எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு)....எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. 'சி.ஆர்.கொப்பி' என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.

ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.

1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்

தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.

இந்நூல்களிலுள்ள படைப்புகள் சில ஏற்கனவே கனடாவில் வெளியான தாயகம் (பத்திரிகை, சஞ்சிகை), தேடல் (சஞ்சிகை) மற்றும் பதிவுகள் , திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் சில (எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு, எழுக அதிமானுடா போன்ற மேலும் சில கவிதைகள்) இக்குறிப்பேடுகளில் உள்ளவைதாம்.

அதுபோல் பாரதியார் பற்றிய கட்டுரைகள் சில 'தாயகம்' (கனடா) பத்திரிகை/சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. 'தேடல்' சஞ்சிகையில் வெளியான 'பாரதி ஒரு மார்க்சியவாதியா?; கட்டுரையும் இக்குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளிலொன்றுதான்.

இக்குறிப்பேடுகளிலுள்ள மேலும் சில அவ்வப்போது 'குறிப்பேட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளன. 'திண்ணை' இணைய இதழிலும் ஒரு சில வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். ஆனால் சரியாக ஞாபகமில்லை.

நூல் 1 (இயற்கையும்ம் மனிதனும்) தொகுதியில் நீண்ட கட்டுரைகள் இரண்டு உள்ளன.

ஒன்று: முதலாளித்துவவாதிகளும், கம்யூனிஸ்டுகளும், மதவாதிகளும், மனிதனும், அவனுடைய பிரச்சினைகளும், அவற்றிற்கான தீர்வும்;. இரண்டு அத்தியாயங்களையும், பத்து பக்கங்களையும் கொண்ட கட்டுரை. [ *இப்பொழுது எழுதியிருந்தால் மனிதன் போன்ற சொற்பதங்களைத்தவிர்த்திருப்பேன்.)

இரண்டு: மார்க்சியமும், இலங்கைத்தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு! [*இப்பொழுது எழுதியிருந்தால் சிறு ஆய்வு என்பதற்குப் பதில் 'சிற்றாய்வு' என்றெழுதியிருப்பேன். இருந்தாலும் சிறு ஆய்வு கருத்தினடிப்படையில் தவறானதல்ல. ]

இக்கட்டுரை நான்கு அத்தியாயங்களைக்கொண்ட பதினைந்து பக்கங்களைக்கொண்ட கட்டுரை.

அத்தியாயம் ஒன்று: கம்யூனிஸ்டுகளும், கடவுளும், மதவாதிகளும், பரிணாமமும்.
அத்தியாயம் இரண்டு: மார்க்சியமும் அதன் மீதான நாத்திகம், பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டுகளும்.
அத்தியாயம் மூன்று: மானுட வர்க்கப் பிரச்சினைகளும், அக உணர்வுகளும் பற்றியதொரு கற்பனாவாதம்.
அத்தியாயம் நான்கு: புரட்சிகளும், புரட்சிகர , எதிர்ப்புரட்சிகரச் சக்திகளும் (இலங்கைத்தமிழர் பிரச்சினையுட்பட)


எனது குறிப்பேட்டுப் பதிவுகள்......: ஒன்பது கவிதைகள்!

1. கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமெமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
இந்த மண்ணினை, இந்தக் காற்றினை,
இந்த வெளியினை, அடிவானினை,
இந்த எழில் மலர்களை, மரங்களை,
இந்தச் சூரியனை, இதன் ஒளியினை,
இவற்றையெல்லாம் நான்
மனப்பூர்வமாக நேசிக்கின்றேன்.

இதோ இங்கே வாழும் இந்த மானுடர்களை,
ஆபிரிக்கக் கறுப்பினத்தவர்களென்றாலென்ன
அமெரிக்க வெள்ளையரென்றாலென்ன,
அரபு முஸல்மானென்றாலென்ன,
ஆசிய தேசத்தவரென்றாலென்ன,
இவர்களையெல்லாம்,
இந்த மானுடர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
விரிந்த, பரந்த இப்பிரபஞ்சத்துக்
கோள்களை, கதிர்களை, பால் வீதிகளை,
ஆங்கு வாழும் தகைமைபெற்ற
உயிர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
இந்த உயிர்களிற்காகவே
இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை
விடுவிப்பதற்காகவே
என் நெஞ்சில் பொங்குமுணர்வுகளை
எழுத்தாக வடிக்கின்றேன்.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்1
5/3/1983

மே 29, 1983
2. கவிதை: கற்பனைப் பெண்ணே!

கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?
பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?
அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது. அங்குனக்கென்ன
வேலை.
கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?
தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.
சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.
ஒருபுறத்தே மாடமாளிகளைகளில் கூட கோபுரங்களில்
ஆணவத்தினெக்காளிப்பு தாண்டவமாடிடுகையில்
மறுபுறத்திலோ
காடுகளிலும் மேடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
'மரணத்துள் வாழு'மொரு நிலையிங்கேன்?
கற்பனைப் பெண்ணே! அடீ கற்பனைப்பெண்ணே!
நிஜங்களின் தரிசனம் உனக்குக் கிடைத்ததா?
ஏழ்மையிலவை தூங்கிக் கிடக்கின்றனவே. உனக்குத்
தெரிந்ததா?
புரிந்து கொண்டால் அறிந்து தெரிந்து கொண்டால்.. வாடி! வா!
இக்கவிதன் மடியில் நெஞ்சில் உனக்கு
நிறையவே இடமுண்டு. வாடி! வா!
- மே 29, 1983 -

3. கவிதை: பொறியின் கதை!

சிறு வித்தொன்றிலிருந்தொரு பெருவாலமரமும்
செழித்திலை தளிர்த்து நிற்கும்.
உருவொன்றினளவிற்கும்
உள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறு பொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனையறியாரே
ஒருவேளை அவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
கருத்தொன்றின் பெருவீச்சில்
உருச்சிறுத்தேயுலர்ந்தொழிந்திட்டவரசுகளின்
வரலாறோ பலப்பல.
ஒரு சத்தியத்தின் ஒளிநாடி பறக்கின்ற பொறியெனிலோ
ஒருநாளில் பெரும் சுவாலையெனவேயொளி வீசிச் சுடர்ந்திடுமே!
அதனொளியில் சடசடத்துதிர்ந்துவிடும் அழுக்காறுச் சுவரெலாமே.
எரிந்து, பொசுங்கிச் சுவாலையெனவே ஆயிடுமே தீமையெலாம்.
உருவொன்றினளவிற்கு முள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறுபொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனை யறியாரே
ஒருவேளை யிவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
29/05/1983

நவம்பர் 10, 1982
4. கவிதை: கோழைகளோ நாம்!

முள்ளந்தண்டொடிந்த கோழைகளோ
நாமெலாம். பொய்மை
படர்ந்துளதே பொய்கைப்
பாசியென.
நெஞ்சத்துரமெலாம் வற்றியதே
கோடை நீரென.
ஐயகோ! கேடுகெட்ட வாழ்வு
வாழ்கின்றோமே பேடிகளாய்
நாமெல்லாம்.
எலும்பெல்லாம் நடுநடுங்கிக்
கிடந்திடுதே உக்கிய தண்டெனவே.
மானமிழந்து, மதிகெட்டு எம்வாழ்வெலாம்
பாழானதே பாலைகளாயிதுவரை.
துப்பாக்கிகள் கொணர்ந்து வரும்
சிப்பா(பே)ய்'களின் சிரிப்பொலியில்
நடுங்கிச் செத்திடுவமே நாணமற்ற
பாபிகளாய்.
எரிகிறதே நெஞ்செல்லாம்; கனன்றெறிகிறதே
ஓங்கிடும் காட்டுச் சுவாலையெனவே. செஞ்
சுவாலையின் தீக்கங்குகள் வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும். வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும்.
- நவம்பர் 10, 1982 -

5. சமர்ப்பணமொன்று........

இந்தச் சொல் மாலையை நானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏனெனில் என்னால் தற்சமயம் மட்டுமல்ல
இப்பிறவியிலேயே செய்யக் கூடியது இது ஒன்றுதான்.
சிலவற்றைச் சொல்லாமலிருக்க முடிவதில்லை.
இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான். இதயத்தின்
கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய நினைவு;.
உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாததொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில்.. இன்றோ
விடுபட முடியாததொரு நிலை. அது
உனக்கும் புரியும். எனக்கும் தெரிகின்றது.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில் அமைதி நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்கையில்
கூடவே ஒரு சோகமும் படர்வதை
என்னால் அறிய முடிகின்றது.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை...
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்...
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.
30-05-1983.

6. உண்மையின் வெம்மை!

அடியே! நீ ஏனடீ வீணாக என்னுடன்
ஊடிக் கொள்கிறாய்?
நானப்படி என்னதான் கூறிவிட்டேனென்று
நீயின்று கோவித்தாய்?
உண்மையத்தானே உரைத்தேன்.
உணமை சுடுமென்பார்களே.
உன்னையுமது சுட்டதோடீ!
கண்ணே! கலங்குமுன் கயல்களைத் துடையடீ!
கவலைகளுடலின் புல்லுருவிகளன்றோ.
கண்களைவெட்டிச் செவ்விதழ் போதையேற்றிக்
கார் கூந்தல் பரப்பி
அன்னமென ஆயிழையே! நீ
அசைந்து நடைபயின்று வந்தாய்.
செழித்தவுன் அழகுகளிற்கிடையில் அகப்பட்டு
அல்லலுறுமுந்தன் மெல்லிடை பார்த்ததும்
உரிமைகளிழந்துழலுமெம்மவர் நிலைதானெந்தன் சிந்தையில்
எழுந்தது. எடுத்துச் சொன்னேன். அது தப்பா?
உண்மையைத்தானே உரைத்தேன். உந்தன்
செவ்விதழ்கள், நாணிச் சிவக்கும் வதனம், இவையெலாம்
இரத்தம் சிந்திய எம்மக்களைத்தான் ஞாபகப்படுத்தின.
இதைத்தானே இயம்பினேனென் கண்மணீ! இது தப்பா?
நீ'
இழுத்த இழுப்புகளிற்கெல்லாம் திரும்புமுந்தன் விழிகள்
அடிவருடிப் பிழைக்கும் அற்பர்களைத்தானே உருவகித்தன.
அதையும்தான் சொன்னேன். அதுவும் தப்பா என்ன?
உண்மையெனறாலே அது சுடத்தானே செய்யுமடீ என்
உத்தமீ! உன்னையுமது சுட்டுவிட்டாலதற்கு நானென்ன செய்ய?
- 1981.

7. தாய்!

அந்தச் சிறு ஓலைக்குடிசை..
ஆழநடுக்காட்டின்
தனித்த , இருண்ட, வெறுமைகளில்
உறைந்து கிடக்கும்.
மரங்களில் மயில்கள்
மெல்ல அகவிச் செல்ல
மந்திகளின் தாவலால் தூரத்தே
மரம் முறியுமோசை
காதில் வந்து நுழையும்.
ஆனல் நீ மட்டும் வாசலில்
எந்நேரமும் காத்துக் கிடப்பாய்.
ஊர்மனைகளுக்குக் கூலிக்குப் போய்விட்ட
உந்தன் புதல்வனுக்காய்
வெறுமைகளுக்குள் நுழைந்து நிலைத்துவிட்ட
கண்களின் அசைவற்று...
சுருங்கிக் கிடக்கும் முகத்தில்
சோகம் குழம்பென அப்பிக் கிடக்க..
தனிமையில் காத்துக் கிடப்பாய்.
இருண்ட பின்னால் திரும்புமுன்
இளவலிற்காக நீ நாள்முழுக்கக்
காத்து நிற்பாயோ?
அம்மா!
அகமுடையானைக் கரம் பிடித்த
அந்த நாளில் நீ எத்தனை
கோட்டைகளைக் கட்டி வைத்தாய்?
அவையெலாம் இடிந்தனவோ?
என் பிரிய அம்மா!
புதல்வன் படித்துப் பட்டம் பெற்று...
நம்பிக்கைகளில் அம்மா
நீ சிலிர்த்துப் போயிருந்தாயோ?
உழைத்துருக்குலைவதற்கே உதித்த்
என்னருமை ஜீவன்களே!
ஒருகாலம் மெல்ல முகிழ்க்கும்.
தாயே! உன் பார்வையின் வெறுமைகள்
தீருமொரு நேரம் மெல்லவுதிக்கும்.
உழைப்பின் பயனை உணரும் ஒருவேளை
வந்து பிறக்கும். அம்மா!
அதுவரை என்னை மன்னித்துக்கொள்!

*வன்னியின் ஆழநடுக்காட்டில், நெடுங்கேணிக்கு அண்மையிலிருந்த நாவலர் பண்ணையில் குடியேறி வசித்து வந்த மலையகத்தைச் சேர்ந்த தாய் ஒருவரைச்சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. மேற்படி நாவலர் பண்ணை காந்தியம் அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வந்த மாதிரிப்பண்ணைகளிலொன்று.

8. விளக்கு!

காலக்கடலின் குமிழியென அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
'பொய்மையின் நிழல்படர்ந்து'
புழுங்குமுலகிலெல்லாமே நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின் காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே, விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும் சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே! அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ? கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ புரியவில்லை.
திணறலினில் மூச்சு முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்; விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.
23.2.1983.

மார்ச் 6, 1983.
9. கவிதை: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.
- மார்ச் 6, 1983.-


எனது குறிப்பேட்டுப் பதிவுகள்...: தனிமையும் நானும்!
13 நவம்பர் 1982

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு)....தனிமை! தனிமை! சிலவேளைகளில் மிகவும் கொடூரமாக விளங்குகின்ற போதிலும் தனிமைதான் எத்துணை இனிமையானது. தனிமையில் என் நெஞ்சம் சம்பவங்களை அசை போடுகிறது. அதன் விளைவுகள் புடமிட்ட சிந்தனைச் சிதறல்களாக வெளிப்படுகின்றன.
எங்கும் நீண்டு, பரந்து, ஓவென்று ஆர்ப்பரிக்கும் அலைகடலைப் பார்க்கையில் என் நெஞ்சினை இனம் புரியாத சோகமொன்று கவ்விச் செல்லும். தனிமையில் மூழ்கி நிற்கும் கடல் ஒரு துணையை நாடிச் சோகப் பண்ணிசைத்திடுமொரு பெண்ணாகத்தான் எனக்குத் தெரியும். நீண்டு பரந்து கிடக்கும் கடல் நங்கையினை மாலைகளில் பார்த்துக் கொண்டிருப்பதென்றால் அ·து போன்றதொரு ஆறுதல் வேறேது?

இதுபோல்தான் கானகச் சூழலும் என்னைக் கவர்ந்திழுத்து விடும். தனிமைகளில் ஏதோ சோகமொன்றின் கனம் தாங்கமாட்டாத தோழர்களைப் போன்று விருட்சங்கள் ஏதோ ஒருவித அமைதியில் மூழ்கிக் கிடக்கும் நிலை; இடையிடையே துள்ளிப்பாயும் மர
அணில்கள்; சிட்டுக்கள்; அகவும் மயில்கள்; காட்டுப் புறாக்கள். ஓ! தனிமைகளில் கானகச் சூழல்களில் என்னையே நான் மறந்து விடுவேன்.

இரவுகளின் இருண்ட தனிமைகளில், தூரத்தே சோகத்தால் சுடர்கன்னிகளை நோக்குகையில் நெஞ்சினில் பொங்குமுணர்வுகள்...தனிமைகள் என்னைத் தகித்து விடுகின்றன. தவிப்படையச் செய்து விடுகின்றன. சிந்தனைச் சிட்டுக்களைக் கூண்டிலிருந்து விடுவித்து விடுகின்றன. சோகத்தின் பாதிப்புகளால் நெஞ்சினைப் புடம்போட்டு விடுகின்றன. தனிமைகள் தான் என்னை எழுத்தாளனாக்கி வைத்தன. இயற்கையின் ஒவ்வொரு மூலையிலும், துளியிலும் மறைந்து கிடக்கும், பொதிந்து கிடக்கும் மிக மெல்லிய உணர்வுகளைக் கூட உணர்ந்து விடும்படியான வல்லமையினைத் தனிமைகள் தானெனக்குத் தந்து விடுகின்றன.

தனிமைத் தோழர்களை நான் போற்றுகின்றேன். தனிமைத் தேவியரை நான் மனதார நேசிக்கின்றேன். காதலிக்கின்றேன். தனிமைத் தத்துவ வித்தகர்களை நான் தொழுகின்றேன். துதிக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.

தனித்திருக்கும், இருண்ட இந்த இரவுகள்....
கறுத்து வானை வெறித்து நிற்கும்
கடற்பரப்புகள்...
தனிமைத் தவமியற்றும் கானகத்து
விருட்சங்கள்...
ஓ1 இவ்வுலகம்தான் எத்துணை
இனியது! எத்துணை
எழில் வாய்ந்தது!
இன்பம்! இன்பம்! இன்பம்!
எல்லாமே இன்பம்! இன்பம்! இன்பம்!

- 13 நவம்பர் 1982 -


 

எனது குறிப்பேட்டுப்புத்தகத்திலிருந்து (- 29 யூன் 1983) .....: ருஷ்யக் கவிஞர் புஷ்கினின் காதல் கவிதையொன்று. - தமிழில்: வ.ந.கிரிதரன் -

ருஷ்யக் கவிஞர் புஷ்கின்ருஷ்யக் கவிஞரான புஷ்கினின் கவிதையொன்றின் மொழிபெயர்ப்பிது. இக்கவிதையின் தலைப்பினை எழுத மறந்து விட்டேன். தேடித்தான் பார்க்க வேண்டும். மூலக் கவிதையின் ஆங்கில வடிவத்தினைக் குறிப்பேட்டில் பதிவு செய்ய மறந்து விட்டதால் , தற்போது என்னிடம் இல்லை. மூலம் கிடைத்தால் மீண்டுமொருமுறை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இம்மொழிபெயர்ப்பு எழுதப்பட்ட நாள்: 29 ஜூன் 1983. இருந்தாலும் ஒரு பதிவுக்காக இங்கே.

- இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. புஷ்கினின் கவிதையினை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன். -

நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்... இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதகத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்.

- 29 யூன் 1983


எண்பதுகளில் எழுதிய எனது குறிப்பேட்டுப்பதிவுகளிலிருந்து.....

15 ஆகஸ்ட் 1982; ஒரு தீர்ப்பும் தமிழர் போராட்டமும்!

குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை கைது...தென்னாபிரிக்காவின் இனவெறி பிடித்த அரசாங்கத்தின் கொடுமையான சட்டங்களிற்கு நிகரான சட்டமென சர்வதேச ஜூரிமாரால் கண்டிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு சாதாரண குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சிவநேசனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த குட்டிமணி (யோகச்சந்திரன்), ஜெகன், கறுப்பன் ஆகிய எதிரிகளில் முதலிருவர்களையும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தியூடர் டீ அல்விஸ் அவர்களிற்கு குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின்படி மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். விந்தையான தீர்ப்பு! ஆயுதப் படைகளின் தடுப்புக் காவலில் பெறப்பட்ட எதிரிகளின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொண்டு ஜூரிகளற்ற நீதிமன்றத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு நீதியினையே அவமதிப்பதாகவிருக்கின்றது. எதிரிகள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிற்கு வரமுன்னர் நிகழ்ந்துள்ளதால் தான் சட்டரீதியாக இத்தகைய தீர்ப்பினை வழங்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் நீதிபதி கூறுவது எதைக் காட்டுகிறது. நீதிபதியே தனது தீர்ப்பைப்பற்றி வருந்துவதாகக் கூறுகிறாரென்றால், நிலவும் சட்டத்தின் தன்மையினை, 'தர்மிஷ்ட்ட' அரசு எனக் கூறிக் கொள்ளும் அரசின் தம்மிஷ்ட்ட சட்டங்களின் தன்மைகளை யாவரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்தத் தீர்ப்பினை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட குட்டிமணியும், ஜெகனும் 'தங்களிற்குக் கருணையேதும் தேவையில்லையெனவும்', 'தங்களைத் தமிழ் மண்ணிலேயே தூக்கிலிடும்படியும், தங்கள் உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கும்படியும், கண்களைப் பார்வையற்ற தமிழனொருவனுக்குக் கொடுக்கும்படியும்' கூறியிருப்பது அவர்களது மனத்திண்மையையும் இலட்சியப் போக்கினையும் காட்டி நிற்கின்றது.

"என்னைப் போல் தமிழ் இளைஞர்கள் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். அந்த அப்பாவித் தமிழ் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மரணதண்டனைக்கு இலக்காவார்கள். ... நீதிபதி எனக்களித்த தீர்ப்பின் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தினையும், உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளார். என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் தமிழ் ஈழத்தில் உருவாவார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தமிழ் ஈழத்தின் தீரமிக்க வீரர்களாகவேயிருப்பார்கள்" (ஆதாரம்: 14-08-1982 வீரகேசரி).

குட்டிமணியின் இந்த இறுதி வாசகங்கள் அடக்குமுறைகளிற்காட்பட்டு வாடும் தமிழ் மக்களிடையே நிச்சயம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும். விடுதலைக்கான போராட்டத்தினை அவை நிச்சயம் விரைவு படுத்தியே தீரும்.
- 15 ஆகஸ்ட் 1982 -

['குறிப்பேட்டுப் பதிவுகள்' தொடரும்]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்