ஜெயகாந்தன் மறுவாசிப்பு: மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் - காலமும் கருத்தும்!
ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், அந்தப்படைப்புகளில் இன்றைய வாசகரின் அவதானிப்பையும் கணிக்கும் மறுவாசிப்பு அரங்கு நேற்று முன்தினம் மெல்பனில், இலக்கிய நண்பர் பல் மருத்துவர் மதியழகன் இல்லத்தில் நடந்தது. அதே தினத்தில் மெல்பனில் வேறு ஒரு திசையில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய அவசியத்தையும் புறம் ஒதுக்கிவிட்டு, ரயிலேறிச்சென்றேன்.
ஜெயகாந்தன் வாழும்போதே ( அவர் நீண்ட காலம் எழுதாமலிருந்தமையால்) எழுத்துலகிலிருந்து மறைந்துவிட்டதாகவும் பத்திகளில் பறைசாற்றி, வித்துவம் காட்டிக்கொண்டிருந்தவர்களை, அவ்வாறு எழுதவைத்ததன் மூலம் தன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைக்கவைத்துக்கொண்டிருந்தவரைப்பற்றி, அவர் வாழும்போதும் மறைந்த பின்னரும் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன். எனவே எனது தரப்பில் அவர் குறித்து புதிதாக எழுதுவதற்கு எதுவும் இல்லை என்ற நினைப்புடன்தான் மெல்பனில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வதியும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அழைப்பை ஏற்றுச்சென்றிருந்தேன். அங்கு சென்ற பின்னர்தான், ஜெயகாந்தனை இன்னமும் மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும் சிலரையும் முதல் முதலில் சந்திக்கவும் நேர்ந்தது. அவர்கள் உருவாக்கியிருக்கும் வாசகர் வட்டத்தின் அன்றைய சந்திப்பில் முதல்தடவையாக கலந்துகொண்டபோது, ஜெயகாந்தன் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதிய டிரெடில், பிணக்கு, நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய மூன்று சிறுகதைகளையே வாசிப்பு அனுபவப்பகிர்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தமையும் தெரியவந்தது. ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்னர் நான் படித்த கதைகள் அவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயகாந்தன் எழுதிய கதைகள். ஆறுதசாப்தங்களையும் கடந்து ஜெயகாந்தன் பார்த்தறியாத ஒரு ஊரில் பேசப்படுகிறது என்றால், அந்த ஆளுமையின் மேதாவிலாசம் எத்தகையது...? இந்தக்கொடுப்பினை எத்தனை நவீன இலக்கியப்படைப்பாளிகளுக்கு கிட்டும்? ஜெயகாந்தனை மறுவாசிப்புச்செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் எதுவுமே பேசாமல் ஜெயகாந்தனின் மொழியில் மெளனமே பாஷையாக இருந்துவிட்டு எழுந்துவருவதற்காகத்தான் சென்றேன்.

ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது. மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், " கனவு காணுங்கள்" எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்...? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள். ஒவ்வொருவரும் தமது கனவுகளைத்தான் சொல்வார்கள். ஆசிரியரோ தனது அபிமான மாணவர் இப்படித்தான் வரவேண்டும் என்று கனவுகாண்பார். பெற்றவர்கள் தமது பிள்ளை இவ்வாறுதான் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என கனவு காண்பர். கனவுகளைத்தொலைத்தவர்கள், கனவுகளை விதைத்தவர்கள், கனவுகளிலேயே வாழ்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருப்போம், பேசியிருப்போம்.
கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது. இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன். சுநாமியின்போது மௌனகுரு - சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில் கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார்.
மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்திலிருந்து புறப்படத்தயாரானபோது ஒரு அன்பர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாம் வெளியிடும் விருந்து கலை, இலக்கிய இதழைத் தந்தார். எதிர்மன்னசிங்கத்தின் நூல் வெளியீடு அன்றையதினம் அவரது பவளவிழாவையும் முன்னிட்டு நடந்திருந்தமையால் அந்த நிகழ்ச்சியும் கலை, இலக்கிய விருந்தாகவே அமைந்திருந்தது. அதன் சுவையை ரசித்துவிட்டு கிளம்புகையில் எனது கைக்கு வந்தது கிழக்கிலங்கை பாண்டிருப்பிலிருந்து இருமாதங்களுக்கொருமுறை வெளியாகும் விருந்து. வெல்லும் தமிழ் - எங்கள் வெல்லத்தமிழ் என்ற கவித்துவ மகுடத்துடன் இதனை வெளியிட்டுவரும் அதன் ஆசிரியர் அகரம். செ. துஜியந்தன் இதழையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். எனக்குத்தரப்பட்டது அதன் மூன்றாவது இதழ். இவ்விதழ் வெளியாகும் ஊரில் பிறந்து வளர்ந்து, இலக்கியப்பணியும் ஆசிரியப்பணியும் புரிந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களை நினைவுகூரும் வகையில் குறிப்பிட்ட விருந்து வெளியாகியிருக்கிறது.
இந்த அங்கத்தை எழுதுவதற்கு அமர்ந்தபோது, எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன கதையொன்று நினைவுக்கு வந்தது. நான் பிறந்தது வீட்டில். எங்கள் அம்மா தனது ஐந்து பிள்ளைகளையும் வீட்டில்தான் பெற்றார். அதேபோன்று எனது அக்காவும் தனது நான்கு குழந்தைகளையும் வீட்டில்தான் பெற்றார். மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்த காலத்தில் நாங்கள் பிறந்தோம். இன்று நிலைமை அப்படியல்ல. நான் பிறந்து, எனது அழுகுரல் கேட்டவுடன் எங்கள் தாத்தா ( அம்மாவின் அப்பா) வீட்டின் கூரையில் ஏறி ஓடுகளைத் தட்டி சத்தம் எழுப்பினாராம். ஆண்குழந்தை பிறந்ததால் அவ்வாறு செய்ததாக பாட்டி எனக்குச்சொன்ன காலத்தில் 1966 ஆம் ஆண்டு எங்கள் அக்காவுக்கு ஆண்குழந்தை முதலில் பிறந்தது. அன்று காலை நான்தான் மருத்துவச்சியை அழைத்துவந்திருந்தேன். குழந்தையின் குரல் கேட்டதும், பாட்டிதான் அறையிலிருந்து முதலில் வெளியே வந்து " ஆம்பிளைப்பிள்ளை" என்றார்கள். உடனே நான் " பாட்டி கூரையில் ஏறி தட்டவா..? " எனக்கேட்டேன். பாட்டியும் என்னை வீட்டின் கேற்றில் ஏற்றிவிட்டார்கள். அதில் ஏறி ஷெரிமரத்தில் கால்வைத்து, கூரைக்குச்சென்று ஓட்டிலே தட்டி ஒரு ஓடையும் உடைத்துவிட்டேன். அதன் பிறகு பாட்டி என்னிடம் ஒரு காகிதமும் பென்ஸிலும் கொடுத்து ( பாட்டிக்கு எழுதத்தெரியாது, கைநாட்டுத்தான்) இவ்வாறு எழுதச்சொன்னார்கள். " பாலகிரிதோசம் இன்றல்ல நாளை" அந்தத்துண்டை வீட்டின் வாசல்கதவு நிலையில் வெளிப்புறமாக ஒட்டினார்கள். அதேபோன்று மற்றும் ஒரு துண்டை எழுதச்செய்து வீட்டின் பின்புற கதவு நிலையிலும் ஒட்டினார்கள். எதற்கு இவ்வாறு எழுதி ஒட்டுகிறீர்கள்? எனக்கேட்டபோது, " வீட்டில் குழந்தை அழும் குரலைக்கேட்கும் எச்சுப்பிசாசு இரவில் வருமாம். அது வந்து வாசலில் இவ்வாறு எழுதியிருப்பதை பார்த்துவிட்டு மறுநாளும் வருமாம். அவ்வாறு தினமும் இரவில் வந்து பார்த்து ஏமாந்துபோய்விடுமாம் அந்தத் தமிழ் வாசிக்கத்தெரிந்த எச்சுப்பிசாசு. காலப்போக்கில், பாட்டியிடம், " தாய்மார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அங்கெல்லாம் அந்த எச்சுப்பிசாசுகள் வருவதில்லையா...? அங்கும் இவ்வாறு ஒட்டுகிறார்களா..? சிங்களத்தாய்மாரும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அப்படியானால் சிங்களம் தெரிந்த பிசாசுகளும் வருமல்லவா..? " எனக்கேட்டிருக்கின்றேன். அதற்குப்பாட்டி, "உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. இப்படியெல்லாம் நீ பேசுவது கலிகாலத்தில்" என்று எனது வாயில் அடித்தார்கள்.
மாஸ்டர் சிவலிங்கம் தொடர்பாக கடந்த 22 ஆம் அங்கத்தில் எழுதியிருந்த குறிப்புகளில் 1964 ஆம் ஆண்டு யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலிருந்து வருகைதந்த மாணவர்களின் வள்ளி திருமணம் கூத்து அரங்காற்றுகையை ரசித்த தகவலை எழுதியிருந்தேன். அதனைப்படித்திருக்கும் தம்பிராஜா பவானந்தராஜா என்பவர் எழுதியிருந்த குறுஞ்செய்தியை பதிவுகள் இணைய இதழ் நடத்தும் நண்பர் கிரிதரன் எனக்கு அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட வள்ளிதிருமணம் கூத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தவர்தான் பவானந்தராஜாவின் தந்தையார் அண்ணாவியார் தம்பிராஜா. 1965 இல் யாழ். மகாஜனாக்கல்லூரியில் நடந்த அகில இலங்கை ரீதியிலான போட்டியிலும் அண்ணாவியார் தம்பிராஜாவின் குருக்கேத்திரன் போர் என்ற கூத்து முதல் பரிசுபெற்றதாகவும் , பேராசிரியர் மௌனகுரு அவர்களும் தமது தந்தையாரிடம் கூத்து பயின்ற மாணவர்களில் ஒருவர் எனவும் அவரது செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 53 வருடங்களுக்கு முன்னர் பார்த்து ரசித்த வள்ளிதிருமணம் கூத்து எனக்கு நினைவிலிருக்கிறது. அதன் அண்ணாவியாரின் பெயர் மறந்துவிட்டது. நினைவுபடுத்திய அண்ணாவியார் மகனுக்கு நன்றி.
மகாபாரதக்கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். தற்போது ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அதனை ஒரு தவப்பணியாகவே மேற்கொண்டு வருவது தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகா பாரதக்கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார். அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகா பாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக இன்று வரையில் எழுதிக்கொண்டிருக்கிறார். நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் பிறந்தால் ஜெயமோகன் எழுதும் வெண்முரசுவுக்கு வயது மூன்று ஆண்டுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம். இலங்கைப்பயணம் தொடர்பான பத்தி எழுத்தில் ஏன் மகாபாரதம் வருகிறது, ஜெயமோகன் வருகிறார் என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும். இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்களைத்தான் அன்று பார்ப்பதற்கு புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.
திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, மட்டக்களப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக ஓரிடத்தில் இறங்கினேன். அந்தப்பிரதேசத்தில் எஹெட் என்ற வெளிநாட்டு தன்னார்வ தொண்டுநிறுவனம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் பாண்டிருப்பிலிருந்து அங்கு வந்து குடியேறியிருந்தது. அந்தக்குடும்பத்தலைவனும் அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் போர்க்காலத்தில் ஆயுதப்படைகளினால் காணாமலாக்கப்பட்டவர்கள். சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்பார்கள். அந்தக்குடும்ப உறுப்பினர்கள் சிலர் குறிப்பாக குழுந்தைகள் உட்பட பத்துப்பேரளவில் சுனாமி கடற்கோளில் காணாமல் போய்விட்டார்கள். அந்தக்குடும்பத்தை சாமி காப்பாற்றியதாகத்தெரியவில்லை. அடுத்தடுத்து போரும், சுநாமியும் காவுகொண்ட பல குடும்பங்கள் இலங்கையில் இழப்புகளையும் கடும் துயர்களையும் கடந்து வந்துள்ளன. குறிப்பிட்ட பாண்டிருப்பு குடும்பத்தினரை சுநாமி காலத்திலும் சென்று பார்த்திருக்கின்றேன். அதில் ஒரு குடும்பத்துப்பிள்ளைகளுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியமும் உதவுகிறது.
தமிழே மூச்சாக வாழ்ந்தவரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில் அவரைப்பார்த்தபோது, அவரது பார்வை நிலைகுத்தியிருந்தது. அருகிலிருந்த அவரது அன்புத்துணைவியார் மருத்துவ கலாநிதி நளாயினி, " அப்பா... யார் வந்திருக்கிறார்கள் தெரிகிறதா..?" எனக்கேட்கிறார். அவரது நீண்ட கால நண்பர் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனும், படைப்பாளியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர் பரமநாதனும் - நானும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், தம்மை பார்க்க வந்திருப்பது யார் என்பது அவருக்குத் தெரியுமா...? தெரியாதா...? என்பதும் எமக்குத்தெரியாது. அவர் கடந்த சில வருடங்களாகவே மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பது மாத்திரமே எமக்குத்தெரியும். எமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர், மருத்துவர் பொன். சத்தியநாதன் கடந்த சில வருடங்களாகவே நினைவு மறதி உபாதையினால் பாதிக்கப்பட்டு, மரணத்துள் வாழ்ந்து - பராமரிப்பிலிருந்து கடந்த 15 ஆம் திகதி வெள்ளியிரவு மரணவாழ்வுக்கும் விடைகொடுத்து மறைந்துவிட்டார். இலங்கையில வடபுலத்தில் கரவெட்டியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், தமது இளம் பராயத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனை வயப்பட்டவராக தமது ஆசான்களுடனும் மதபீடத்தினருடனும் வாதம் செய்திருக்கும் முற்போக்காளர். மார்க்சீயப் பற்றேதுமின்றியும் பெரியாரிஸம் பேசாமலும் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் வாழ்ந்தவர். அவர் பற்றுக்கொண்டிருந்தது தமிழில்தான். தமிழுக்காக எதனையும் செய்யும் இயல்பும் அவரிடமிருந்தமையால், அவர் இழந்ததும் அதிகம். தியாகம் செய்ததும் அதிகம்.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்ளை, குடும்பத்தின் மூல உழைப்பாளியான தனயனை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இந்தத்தன்னார்வத்தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி, அவர்களில் நூற்றுக்கணக்கான மாணவர்களை பல்கலைக்கழகம் வரையில் அனுப்பியிருப்பதுடன் தொடர்ந்தும் செயலூக்கமுடன் பணியாற்றிவருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை. அவ்வாறு அங்கு செல்லமுடியாத மாணவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிகளில் இணையும் வரையிலும் இந்நிதியம் உதவி வருகிறது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்தனர்.
மாத்தளையிலிருந்து புறப்பட்டு கண்டிவந்து, அங்கிருந்து நீர்கொழும்பு வந்து இறங்கியதும், நண்பர் நுஃமானுடன் தொடர்புகொண்டு சுகமாக வந்து சேர்ந்துவிட்டதாகச்சொன்னேன். அவர்தான் முதல்நாள் என்னை பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து கண்டி பஸ்நிலையத்திற்கு அழைத்துவந்தவர். துரைமனோகரனும் உடன் வந்து கண்டி பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அங்கிருந்து இரவு மாத்தளையில் உறவினர்களை பார்க்கச்சென்று, மறுநாள் அதிகாலை புறப்பட்டு, ஊர் திரும்பியதும் வழியனுப்பியவருக்கு சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நுஃமானைத்தொடர்புகொண்டதும், அவர் " எங்கள் நாடு முன்னேறவில்லை என்று யார் சொன்னது...? நேற்றுக்காலை கொழும்பில் மாலையில் கண்டியில், மறுநாள் காலை நீர்கொழும்பில், ஆகா.... இலங்கையில் பொதுப்போக்குவரத்தின் வேகம் அசத்துகிறது" என்றார். அவர் சொல்வதும் உண்மைதான். அகலப்பாதைகளுடன் போதியளவு போக்குவரத்து வசதிகளும் இருப்பதனால் நாம் போகவேண்டிய ஊர்களுக்கு துரிதமாகச்செல்ல முடிகிறது.
சமகாலத்தில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி, " இறுதியாக படித்த நூல் எது...? " சற்று யோசிப்பார்கள். உடனடியாக பதில் வராது. ஆனால், தமது முகநூலில் என்ன வந்திருக்கிறது..? யார்... யாருடன் விவாதித்தோம் முதலான விவகாரங்கள் பற்றி உற்சாகத்துடன் அல்லது சோர்வுடன் சொல்வார்கள். என்னிடத்தில் முகவரிதான் இருக்கிறது. முகநூல் இல்லையென்பதனால், அவ்வாறு முகநூல்காரர்கள் சொல்லும்போது சகிப்புடன் கேட்டுக்கொள்வேன். மாணவர்களையும் இந்த முகநூல் ஆக்கிரமித்துள்ளது. இம்முறை இலங்கைப்பயணத்தின்போது தகைமைசார் பேராசிரியர், எனது நீண்ட கால நண்பர் எம். ஏ. நுஃமான், பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தார். அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியிலிருக்கும் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் தொடர்புகொண்டு அழைத்தார். கடந்த 2015 இலும் இவ்வாறு இவர்கள் அழைத்து சென்றிருக்கின்றேன். அந்தப்பயணம் பற்றியும் முன்னர் பதிவுசெய்துள்ளேன்.
இலங்கை வானொலி தொடங்கப்பட்டு 92 வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும், மேலும் வானொலி நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன. வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள், இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை. இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.
வடமாகாண பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து அன்று காலை புறப்பட்டபோது, " உங்களை அம்மாச்சியிடம் அழைத்துச்செல்லப்போகின்றேன்" என்றார் நண்பர் கருணாகரன். " எங்கே..? " எனக்கேட்டேன். " அம்மாச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?" என்றார். அவர் என்னை அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். அக்காச்சி, அண்ணாச்சி, அம்மாச்சி என்பவை எமது தமிழர் வாழ்வில் பேசுபொருள். அப்படி யாரோ ஒரு அம்மாச்சியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். வடக்கு பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்து கிழக்கு மாகாணம் செல்லவேண்டியிருந்தது. அதற்கிடையில் கொழும்பு, கண்டி, மாத்தளை பயணங்களும் இருந்தன. எனது அவசரத்தை அவரிடம் சொன்னேன். நான் புறப்படும்வேளையில் அதிபர் பங்கயற்செல்வன் வந்து, தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் வந்து செல்லுமாறு கேட்டார். எனது பயணநெருக்கடியை அவரிடம் பக்குவமாகச்சொல்லிவிட்டு, கருணாகரனுடன் புறப்பட்டேன். அவர் அழைத்துச்சென்றது அம்மாச்சி உணவகம். கிளிநொச்சியில் கண்டி வீதியிலிருப்பதனால், வெளியூர்களிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருபவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களையும் அழைக்கிறாள்.
" கவியரசு கண்ணதாசன் மறைந்துவிட்டார்" என்ற ஒரு தொலைபேசித் தகவல் சென்னையில் பலரையும் பரபரப்புக்குள்ளாக்கிவிட்டது. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கவிஞரின் வீட்டுக்கு படையெடுத்துவிட்டனர். அதில் ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவர் நெஞ்சிலே அடித்து புலம்பிக்கொண்டு ஓடிவந்துள்ளார். ஆனால், இவர்களெல்லாம் அதிசயிக்கும்வகையில் ஆசனத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் கவிஞர். அந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை பலருக்கும் அனுப்பியவரே அவர்தான் என்பது தெரிந்தது. குரலை மாற்றி அவ்வாறு சொல்லி பலரையும் தான் பதட்டப்படவைத்தமைக்கு காரணமும் சொன்னாராம். தான் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை தான் உயிரோடு இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை நெடுநாளாக இருந்ததாம். அன்று அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டதுடன், அவ்வாறு உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக செய்தி வெளியானால் இன்னும் அதிக காலம் வாழமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் அன்று துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லிச்சிரித்தாராம். அவர் சொன்னவாறே அதன் பிறகு பல வருடங்கள் வாழ்ந்து விட்டுத்தான் இயற்கை எய்தினார். இலங்கையில் தமிழ் புத்தக இறக்குமதி விற்பனை விநியோகத்தில் பெரும் புகழ்பெற்றிருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஸ்தாபகர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களைப்பற்றி நினைக்கும்போது கண்ணதாசனும் நினைவுக்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொழும்பு பொரளையில் கொட்டாவீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமை அலுவலகத்திற்கு 1972 - 1977 காலப்பகுதியில் அடிக்கடி சென்றுவருவேன். அங்கிருந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளும் அத்த என்ற சிங்கள நாளேடும் வெளியாகின. தமிழ் பத்திரிகைகள், வாரவெளியீடுகள்தான். அத்த பத்திரிகையில் ஒரு நாள், யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. கொழும்பில் வசித்த கட்சியைச்சார்ந்த தமிழ்த்தோழர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு தொடர்புகொண்டபோது அந்தச்செய்தி தவறானது என்பது ஊர்ஜிதமானது. இது நிகழ்ந்து பலவருடங்களின் பின்னர்தான் 1982 இல் புத்தகக்கடை பூபாலசிங்கம் மறைந்தார். அவரது பெயரில் வாழ்ந்த மற்றும் ஒருவர் இறந்த செய்தியை அன்றைய அத்த பத்திரிகை வெளியிட்டு, பின்னர் மன்னிப்பும் கேட்டது. அத்த என்றால் தமிழ் அர்த்தம் உண்மை. உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டு கட்சித்தோழர்களிடம் திட்டும் வாங்கியது அந்தப்பத்திரிகை. இதுபோன்று அ.செ. முருகானந்தனுக்கும் நடந்திருக்கிறது.
கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பு நிறைவடைவதற்கு சற்று காலதாமதமானது. தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாற்றுவதற்கு சில சகோதரிகள் வந்திருந்தார்கள். ஒரு கத்தோலிக்க மதகுருவினால் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனை அமைப்பிலிருந்து வந்திருந்த அவர்களுடைய உரை சமூகப்பெறுமதியானது. எனினும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே கேட்டனர் என்பது எனக்கு ஏமாற்றமே. கத்தோலிக்க மதபீடங்கள் இவ்வாறு இலங்கையில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. அத்துடன் கத்தோலிக்க வணக்கத்துக்குரிய சகோதரிகளும் அன்னையரும் பெற்றவர்களை இழந்தவர்களையும் பராமரிப்பின்றி அனாதரவான முதியவர்களையும் ஆங்காங்கே இல்லங்கள் அமைத்து கவனித்துவருகின்றனர். மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். வன்னிப்பிரதேசங்களில் இவ்வாறு நடைபெற்றாலும், கிழக்கில் சில மதபீடங்கள் மத மாற்றவேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவதையும் அவதானித்தேன். அதுபற்றி கிழக்கிலங்கை பயணம் தொடர்பான பத்தியில் எழுதுவேன்.
‘வாணி, உன் வீடும் வளவும் அறிவேன். அக் காணி முழுவதும் கலகலப்பே அல்லவோ?’- கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி எழுதியிருக்கும் இந்தக்கவிதை வரிகள், யாழ். மகாஜனாக்கல்லூரியை நினைவுகூருகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய நண்பர் என். சண்முகலிங்கன், " சமூக மாற்றங்களிடையும் பண்பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப்புலத்தின் சிறப்பினைக்கண்டுதான் படைப்புச்சக்தியாய்ப் பண்பாடு கண்ட கலைத்தெய்வமான வாணியும் தன்வீடாக மகாஜனாவைத் தேர்ந்தெடுத்து, தென்தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக்கிறாள். – என்று தமது கட்டுரையொன்றில் பதிவுசெய்துள்ளார். சமூக மாற்றங்களுக்கு பிரதானமாகத்திகழும் கல்வியும் கலை, இலக்கியங்களும் உருவாகும்-வளரும் ஸ்தாபனம் மகாகவி குறிப்பிடும் கலகலப்பான கலாசாலைதான்.
" உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில் மு.க. என எம்மால் அழைக்கப்பட்ட மு. கனகராசன், சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன் முதலான பத்திரிகைககளிலும் சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். சிற்பி சரவணபவனின் கலைச்செல்வி, செல்வராஜாவின் அஞ்சலி முதலான இலக்கியச் சிற்றேடுகளில் வேலை செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும் மல்லிகை தொடர்பாக அவ்வப்போது ஆலோசகராக இயங்கினார். மரணப்படுக்கையில் விழுவதற்கு முன்னர் இறுதியாக தினகரனில் வாரமஞ்சரியை கவனித்துக்கொண்டிருந்தார். கவிதை, சிறுகதை , நாடகம், மொழிபெயர்ப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்த மு.க சிறிது காலம் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவிலும் வேலை செய்தார். எழுத்தாற்றல் மிக்க இவரது படைப்புக்கள் நூலாக வெளிவருவதில்தான் எத்தனை தடைகள், தடங்கல்கள் ஏமாற்றங்கள். ‘கெமுனுவின் காதலி’ என்ற சிறிய நாடக நூலை அச்சுக்கூடத்திலிருந்து பெறுவதற்கு முடியாமல் பொருளாதார நெருக்கடியில் தவித்தார். ‘முட்கள்’ கவிதை நூலிற்கு பேராசிரியர் க.கைலாசபதியின் முன்னுரையைப் பெற்று அச்சடித்து ஒப்புநோக்கப்பட்ட படிகளை மாத்திரம் சுமார் ஒரு வருடகாலம் கொண்டலைந்து இறுதியில் ஒருவாறு அச்சிட்டு வெளியிட்டார். ‘பகவானின் பாதங்கள்’ கதைத் தொகுதியும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியானது. இந்தத்தொகுப்பு சற்று வித்தியாசமானது. இதில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறுகதை பற்றியும் அதனைப்படித்தவர்கள் எழுதிய நயப்புரையையும் இணைத்து நூலை தொகுத்திருந்தார்.
" ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் எத்தனையோ தமிழ்பத்திரிகைகள், பல்வேறு தமிழ் இதழ்கள் - சஞ்சிகைகள் என்று தொடராக ஆரம்பித்து பெரும்பாலும் எவையும் நிலைத்ததில்லை. காலப்பெருஞ்சுழலின் உக்கிரமான வேகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் காணாமல்போய்விட்டன. பொதுவிலே இன்று அச்சு ஊடகங்களின் இருப்பெனப்படுவது பாரிய கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற விடயம். ஆஸ்திரேலியாவின் பல முன்னணி அச்சு ஊடகங்கள் தங்கள் பத்திரிகை வடிவங்களை சிறிதாக அமைத்துக்கொண்டுவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் தாங்கள் முற்று முழுதாகவே இணையத்துக்கு குடிபெயர்ந்துவிடப்போவதாக அறிவித்தும்விட்டன." 
நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கௌரி அனந்தன் தொகுத்திருந்த மௌனவலிகளின் வாக்குமூலம் வெளியீட்டு விழா நடந்துகொண்டிருந்தபோது, எனக்குத்தெரிந்த யாழ். குடாநாட்டு எழுத்தாளர்கள் யாராவது வந்திருக்கிறார்களா... என்று கண்களை சுழற்றி நோட்டமிட்டேன். எவரும் தென்படவில்லை. அருகில் கெளரி அனந்தன் இருந்தார். நண்பரும் எழுத்தாளரும் சீர்மியத்தொண்டருமான சந்திரசேகர சர்மா நிகழ்ச்சி முடிந்ததும் என்னை தமது வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருந்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்த சமூகச்சிற்பிகள் தன்னார்வத்தொண்டு அமைப்பைச்சேர்ந்த ஷெரீன் சேவியர் தமது உரையில், " இங்கே வெற்றிச்செல்வியும் வந்திருக்கிறார்." எனச்சொன்னதும் முகத்தை திருப்பி மீண்டும் கண்களை சுழலவிட்டேன். வெற்றிச்செல்வியின் படத்தையும் அவரது படைப்புலகம் பற்றிய குறிப்புகளையும் ஏற்கனவே இணைய ஊடகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். வந்தவிடத்தில் அவரையும் பார்த்துப்பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியோடு மேடை நிகழ்ச்சிகள் முடிவடையும் வரையில் காத்திருந்து எழுந்தேன். கௌரி அனந்தன் எனக்கு வெற்றிச்செல்வியை அறிமுகப்படுத்தினார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









