சிறுகதை: மௌனமே பேசு! - மாலினி அரவிந்தன் -
யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன.
பள்ளிப்படிப்பு காரணமாக பள்ளிக்குக் கிட்டவாக புதிதாக ஒரு காணி வாங்கி ஆசையாசையாய் நாங்கள் ஒரு கல்வீடு கட்டிக் குடிபுகுந்தோம். எனது அறை யன்னலுக்குள்ளால் அப்படித்தான் பள்ளிப்பருவத்தில் அதிகாலை நேரத்தில் செவ்வானத்தையும்,
ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து ஒன்றாகக் கலக்கும் கருமேகக் கூட்டங்களையும், அணிலாடும் முன்றல்களையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன்.
அடுத்த வீட்டு மாமரமும் அதில் குலைகுலையாய் காய்த்துத் தொங்கும் மாங்காய்களும், அவற்றை ருசி பார்க்கக் கொப்புகள் தாவும் அணில்களும், குருவிகளும் அவ்வப்போது யன்னலுக்கால் கண்ணில் பட்டுத் தெறிப்பதுண்டு. இந்தக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், ‘மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை’ என்ற ஒளவையாரின் பாடல் அடிக்கடி ஞாபகம் வரும். சுதந்திரமாய்க் கீச்சுக்குரலிசைக்கும் பறவைகளின் இருப்பிடமாய் அந்த மாமரம் இருந்தது.
இதைவிட பக்கத்து வீட்டுக் காணியில் மாமரத்திற்குச் சற்றுத் தள்ளி உள்ள குடிசையில் ஒரு குடும்பம் குடியிருப்பதையும் இந்த யன்னலுக்குள்ளால்தான் முதன் முதலில் பார்த்தேன். இயற்கையை ரசித்த எனக்கு அங்கு தினமும் பார்க்கும் காட்சிகள் வித்தியாசமாக இருந்தன. நடுத்தர வயதுடைய கணவன், மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள், அவர்களின் உருவத்தை வைத்து வயது எட்டு, பத்து, பன்னிரண்டாய் இருக்கலாம் என்று மனசு கணக்குப் போட்டது.