட பகைமையாகிவிடுவது மிகுந்த கவலையை எனக்குத்தந்திருக்கிறது என்பதையும் வலியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.