சிறுகதை : ஆசிரியர் என் அயலவர்! இது ஒரு நூல் விமர்சனமும் கூட! - கடல்புத்திரன் -
ஆசிரியர் என் அயலவர் . சிறிய கடலே( நீரே ) வேலணையிலிருந்து என் கிராமத்தை , அராலியைப் பிரிக்கிறது . நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான். முன்பும் , அராலித்துறை போக்குவரத்துக்கு வள்ளப்பாதையாக விளங்கி இருக்கிறது . காலனிக்காலத்திலிருந்தே அரசாங்கம் தரைவழிப்பாதை அமைக்கும் திட்டத்தை வைத்திருக்கிறது புங்குடு தீவு (கைவேப்) பாதையின் நீட்சி செயல் வடிவம் பெறவில்லை . கடலில் கல்லைக் கொட்டி பண்ணை வீதி , காரை வீதி , புங்குடுதீவு வீதி போன்றவை என்று அமைக்கப்பட்டன ? அப்படி அராலித்துறை வீதி ஏன் அமைக்கப்படவில்லை ? விபரம் தெரியவில்லை . பண்ணைப்பாலம் என்கிறார்கள் . அங்கே பாலம் ஒன்றும் இல்லை . பாலங்கள் இல்லாது இருப்பதால் தான் இவை வற்றுக்கடலாகிக் கொண்டு செல்கிறதா ? அந்த ஃபைலை , மகிந்தா தன் ஆட்சியில் எடுத்து தூசி தட்டி பார்த்திருக்கிறாரோ ? என்று தோன்றுகிறது .
1985 இல் பண்ணை வீதியை , காரைநகர் ஃபெர்ரி பாதையை இலங்கைப்படையினர் மூடி விட வேலணை , புங்டு ...நயினை மக்கள் தம்தேவைகள்....வள்ளங்களின் மூலம் அராலித்துறைக்கு வந்து ...கல்லுண்டாய் பாதையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லத் தொடங்கினர் . வள்ளம் , பெரு வள்ளமாகி , படகுகளாகி ...பிறகு , புளட் அமைப்பினால் .சிறிய ஃபெர்ரி போன்ற மிதவையும் கூட தயாரிக்கப் பட்டு மிதக்க விடப்பட்டது , அதில் , மோட்டர் சைக்கிள் ... கறுவாட்டுச்சிப்பம் என கணிசமானளவில் கொண்டுச் செல்வதில் முன்னேற்றம் கண்டவர்கள் . மிதவையில் ட்ராக்டர் , கார்கள் கூட ஏற்றிச் செல்ல தலைப்பட்டனர் . அந்த நேரமே நானும் ...இது சிறிய கடல் தான் என்பதை அறிந்தேன் . இடைப்பட்ட கடலில் பெரிதும் கழுத்தளவு நீர் உயரம் தான் என்பது என்னையும் ஆச்சரியப்படுத்தியது . பிறகு , அவ்வூரவருக்கு நானும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனேன்.