(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (4): ஜாம கோடாங்கி - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
ஜாம கோடாங்கி
எங்க தாத்தாவுட்டு அப்பா பேரு ஊத்தங்கொட்டான் புள்ள. எங்க தாத்தா பேரு நாராயணன் புள்ள. எங்க அப்பா ஆரோக்கியசாமி. அவர, ரம்பகார ஆறுமுகம்ன்னுதான் எல்லாருக்கும் தெரியும். நான் சேவியர். கல்லொடைக்கிற சேவியர்னா யாருக்கும் தெரியும்”
“எங்க அண்ணா வீட்டுக்கு வராட்டி எங்க அம்மா வருத்தப்படும். எங்க தம்பி வீட்டுக்கு வராட்டியும் அப்படித்தான். அதே யோசனையோட அம்மா அடுப்படியிலேயே ஒக்காந்திருப்பாங்க. நான் வீட்டுக்கு வராட்டி கவலையே வராது எங்க அம்மாவுக்கு…”
“அவென் சிங்ககுட்டி… எப்படியானலும் எந்த ஜாமமானாலும் வந்து கதவெ தட்டுவான். என் சம்சாரத்துக்கு கூட என் அம்மா சொல்றது அதேதான். போய் படு புள்ள. அவென் ஒரு ஜாம கோடாங்கி. நடு சாமத்துல வந்து கதவ தட்டுவான்னு…”
இந்த ஜாம கோடாங்கியையும் எக்குத்தப்பாய்த்தான் கொடைக்கானல் குளக்கரையில் சந்தித்தேன்.
குளம் மாறிவிட்டிருந்ததா என்பது சரியாக பிடிபடவில்லை. ஆனால் நகரை ஒட்டிய பகுதியில் முன்பு போலில்லாமல், சற்றே கலங்கலாய் காணப்பட்டது. ஆனால் நடந்து செல்ல செல்ல – குளத்தின் களங்கல் தெளியத்தொடங்கி, நீல வானத்தின், கீழ், ஓரங்களில் நீல அல்லிகளுடன் வழமைபோல் தனது அழகை பாதுகாத்து நின்றது. இருந்தும் கரையை ஒட்டிய பிரதேசம் முன்போலன்றி, புல்லும் புதருமாய் நிறைந்திருந்தது. ஒரு வேளை அடுத்த முறை திருத்தி இருப்பார்கள்.
குளக்கரையின் மருங்கே, பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த அதே ஒடுங்கிய காங்கிரிட் திட்டின் மீது தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தவன், தொழிலுக்கு நேரமாகிவிட்டதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து, பின்னால் ஒட்டியிருந்த தூசி துரும்புகளை தன் வல கரத்தால் தட்டி விட்டுக்கொண்டு, தன் நண்பனுடன் வேகமாக நடக்க தொடங்கினான், குளக்கரையின் நடைபாதையில்.