இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது. இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது. அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித் தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது.
இலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. மன்னர் காலத்தில் தேனும் சுரந்து, ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந்த பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது. ஒல்லாந்தர்கள் நீர்கொழும்புக் கடற்கரைக்குச்சமீபமாக ஒரு கற்கோட்டையை அமைத்து முகாமிட்டபோது, அதற்கு வடமேற்கிலிருந்து வருவதற்கு மகா ஓயா நதியிலிருந்து கிளை வெட்டி, புத்தள வெட்டுவாய்க்காலையும் அமைத்தனர். அதற்கு அணித்தாக எழுந்தருளிய ஶ்ரீசித்திவிநாயகர் கோயிலின் முன்புறம் நீண்ட காலமாக விருட்சமாக வளர்ந்திருந்த அரச மரத்தின் நிழலில் அக்காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த சைவத் தமிழ்ப்பெருங்குடி மக்களினால் உருவாக்கப்பட்டது இந்து வாலிபர் சங்கம். வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்ற பெயரையும் இவ்வூர் பெற்றிருந்தது. கத்தோலிக்க மக்கள் செறிந்துவாழ்ந்த இந்த ஊருக்கு சின்னரோமாபுரி என்றும் ஒரு பெயர் வழக்கிலிருந்தது. நூற்றுக்கணக்கான கத்தோலிக்க வழிபாட்டிடங்கள் அமைந்திருந்தமையினால், இந்தக்காரணப்பெயரும் தோன்றியிருக்கிறது.
இவ்வாறு பல காரணப்பெயர்களுடன் விளங்கிய எமது ஊருக்கு காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனச்சொல்லத்தக்வகையில் 1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி காலத்தில் தோன்றியதுதான் விவேகானந்தா வித்தியாலயம். முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது. அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும், அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற - கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது. எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள் பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர். 1954 ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார். தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். இவ்வாறு அந்தப்பாடசாலை தொடங்கப்பட்ட அக்காலப்பகுதி, இன்று இந்தப் பதிவை எழுதும் எனக்கு நினைவாக ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.