உயிர்த்தெமும் உயிரினம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
- பேராசிரியர் அன்றூ பாஸ்க் (Prof. Andrew Pask). -
செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!
2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை ஆஸ்திரேலியாவின் ஏனய மாநிலங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. தஸ்மேனிய தீவில் மட்டுமே உயிர் வாழ்ந்த கடைசி மிருகமும் உயிர்நீத்தது!
தஸ்மேனியன் புலி என இவற்றிற்கு இங்கு குடியேறிய ஆங்கிலேயர் பெயரிட்டாலும் இவை பைம்மாவினம் (marsupials) எனும் பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும். இவற்றுக்கு தைலசின்கள் (Thylacines) என்ற விஞ்ஞானப் பெயரும் உண்டு.
இவை ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்களின் இளம் குட்டிகள் இவற்றின் வயிற்றுப்பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள் கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தஸ்மேனிய டெவில் ஆகியவை ஆகும். மேலே உள்ள உயிரினங்களில் இருந்து நமது நாயகன் சிறிது வேறுபடுகிறார். ஆம், ஆண் தஸ்மேனிய புலிக்கும் பெண் புலியைப் போல் வயிற்றில் பை இருக்கும். இதனால் தம் வாரிசுகளை பேணுவதில் இருவருக்கும் சமபங்குண்டு என எண்ணவேண்டாம். ஆணுறுப்புபை குளிரான காலநிலைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் சக மிருகங்களுடன் சமர்செய்யும்போது ஒரு பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.