சங்க இலக்கியம் பட்டினப்பாலை கூறும் தமிழரின் வணிக அறநெறி ! - இளவரசி இளங்கோவன் , மொன்றியல் , கனடா -
நீண்ட நெடுநாளாக சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழியாக எனக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பு கிட்டியது. ஆம் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நிகழ்த்திய ஞானபாரதி விருதுக்கான நான்கு கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில் அரையிறுதிச் சுற்றில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையையும் , நெடுநல்வாடையையும் அறியும் வாய்ப்பு கிடைத்தற்கரிய வரமாக கிடைத்தது.தமிழை வாழ்த்துவதற்கும் , வளர்ப்பதற்கும் கடின உழைப்பை உரமாக இட்டு தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் அமரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்திற்கு நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக கோடி நன்றிகள்.
12 ஆம் வகுப்புக்கு பிறகு தமிழ் கற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட 10 வருடங்கள் இல்லாமல் போனது. ஆங்கிலவழி கணினி தொழில்நுட்ப கல்வி, தொழில்நுட்ப வேலை, புலம்பெயர்வு என தமிழன்னையை தரிசிக்க தவறிய தருணங்கள் அவை. புலம்பெயர்ந்த நாடான கனடா மீண்டும் என்னை உயிர்ப்பித்து என் தாய்த்தமிழை வாசிக்க வாய்ப்பு தந்தது. அதற்கு முக்கிய மூல காரணமாக அமைந்தவர்கள் என் ஈழத்தமிழ் உறவுகள். மீண்டும் வாசிப்பு பழக்கம் , எழுதும் வழக்கம் , பேச்சு எல்லாம் கைக்கொள்ள இன்று தமிழன்னையின் பெருமை வெளிச்சத்தில் நானும் ஒரு சிறு துளி வெளிச்சம் பெற்று ஒளிரும் நிலவானேன்.
பட்டினப்பாலையை பற்றிய தேடல் என்னை மேலும் மேலும் எனது தாய் மொழியை பற்றியும் , தமிழர்களின் வாழ்வியலை பற்றியும் பெருமை கொள்ள செய்தது . பெருமை கதைகள் , வரலாறுகள் மட்டுமே பேசினால் போதுமா? இன்றைய வாழ்வியலில் நம்பிக்கைக்கையின்மை, சுயநலம் , எந்த வழியிலாவது பொருள் ஈட்டினால் போதும், குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் பொருள் ஈட்டுவது போன்ற எண்ணங்களும் செயல்களும் மேலோங்க காரணமாக இருப்பது சற்றே குறைந்து போன எமது முன்னோர்கள் வாழ்வியல் கோட்பாடாக வரித்து கொண்ட அற உணர்வு தான் என்பது எனது கருத்து.இதனை மீட்டெடுக்க நாம் நமது வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உணர்ந்துகொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களில் ,வணிகத்தில், வேலையில் , கல்வியில் ,குடும்பத்தில் என எங்கெல்லாம் முடிந்தவரை செயல்படுத்தமுடிகிறதோ அங்கெல்லாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். வாழ்வியல் கொளகைகளாக வரித்து கொள்ள வேண்டும்.