கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

நீலகிரி படகர் இன மக்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள். தனித்துவமான வாழ்வியலைக் கொண்டவர்கள். அதிலும், சடங்கியல் சார்ந்த பல்வேறு தனித்த தொல்கூறுகளைக் கொண்டவர்கள். ஆதியிலிருந்து எருமை மந்தைப் பேணலைத் தமது வாழ்வியலாகக் கொண்டுள்ள இவர்களின் தொல்சடங்குகள் எருமைகளை மையமிட்டதாகவே அமைந்திருப்பது நோக்கத்தகுந்தன. அதோடு, வேட்டை சமூகம், ஆநிரை வாழ்வு மற்றும் மலைப்புல வேளாண்மை எனும் முப்பரிமாண வாழ்வியல் கூறுகளைக் உட்தறித்திருக்கும் படகர்களின் நெடிய வாழ்வியல் பரப்பில் வெளிப்படும் சில தொல்சடங்குகளின் மையச் சரடாகச் சங்க இலக்கியக் கூறுகள் விரவியுள்ளமையும் அவை இன்றும் வழக்கிலுள்ளமையும் குறிப்பிடத்தகுந்தவை. அதில், சிலவற்றை இக்கட்டுரை ஆய்கிறது.

படகர்களின் ஆநிரை வாழ்வு, மலைப்புல வேளாண்மை எனும் இரண்டு நிலைகள் சார்ந்த மூன்று சங்கக் கூறுகளை இக்கட்டுரை விளக்குகின்றது. ‘நாகு ஏதோது’, ‘கோலு கடவோது’ மற்றும் ‘ஒக்கலு இக்கோது’ எனும் மூன்று பெயரிலிலேயே சங்கக்கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தச் சடங்குகளை ஆராய்வது அதன் தொல்நிலைக்கு வழிகோலும்.

நாகு ஏதோது

படகர்களின் மரபார்ந்த சடங்குகளுள் ஒன்று ‘நாகு ஏதோது’. இவர்கள் பெண் எருமையை ‘நாகு’ என்று அழைக்கின்றனர். “எருமையும் மரையும் பெற்றமும் நாகே” (தொல்காப்பியம் மரபியல் - 63) எனும் சான்று இச்சொல்லின் தொன்மையைக் காட்டுகின்றது. இவ்வழக்கு இன்றும் படகர்களிடம் வழக்கிலுண்டு. முழுதும் எருமையோடு உறையும் படகர்கள் ஆண் இறந்தால் எருமையின் ஆண் கன்றையும், பெண் இறந்தால் பெண்கன்றையும் இறந்தவரின் நினைவாக விடுவதுண்டு. இச்சடங்கினை இவர்கள் ‘கரு ஹரசோது’ என்று அழைக்கின்றனர். அவ்வாறு விடப்படும் எருமையை தம் சொந்த பயன்பாட்டிற்காகக் கொள்வதில்லை.

இவ்வழக்கு இவர்களின் தனித்துவமான ஒன்றாகும். அதேநிலையில் தம் முன்னோர்களின் இல்லங்களுக்கு நேர்த்திக்கடனாக எருமைக் கன்றினை அளிக்கும் இவர்கள் அச்சடங்கினை ‘நாகு ஏதோது’ (ஏதோது – ஓட்டிச்செல்லுதல்), ‘நாகு ஊவது’ (ஊவது - இட்டுச் செல்வது) என்று அழைக்கின்றனர்.

அருளாடிகளின் மூலமோ, நேர்;த்திக்கடனின் மூலமோ நேரும் இச்சடங்கினை மேற்கொள்ளும் இவர்கள் எவ்வளவு தொலைவிலிருந்து வந்தாலும் அழைத்து வருகின்ற எருமைக் கன்றினை கயிற்றால் பிணைப்பதில்லை. மேலும், அதை அடிப்பதில்லை. வேகமாக ஓட்டிவருவதில்லை. இல்லத்திலிருந்து முறைப்படி தம் முன்னோர்களை நினைத்து அழைத்துச்சென்றால் அவை முன்னோர்களின் இல்லத்தை அடையும்வரை எவ்விதமான சலனமுமின்றி செல்லும். ஒருவகையில், முன்னேறி நடந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் என்பது இவர்களின் நம்பிக்கை. இவர்களின் குலத்தெய்வத்தின் அடையாளமான ‘நேரிசொப்பு’ என்ற தழையைக் கையிலேந்தி அக்கன்றினை அழைத்துச் செல்கின்றனர்.

கோலு கடவது

படகர்களின் மரபார்ந்த சமூகச் சடங்குகள் அவர்களின் வழிபாடு மற்றும் மரபுவாழ்வியலோடு தொடர்புடையது. புனிதம் கருதி கட்டமைக்கப்படுவது. நெருப்பின் பயன்பாடு மானுட பண்பாட்டின் முக்கியமான அங்கமென்பது நாம் அறிந்ததே. படகர்களின் வாழ்வியலிலும் நெருப்பின் பயன்பாடு பெரும் புனிதநிலைக்குட்பட்டது.

நெருப்பைக் கடைவதையும், அதைப் பயன்படுத்துவதையும் பெரும் புனிதநிலை மற்றும் மதிப்புநிலைக்கு உட்பட்டதாக கருதிவருகின்றனர். ‘நேரி’ மற்றும் ‘தவட்டெ’ மரத்தின் குச்சிகளைக் கொண்டு நெருப்பினைக் கடையும் படகர்கள் தீக்கடைக் கோலினை ‘நெலிகோலு’ என்று அழைக்கின்றனர். இது சங்க இலக்கியத்தில் வழங்கப்பட்ட சொல்லோடுத் தொடர்புடையது.

“ஞெலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்” (பெரும்பாணாற்றுப்படை – அடி 179)

“ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கி
பறிப் புறத்து இட்ட நொடை இடையன்” (நற்றிணை – 142)

போன்ற வரிகளை இதற்குரிய சான்றுகளாகக் கொள்ளலாம். பெரும்பாலும் இடையர்களோடு தொடர்புடைய இந்த ஞெலிகோல் நீலகிரியின் இடையர்கள் படகர்கள் ‘நெலிகோலு’ என்று அழைக்கின்றனர். எருமை மந்தைகளை அழைத்துக்கொண்டு எங்குச் சென்றாலும் நெலிகோலினை தவறாமல் எடுத்துக்கொள்வார்கள். இவர்களின் மரபார்ந்த இசைக்கருவியான ‘புகுரி’ எனும் மூங்கில் கருவியைத் தயாரிக்கும்போது மூங்கிலைத் துளையிட ‘நெலிகோலினைக் கொண்டே’ நெருப்பினைக் கடைகின்றனர். இதை இவர்கள் ஒரு சடங்காகவே நிகழ்த்துகின்றனர்.

நெருப்பினை ‘கிச்சு’ என்று அழைக்கும் இவர்கள் அதை ‘நெலிகோல்’ கொண்டு கடைந்து எடுப்பதை ‘கிச்சு கடுவது’ என்கின்றனர். ஒருசிலர் இதை ‘கோலு கடுவது’ என்றும் அழைப்பதுண்டு. அவர்களின் மரபுடையான ‘சீலெ’ எனும் மேற்போர்வையால் சுற்றி, காற்றுப் புகா வண்ணம் போர்த்தி, ‘அசிணிக்கெ உல்லு’ எனும் எளிதில் தீப்பற்றும் ஒருவகை மூலிகைப்புல்லின் காய்ந்த சிலவற்றை நெருக்கவைத்து அதில் நெருப்புப்படுமாறு ‘நெலிகோலினைக்’ கடைகின்றனர். பின்னர் அப்புல்லில் பற்றிய நெருப்பினை பயன்படுத்துகின்றனர். நெலிகோலினை இவர்கள் இடது கையால் தொடுவதில்லை. அதேபோல இதைக்கொண்டு நெருப்பினைக் கடையும்போது மற்றவர்களைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இன்றும் படகர்களின் மரபார்ந்த பல சடங்குகளுக்கான நெருப்பு இக்கோலினைக் கொண்டே கடைந்து எடுக்கப்படுகின்றது.

தம் முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளை ‘தொட்டமனெ’ என்று அழைக்கின்ற இவர்கள் அங்கு காலையில் ஏற்றும் நெருப்பினைப் பெரும்பாலும் அணையவிடுவதில்லை. அந்த வீட்டிலிருந்தே ஊரிலுள்ள மற்ற வீடுகளுக்கு நெருப்பு பகிரப்படும். நெருப்பின் அருமை மற்றும் மதிப்புக் கருதி அதன்மீது இத்தகு புனித நிலையை இவர்கள் கட்டமைத்துள்ளனர்.

ஒக்கலு இக்கோது

எருமை மந்தைப் பேணலோடு மலைப்புல வேளாண்மையினையும் ஆதியிலிருந்து மேற்கொண்டு வரும் படகர்களிடையே நிலவும் உறவு மற்றும் வேளாண்மைச் சார்ந்த சடங்கு இதுவாகும். காட்டெரிப்பு வேளாண்மையும் படகர்களிடம் வழக்கிலிருந்தது. ஒருவகையில் நீலகிரி மலைமேல் திணைப்புன வேளாண்மைக்கு வித்திட்டவர்கள் படகர்கள் எனலாம். மேலும், வேளாண்மையின்மூலம் கொண்ட விளைச்சலைக்கொண்டு சிறந்த பண்டமாற்றினை நீலகிரியில் கட்டமைத்தவர்களும் படகர்களே. தம்முடன் வாழ்ந்துவந்த குடிகளுக்கு தொழில் மற்றும் உணவியல் நிலையில் பெருந்துணை நல்கியவர்களாகவும் படகர்கள் திகழ்கின்றனர். இந்த மரபு இன்றும் படகர்களின் சடங்குகளில் தொடர்கின்றது.

‘ஒக்கலு’ என்ற சொல்லிற்கும் படகர்களுக்கும் உள்ள தொடர்பு சார்ந்து பெரும் தெளிவின்மை நிலவுகின்றது. ‘ஒக்கலு’ என்பதை தானியங்களைப் போர் அடிப்பது என்ற நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழ்கின்ற ஒக்கலிகர்களுடன் இணைத்து படகர்கள் கொள்ளப்படுவதுண்டு. ஆனால், அது தவறான புரிதலாகும். எருதுகளை கொண்டு தானியங்களை போர்அடிக்கும் தொழிலை மேற்கொண்டுவந்த ஒக்கலிகர்கள் படகர்களையும் நாடி வருவதுண்டு. பெரும்பாலும் தம் ஆநிரைகளைக் கொண்டே இச்செயலினை படகர்கள் மேற்கொண்டாலும் பெரும் நிலப்பரப்பில் வேளாண்மை செய்தவர்கள் ஒக்கலிகர்களின் உதவியை நாடினர். ஆனால், படகர்களிடம் வழக்கிலுள்ள ‘ஒக்கலு’ என்ற சொல்லின் பொருள் வேறு.

‘ஒக்கலு’ என்ற படுகுச் சொல்லிற்கு அவர்களின் பண்பாட்டுப்பொருள் இரத்த சொந்தமுடைய உறவு என்பதாகும். படகர்களின் முன்னோர்கள் குடிவாழ்க்கை வாழ்ந்த காலத்தில் சிறு கோட்டை எழுப்பி வாழ்ந்த மலைகளை அவர்கள் ‘ஒக்கலு பெட்டு’ என்று அழைக்கின்றனர். ‘பெட்டு’ என்ற படுகுச் சொல்லிற்கு மலை என்று பொருள். அந்த ‘ஒக்கலு பெட்டின்’ சரிவுகளில் படகர்கள் திணை பயிரிட்டுள்ளனர். பெரும்பாலான ‘ஒக்கலு பெட்டின்’ மேல் இவர்களின் முன்னோர்களின் கல்திட்டைகள் காணப்படுகின்றன. இவை பெருங்கற்காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம்.

தம் முன்னோர்களின் சமாதிகளாக விளங்கும் இக்கல்திட்டைகள் அவர்களின் மரபார்ந்த வழிபாட்டுத் தளமாகத் திகழ்கின்றன. அதேபோல, எல்லா ‘ஒக்கலு பெட்டிலும்’ சிறு சிறு கோட்டைகள் காணப்படுகின்றன. ஆண்டின் குறிப்பிட்ட நாளில் இந்த மலைமீது ஏறி வழிபடும் மரபினை படகர்கள் கொண்டுள்ளனர். இது இவர்களின் குடிவாழ்வின் எச்சமாக திகழ்ந்து வருகின்றது.

“ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே” (நற்றிணை – 125)

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள் - 43)

“ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்” (புறம் - 393)

“ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே” (புறநானூறு – 193)

போன்ற இலக்கிய வரிகளில் இடம்பெறும் ஒக்கல் எனும் சொல் படகர்களின் ‘ஒக்கலு’ என்ற சொல்லோடும் அதன் பொருளோடும் சரியாகப் பொருந்திப்போகின்றது.

தானியங்களைப் போர் அடிப்பதை ‘ஒக்கலு இக்கோது’ என்று அழைக்கும் படகர்கள் பங்காளிகள் அனைவரும் இணைந்து அறுவடை மேற்கொள்ளும் தம் மரபினை அடியொற்றி இப்பெயரினை இட்டுள்ளனர். அறுவடைக்கான செயல்பாடாக இருந்தாலும் இது அவர்தம் குடிவாழ்வின் நிலையைக் காட்டுகின்றது. இதை ஒக்கலிகர்களுடன் இணைத்தெண்ணுவது பெரும் தவறாகும். மேலும், பொருளற்ற ஒன்றாகும். இதற்கு வலுசேர்க்கும் விதமாக இவர்களிடம் ‘கம்புவா’ என்ற மரபுவழக்கொன்று உண்டு. அதாவது, அறுவடையின்போது நிலத்தார் ஊரிலுள்ள இல்லங்களுக்குச் சென்று அறுவடைக்கு அழைப்பார். அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு குறைந்தது ஒருவராவது இச்செயல்பாட்டில் பங்கேற்பார். அவருக்கான அன்றைய மதிய உணவை நிலத்தார் அளிப்பார். இதற்கென பங்கேற்பவர்கள் கூலியோ, தானியமோ பெறுவதில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவியாக இதை செயல்படுத்துகின்றனர். இதேபோல ஊரிலுள்ள அனைவரும் அறுவடையை மேற்கொள்கின்றனர். இந்தக் ‘கம்புவா’ என்ற வழக்கும் படகர்களின் குடிவாழ்விற்கான சிறந்த கூறாகும்.

‘ஒக்கலு பெட்டு’ ‘ஒக்க பெட்டு’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. ‘ஒக்க’ என்ற படுகுச் சொல்லிற்கு பக்கம் என்ற பொருளுமுண்டு. படகர்களின் ஒரு கால்வழியினரின் குறியீட்டுச் சின்னமாகத் திகழும் ‘அக்க பக்க’ எனும் அமைப்பில் ‘பக்க’ என்பது அருகருகே இருக்கும் ஊர்களையும் இடங்களையும் குறிக்கும். அவ்வகையில் ‘ஒக்க’ எனும் படுகுச் சொல் குறிக்கும் ‘பக்க’ என்ற சொல்லும் ஒருகால் வழியினரைக் குறிக்கும் அவர்களின் குழுஉக்குறியாக கொள்ளலாம். அதேநிலையில், சுற்றத்தையும் குறிக்கவும் ‘ஒக்க’ என்ற சொல்லினைப்; பயன்படுத்துகின்றனர்.

“ஒக்கலு மக்கக ஒம்பத்து பரே” (ஒக்கலு – பங்காளி மற்றும் சுற்றம், மக்கக – மக்களுக்கு, ஒம்பத்து – ஒன்பது, பரே – விதி) எனும் படர்களின் முதுமொழியொன்று இவர்களின் வாழ்வியலோடு பிணைந்தது. அதாவது மலைப்புல வேளாண்மையோடு பெரிதும் தொடர்புடையது. ஒருசில நேரங்களில் மழைப் பொய்த்தும், ஒருசில நேரங்களில் மிகுந்தும் வேளாண்மையின் நிலையில்லாத தன்மையினை இம்முதுமொழி சுட்டுகின்றது. அதே நிலையில், இயற்கையால் நிகழும் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழலறத்தையும் இது சுட்டி நிற்கிறது. மேலும், உழைக்காமல் சுற்றத்தாரின் ஆதரவில் இருப்பவர்களைக் குறிக்க ‘ஒக்கினு இத்தே ஏக்கா’ என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துகின்றனர். ‘நீ ஏன் உன் தேவைக்கு சுற்றத்தாரை எதிர்நோக்கி உள்ளாய்?. சென்று உன் கடமையைச் செய். உனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள் என்ற இருத்தலியல் சிந்தனையையும் இம்முதுமொழி விளக்குகின்றது. இச்சொல்லின் பொருண்மை “இல்லோர் ஒக்கல் தலைவன்” (புறம் - 95) எனும் ஒளவையின் வரியோடு பொருந்தி நிற்பது நோக்கத்தக்கது. குடிவாழ்வில் நின்று எருமைப் பேணலையும், மலைப்புல வேளாண்மையையும் மேற்கொண்ட இவர்களின் ஆதி வாழ்வியலையும், இரத்த உறவுசார்ந்த வரையறையையும் குறிக்கும் ‘ஒக்கல்’ எனும் சொல் இவர்களின் சிறந்த பண்பாட்டுச் சொல்லாகும்.

தொல்தமிழோடு கூடிய நெருங்கிய உறவினை வெளிப்படுத்தும் படகர்களின் மேற்கண்ட சடங்கு சொற்கள் படுகு மொழியின் தொன்மையினையும், இச்சடங்கில் வாழ்கின்ற படகர்களின் பண்பாடும், மரபும் அவர்களின் தனி மற்றும் தொல்தன்மையினை விளக்குகின்றன. இதுபோன்று பல சடங்குகள் படகர்களிடம் உண்டு. ஒரு மொழியின் உயிர்ப்பு அதன் பயன்பாட்டில் என்ற நிலையில் இன்றும் நீளும், படகர்களின் மரபார்ந்த சடங்குளில் வாழ்கின்ற சங்கச்சொற்கள் அதன் உயிர்ப்பினையும் அச்சடங்கின் அளவீட்டுத் தொன்மையினையும் ஏந்தி நிற்கின்றன.

துணை நின்றவை

    சங்க இலக்கியம், கழகவெளியீடு, 2000.

    திருக்குறள், திருவள்ளுவர், கழகவெளியீடு, 2001.

3 . பண்பாட்டு மானுடவியல், சீ.பக்தவத்சலபாரதி, அடையாளம் வெளியீடு, 2019.

4. பொறங்காடு சீமை படகர்களின் மூலிகை மருத்துவம், கோ.சுனில்ஜோகி, ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2011.

5. நீலகிரி படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், கோ.சுனில்ஜோகி, முனைவர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015.


மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்