பதினெண்கீழ்க்கணக்கில் நிலம்சார் சிந்தனை - முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
முன்னுரைமனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க கூடாத செயல்களை தொகுத்தும் பகுத்தும் உரைப்பதே பதினெண்கீழ்க்கணக்கு. இந்நூலில் அறத்தோடு அறிவியல் கருத்துகளும் பொதிந்து கிடந்துள்ளன என்று கூறின் மிகையாகாது. இயற்கையைக் கண்டு மனிதன் அஞ்சத் தொடங்கினான். இவ்வச்சத்தின் விளைவாக பண்டைத்தமிழன் ஐம்பூதங்களையும் வழிபட்டான். ஐம்பூத வழிபாட்டால் பருவத்தையும் நேரத்தையும் அளவிடுவதில் அதீத நாட்டம் கொண்டான். ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத்தமிழனின் வாழ்வில் இன்றியமையா இடத்தினைப் பெற்ற நிலம் சார் சிந்தனைகளை இலக்கியங்கள் வழி வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
நிலம்
உலகில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஐம்பூதங்களே. இவ்வைம்பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த தொடர்பினை உடையவை. இயற்கையோடு இயைந்த பழந்தமிழன், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் போற்றி வழிபட்டதோடு அவற்றின் நுட்பமான இயக்கங்களையும் தனது தொலை நோக்கு பார்வையால் அறிந்துள்ளான் என்பதனை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தெளிவாக்குகின்றன.
ஐம்பூதங்களுள் முதன்மையானது நிலம். உலகில் வாழ்கின்ற ஓரறிவு முதலாக ஆறறிவு உயிரினங்கள் வரையிலானோர் தங்குவதற்கு இடமளிக்கும் பரப்பளவே நிலம். மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவடையச் செய்வதில் நிலம் முக்கிய பங்காற்றுகின்றது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி நிலம் என்ற சொல்லிற்கு, “பயிர் செய்யும் இடம், பூமியின் மேல்பரப்பு, இயற்கைச் சூழலைக் கொண்டு பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு, தரை”1 என்று பொருள் உரைக்கின்றது. முதற்பொருளில் நிலத்தை முதன்மையாக தொல்காப்பியர் சுட்டும் முறையினை,
“முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”
(இளம்,தொல்,பொருள்,மரபு.நூற்.950)
என்ற நூற்பா உணர்த்துகின்றது. நிலங்களை அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பண்டைத்தமிழன் பாகுபடுத்தியதோடு காலத்தை அறிந்து கொள்வதற்கும் நிலத்தை உபயோகப்படுத்தினான் என்பதனையும் உணர முடிகின்றது.