முதல் சந்திப்பு: கலைக்குடும்பத்தின் வாரிசு கலையரசி சின்னையா ! வளரிளம் பருவம் முதல், புகலிட நாடுகள் வரையில் இலக்கியம் பேசும் ஆளுமை ! ! - முருகபூபதி -
எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த ஸ்ரான்லி கல்லூரி ( பின்னாளில் இக்கல்லூரி கனகரத்தினம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது ) ஆண்கள் விடுதியிலிருந்து ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். நவராத்திரி காலத்தில் நடந்த கலைமகள் விழாவில் ஒரு பெரியவர் கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசினார். அவர்தான் வித்துவான் வேந்தனார் என்று கல்லூரி அதிபர் மண்டலேஸ்வரன் அறிமுகப்படுத்தினார்.
“வித்துவான் வேந்தனார், கொழும்புத்துறை ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையிலும் விரிவுரையாளராகப்பணியாற்றியவர்.“ என்று அவரிடம் கற்ற எழுத்தாளர் தெணியான், பின்னாட்களில் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் வித்துவான் வேந்தனார் குழந்தை இலக்கியத்திற்கு வளமூட்டியவர். அவரது
“காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா,
பள்ளிக்கூடம் விட்டபோது பாதி வழிக்கு வந்து
துள்ளித் குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில் போடும் அம்மா…"
என்ற பாடலை நாம் ஓசைநயத்துடன் பாடமுடியும். இலங்கையில் பல தமிழ்ப்பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த பிரபல்யமான பாடல் !