வாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி!' - வ.ந.கிரிதரன் -
தற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.
இவர்களது படைப்புகளிலெல்லாம் பாத்திரங்கள் அடையும் அனுபவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டிருக்கும், பாத்திரங்கள் அடையும் வேதனை , வலி வாசிக்கும் வாசகர்களையும் நீண்ட நாட்கள் ஆட்கொண்டிருக்கும், அந்த வேதனை, வலியை நான் விரும்புவனல்லன். அதனால்தான் இவ்விதமான வலியினைத் தரும் படைப்புகள் சிறந்த படைப்புகளாகவிருந்தபோதும் நான் அவற்றின் உபாசகன் அல்லன். என் அபிமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பது போல் என்னால் இவ்வகையான , வலியினைத்தரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை. மீண்டும் வாசித்தால் ஏற்படும் வலி நீங்க மேலும் பல நாட்கள் எடுக்கும் என்னும் அச்சமே அதற்கு முக்கிய காரணம். அண்மையில் ஷோபா சக்தியின் 'BOX கதைப்புத்தகம் வாசித்தபோது இதனை மீண்டுமுணர்ந்தேன். இதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி வலி தருவது. ஆனால் அந்த மொழியே ஷோபாசக்தி என்னும் கதைசொல்லியின் பலம்.