ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று உதயண குமார காவியம். இக்காப்பியத்தில் உதயணன் காவிய நாயகனாக விளங்குகின்றான். உதயண குமார காவியத்தின் முதன்மை இடம் வகிக்கும் பெண் தலைமை மாந்தர்கள் பலராக விளங்குகின்றனர். இக்காப்பியத்தில் வாசவதத்தை, விரிசிகை, பதுமாபதி, மானனீகை போன்ற நான்கு பெண்மணிகளும் முதன்மைப் பாத்திரங்களாகக் கருதத்தக்கவர்கள். காப்பியங்களைப் படைத்தவர்கள் ஆண்கள் என்ற நிலையிலும், ஆணாதிக்கம் தலை தூக்கியிருந்த காலகட்டத்தில் காப்பியங்கள் எழுதப்பெற்றிருந்தன என்ற நிலையிலும் ஆண் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தந்து காப்பிய ஆண்படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாகின்றது. இருப்பினும் இக்காப்பிய படைப்புகளில் பெண் பாத்திரங்களும் உரிய நிலையில் காப்பிய சுவைக்காகவும், காப்பிய நடப்பிற்காவும் இணைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு இணைக்கப்பெற்றுள்ள பெண் பாத்திரங்களின் நடப்புகள், அவர்களின் பண்புகள் ஆகியவற்றின் வாயிலாக காப்பிய கால பெண் சமுதாய இயல்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பெண்ணாக இருந்து ஒரு காப்பியத்தை பெண் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய உதவுவது பெண்ணியத் திறனாய்வு ஆகின்றது. அவ்வழியில் உதயண குமார காவியம் என்ற காப்பியக் கதையில் இடம்பெறும் முதன்மைப் பாத்திரங்களை மட்டும் இக்கட்டுரை எடுத்துக்கொண்டு அவற்றின் இயல்புகளை பெண்ணிய நோக்கில் ஆராய்கின்றது.
வாசவதத்தை
வாசவதத்தைக்கு யாழிசை கற்றுத்தரும் நிலையில் அவள் அறிமுகமாகின்றாள்.
'வேந்தன் தன் மக்கட்கெல்லாம்
வேல்முதல் பயிற்றுவித்தும்
ப+ந்துகில் செறிமருங்குல்
பொருகயல் கண்ணி வேய்த்தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு
வருவித்தும் வீணை தன்னைச்
சேர்ந்தவன் நிகரில் இன்பில்
செல்வனும் மகிழ்வுற்றானே'
என்ற பாடலில் வாசவதத்தை அறிமுகமாகின்றாள். ப+ந்துகில் உடுத்திய இடையை உடையவள், கயல் மீன்களைப் போன்ற கண்களைக் கொண்டவள், மூங்கில் போன்ற தோளினை உடையவள் என்ற நிலையில் அழகு சார்ந்து வாசவதத்தை அறிமுகப்படுத்துகிறாள். இவளின் அறிமுகம் தன் உடன் பிறந்த ஆண்பிள்ளைகளின் அறிமுகத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்பது இப்பாடலின் முன்னிரண்டு அடிகளைக் கண்டாலே தெரியவருகிறது. வேந்தன் தன் மக்கட்கெல்லாம் என்று ஒரே அடியில் அழகு, கவர்ச்சி முதலியன இல்லாமல் மகன்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் மகள் அழகுடன் அறிமுகம் ஆகின்றாள்.
பின்னாளில் வாசவதத்தையுடன் உதயணனுக்குத் திருமணம் நடைபெறுகின்றது. வாசவதத்தையுடன் இன்பம் நுகர்ந்து கடமை மறக்கிறான் உதயணன். அவனை நல்வழிப்படுத்த வாசவதத்தையை சில காலம் மறைந்திருக்கக் கூறுகிறான் ய+கி என்ற அமைச்சன்.
இதன்மூலமாக பெண்களின் நெருக்கத்தைத் தவிர்த்தால் நற்கடமைகளை ஆற்ற முடியும் அவர்கள் அருகில் இருந்தால் ஆற்ற இயலாது என்பது தெரிய வருகின்றது.
பதுமாவதி என்ற பெண்ணை உதயணன் மணந்ததும் வாசவதத்தை ஊடுகிறாள்.
'வென்றிவேல் கண்ணி னாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்
கன்றிய காமம் வேண்டாக் காவல போக என்றாள்'
என்ற நிலையில் ஊடல் கொண்டு உதயணனின் மற்றொரு பெண்ணிடத்துள்ள காதலைக் கடிந்துரைக்கிறாள். இந்த ஊடலும் உதயணனால் தணிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஊடுதல் என்பது பின்னால் கூடுவதற்கான வழி என்ற மரபு இங்கு பின்பற்றப்பட்டுள்ளது என்பது தெரியவருகின்றது.
இதுபோன்று மானனீகை என்ற பந்தாடும் கலை வல்ல பெண்ணை மணக்கும்போதும் அவள் ஊடுகிறாள்.
'பிடிமிசை மாதர் போந்து பெருமணக் கோயில் புக்கார்
கடிமலர்க் கோதை மன்னன் காவி நன் விழி மானனீகை
இடிமின்னி நுசுப்பினாளை இன்புறப் புணர்ந்திருப்பத்
துடியிடைத் தத்தை கேட்டுத் தோற்றிய சீற்றத்தானாள்'
என்ற பாடலில் மீளவும் வாசவதத்தை ஊடுகிறாள். மீண்டும் அவளின் ஊடல் தணிவிக்கப்படுகிறது.
பின்பு ஒரு மகனைச் சுமந்தநிலையில் வான்வெளியில் பறக்கும் ஆசை வாசவதத்தைக்கு வருகின்றது. அதனையும் விருப்பத்துடன் முடித்து வைக்கிறான் உதயணன். பின்னாளில் தன் மகன் நாரவாகணன் காந்தருவலோகத்தைத் திறமுடன் ஆள வழிசெய்து அமைதியடைகிறாள் வாசவதத்தை.
வாசவதத்தை ஊடலும் மறுப்பும் உதயணனால் மாற்றுவிக்கும் அளவிற்கு எளிமை உடையன. ஆனால் உதயணன் திருமணம் செய்து கொண்ட பெண்கள் வாசவதத்தையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்பது இங்குக் கருத்ததக்கது.
பதுமாபதி
உதயணனன் வாசவதத்தை பிரிந்த நிலையில் மகத நாட்டு மன்னனின் தங்கை பதுமாவதியைக் காணுகின்றான். அப்போது பதுமாபதி அறிமுகம் ஆகின்றாள்.
' பருவமிக் கிலங்கும் கோதைப் பதுமை தேர் ஏறி வந்து
பொருவில் காமனையே காணப் புரவலன் கண்டு கந்து
மருவும் வாசவதத்தைதான் வந்தனள் என்றுரைப்பத்
திருநகர் மாதும் கண்டு திகைத்துளம்கவன்று நின்றாள்'
என்ற இப்பாடலில் பதுமாபதி அறிமுகமாகின்றாள். பார்ப்பதற்கு அவள் வாசவதத்தை போல இருப்பதாக உதயணன் மனம் எண்ணுகின்றது. இருப்பினும் வாசவதத்தைக்கும், பதுமாபதிக்கும் வேறுபாடு இருப்பதாகச் சுட்டி அவ்வேறுபாட்டை வாசவதத்தையின் ஊடல் தீர்க்கும் நேரத்தில் எடுத்துரைக்கிறான்
உதயணன்.
'ஊடியதேவி தன்னை உணர்வினும் ஒளியினாலும்
நாடினின்ற னக்கன்னாடா நந்திணை யல்லள் என்றான்'
என்ற பாடலில் வாசவதத்தை பதுமாபதியை விடச் சிறந்தவள் என்கிறான் உதயணன். பெண்களின் அணுக்கம் வேண்டியபோது வேண்டிய அளவில் ஏற்றியும் இறக்கியும் சொல்வது ஆண்களின் இயல்பு என்றும் அதனை நம்பி ஏமாறுவது பெண்களின் தன்மை என்றும் இதன்வழி அறியமுடிகின்றது.
இதற்குப்பின்பு வாசவதத்தை போல் தானும் உதயணனிடம் யாழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறாள் பதுமாவதி.அவ்வாசையும் நிறைவேறுகிறது. கோமுகன் என்ற மகன் அவளுக்குப் பிறக்கின்றான். அவனுக்கு மண்ணுலக அரசை நல்குகிறான் உதயணன்.
மானனீகை
ஒருநாள் வாசவதத்தையின் இருப்பிடத்தில் பந்தாடும் போட்டி நடைபெற்றது. அதில் ஆரியை என்ற பெண் மூவாயிரம் பந்துகளை இட்டு அவற்றைக் கொண்டுப் பந்தாடினாள். இதனைவிட யார் நன்றாக ஆட முடியும் என்ற எண்ணம் அவள்மனதில் இருந்தது. இவளைத் தோற்கடிக்க எண்ணி வாசவதத்தை தன் தோழியரைப் பார்த்தாள். அவளின் தோழிகளுள் ஒருத்தி மானனீகை. அவள் இப்போட்டியில் கலந்துகொள்ள முன்வந்தாள்.
'ஒருவரும் ஏற்பார் இன்றியோர்ந்து அவள் நெஞ்சம் கூர்ந்து
திருநுதல் மாது நொந்து சிறப்பின்றி இருந்த போழ்தின்
மருவு கோசலத்து மன்னன் மகளுருவரிவை நாமம்
சுரிகுழல் மானனீகை சொலற்கருங் கற்பினாளே'
என்ற இப்பாடலில் மானனீகை அறிமுகம் ஆகின்றாள். இவள் அறிமுகம் ஆகின்றபோதே பந்தாடலில் வெல்லுதல் வேண்டும் என் நோக்கத்தி;ல் அறிமுகப்படுத்தப்படுகிறாள் என்பது தெரிந்துவிடுகிறது.
இவள் பந்தாடும் அழகை
'சிலம்பு கிண்கணி சில சீர்க்கலன்கள் ஆர்ப்பவும்
வலம்புரி மணிவடம் வளர் இளமுலைமிசை
நலம் பெற அசைந்திட நங்கை பந்தடித்திடப்
புலம்பு வண்டு தேனினம் ப+ங்குழல்மேல் ஆடவே'
என்ற இப்பந்தாடல் வருணனை ஆண்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. இவளைக் களவில் மணம் புரிகின்றான் உதயணன். தன் மனைவியின் தோழி என்பதால் அவளை மணம் புரிவதில் அவனுக்கு எச்சிக்கலும் எழவில்லை. ஆனால் தத்தை ஊடல் கொள்ளுகின்றாள்.
விரிசிகை
இவளும் உதயணனால் மணம் கொள்ளப்பெற்றவள். சோலை ஒன்றில் இவளைக் கண்ட உதயணன் இவளை மணந்து கொள்ளுகின்றான். இவளே இரண்டாவதாக மணந்து கொள்ளப்பட்டவள் என்றாலும் இவளை உதயணன் நான்காவதாக வேள்வி முறைப்படி மணந்து கொள்ளுகின்றான்.
'தேவியர் மூவர் கூடத் தேர் மன்னன் சேர்ந்து செல்நாள்
காவின்முன்மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட
பூவின்மஞசரியைப் போலும் பொற்புநல்விரிசிகையை
தாவில் சீர் வேள்வி தன்னால் தரணீசன் மணந்தான்அன்றே'
இவ்வாறு உதயணனின் விருப்பத்திற்கு இசைபவர்களாக உதயண குமார காவியத்தலைவியர் அமைந்துள்ளனர். உதயணனின் விருப்பத்திற்கு எதிர் செய்பவர்களாக யாவரும் படைக்கப்படவில்லை என்ற நிலையில் ஆண்களின் விருப்பத்தின்படி நடப்பதே பெண்பிறவியின் பயன் என்பதான கருத்தாக்கத்தில் இப்பாத்திரங்கள் படைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவிற்கு வரமுடிகின்றது.
உதயணன்
யாழ் வாசிக்கத் தெரிந்தவன். அமைச்சர்களால் நல்வழிப்படுத்தப்படுபவன். தான் கண்ணுறும் பெண்களின் அழகில் மயங்கி அவர்களைச் சேர நினைப்பவன். பெண்களின் ஊடலைத் தீர்க்க வல்லவன் என்பன போன்றன உதயணின் பாத்திரப்பண்புகளாகக் கொள்ளத்தக்கன.
காமமயக்கம் அதிகமுடையவன் என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.
'இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைத்திலன்
கழிந்தறமும் மெய்மறந்து கங்குலும் பகல்விடான்
அழிந்தியன்பில் புல்லியே அரிவையுடை நன்னலம்
விழுந்து அவள் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான்'
என்ற இப்பாடல் உதயணனின் காமத்தியல்பை எடுத்துரைப்பதாக உள்ளது.
வாசவதத்தையின்பால் ஆறாக்காதல் கொண்டவனாகவும் உதயணன் படைக்கப்பெற்றுள்ளான்.
'சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவுமகத நாட்டுக்கு
இயைந்து நன்கு எழுந்து சென்றே இரவியின் உதயம் உற்றான்
நயந்தனன் தேவி காதல்நன்மனத்து அழுங்கிப் பின்னும்
வியந்து நல் அமைச்சர் தேற்ற வெங்கடும் கானம் புக்கான்'
என்ற இப்பாடலில் உதயணன் தன் மனைவியைக் காணாது வருந்தும் பாத்திரமாகப் படைக்கப்பெற்றுள்ளான். இவ்வளவில் பெண்ணின்பம் நுகர்பவனாக, அதற்காக ஏங்குபவனாக உதயணன் பாத்திரம் அமைந்துள்ளது.
உதயண குமார காவியத்தைப் படைத்தவர் யார், அவர் எப்பாலினர் என்று தெரியாத நிலையில் மேற்கண்ட ஆண்சார்புக் கருத்துகளால் உதயண குமார ஆசிரியர் ஆணாகத்தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வர முடிகின்றது. மேலும் ஆண்களின் சொல் கேட்கும் நடக்கும் சிந்தனை உடையவர்களாகவே இக்காப்பிய பெண்கள் படைக்கப்பெற்றுள்ளனர் என்பதும் இவ்வாய்;வுக் கட்டுரையின் வழியாகத் தெரிய வருகின்றது. ஆண்கள் தன்னளவில் தன் விருப்பப்படி நடக்கக் காப்பிய கால சமுதாயம் இடம் தந்துள்ளது என்பதும் இங்கு பெறப்படும் முடிவுகளுள் ஒன்றாகின்றது.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.