எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார் என்னும் செய்தி எதிர்பாராதது. இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதை, கட்டுரை (பத்தி எழுத்துகள், பயணக் கட்டுரைகளுட்பட) ,இதழியல் (ஞானம் சஞ்சிகை), பதிப்புத்துறை (ஞானம் சஞ்சிகையின் சார்பில் பல நூல்கள் வெளியாகியுள்ளன) என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது.
புதிய சுவடுகள், குருதி மலை ஆகியவை இலங்கை அரசின் சாகித்திய விருதினையும், லயத்துச் சிறைகள் மத்திய மாகாண அமைச்சின் சாகித்திய விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'ஞானம்' சஞ்சிகை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய சஞ்சிகை. பலருக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகை. அது வெளியிட்ட போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் உட்பட, எழுத்தாள ஆளுமைகள் சிலரின் சிறப்பிதழ்கள் முக்கியமானவை.
ஞானசேகரன் அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லாது விடினும், அவர் டொரோண்டோ வந்திருந்தபோது சந்தித்து உரையாடியிருக்கின்றேன். எனது சிறுகதையொன்றைப் புலம்பெயர் சிறப்பிதழிலும், குறுநாவலொன்றை ஞானம் சஞ்சிகையிலும் வெளியிட்டுள்ளார். அவற்றை நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.
அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பதிவுகள் இணைய இதழின் ஆழ்ந்த இரங்கல்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









