'பொன்னியின் செல்வன்' பற்றியதொரு முகநூற் பதிவும் , அதற்கான எதிர்வினைகளும்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் 'தாயகம்' ஜோர்ஜ்.இ.குருஷேவ் 'பொன்னியின் செல்வன்' நாவலைப்பற்றி முகநூற் பதிவொன்று இட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "பொன்னியின் செல்வன் வாசிக்கவேயில்லை என்ற விசயத்தை வெளியில சொன்னா... கேவலமா பாப்பாங்களா!? பிரெண்ட்ஸ்!"
அதற்கு எதிர்வினையாற்றியிருந்த எழுத்தாளர் அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பின்வருமாறு தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்: "பலர் புளுகினாற்போல் அது திறமானதென்றில்லை. நான் கல்கிப்பிரியனல்லன். என்னிடம் 'பொன்னியின் செல்வன்' இருந்தது. கடைசி வரைக்கும் வாசித்து முடிக்கவில்லை."
இவர்கள் இருவரும் தம் வாசிப்பின் பரிணாம வளர்ச்சிப் படிக்கட்டிலொன்றில் அனுபவித்திருக்க வேண்டிய இன்பத்தை இழந்து விட்டார்கள். இவர்கள் பொன்னியின் செல்வனை வாசித்திருக்க வேண்டியது அவர்களது வாசிப்பின் ஆரம்ப காலத்தில். அப்பொழுதுதான் அதன் அருமை புரிந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் அம்புலிமாமாக் கதைகளை வாசித்து இன்புற்றோம். அடுத்த எம் வாசிப்புப் படியில் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை வாசித்தோம்.. அக்காலகட்டத்தைத் தவற விட்டு வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையில் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினால் அதனை ஒருபோதுமே இரசிக்க முடியாது. அதனைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். அதனால்தான் பொன்னியின் செல்வனை இவர்களால் இரசிக்க முடியவில்லை. நான் இப்போது பொன்னியின் செல்வனை வாசித்தாலும் எனக்கு அதனை முதன் முதலில் வாசித்தபோது அடைந்த இன்பமும், ஆர்வமும் ஏற்படாது. ஆனால் அது இப்பொழுதும் மகிழ்ச்சியைத் தருவதற்குக் காரணம் பால்ய , பதின்மப் பருவங்களில் வாசிப்பின்போது அது தந்த இன்பம்தான். அவ்வின்பமும், அவ்வாசிப்பனுபவமுமே இன்று எம் உணர்வுகளில் அதனைப்பற்றி எண்ணியதும் எழுகின்றன. ஆனால் ஒருபோதுமே இன்று என்னை வாசிப்பில் ஒன்றிவிடச் செய்யும் படைப்புகளான 'தத்யயேவ்ஸ்கியின்' 'குற்றமும், தண்டனையும்'. 'அசடன்', 'க்ரமசாவ் சகோதரர்கள்', 'டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' , 'போரும் அமைதியும்' போன்ற நாவல்களை என்னால் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் இரசித்து வாசித்திருக்கவே முடியாது. அதற்குரிய மானுட அனுபவமும், அறிவும் அப்போது எனக்கில்லை.