வேகமான எழுத்துக்கும் சிந்தனைக்கும் உரித்தான மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம்..! - வி. ரி. இளங்கோவன் -
[மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் பற்றிய எழத்தாளர் வி.ரி.இளங்கோவனின் கட்டுரை. பாரிஸில் மே 25, 2025 அன்று அமுத விழா காணவிருக்கும் காசிலிங்கம் அவர்கள் என் எழுத்துலக வாழ்க்கையிலும் முக்கியமானவர், ஈழநாடு மாணவர் மலர் மூலம் என் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் அவர். காசி என்னும் பெயரில் அப்போது ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் மாணவர் மலருக்குப் பொறுப்பாகவிருந்தவர் அவர். என் முதல் ஆக்கத்தை வரவேற்று வாழ்த்தியவர். அதுவே , அந்த ஊக்கமே அவ்வயதில் என்னை மேலும் எழுத்ததூண்டியது. அவருக்கு அமுதவிழா. அனைவருடனும் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள். -]
அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு அறிவுலகத்தில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தது. கருத்துப் பரவலுக்கு நூல்கள் - பத்திரிகைகள் முதன்மைக் கருவிகளாயின. ஈழத்தி;ல் அமெரிக்க மிசனரிமார் முதன்முதலாக 1841 -ல் (07 - 01 - 1841) 'உதயதாரகை" (Morning Star) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இது வெளிவந்தது. இதன் ஆசிரியராகக் கரோல் விசுவநாதபிள்ளை விளங்கினார் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1930 -ல் 'யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின்" பகிஸ்கரிப்புக் கோரிக்கைக்கு வலுவூட்டும் அரசியல் கருத்துகளுடன் 'ஈழகேசரி" வெளிவந்ததாக கூறுவதுண்டு. ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வளர்ச்சியில் மிகக் கவனம் செலுத்திய ஈழகேசரி இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியமான ஆரம்பத்திற்குத் தளமாக ஈழகேசரி அமைந்து படைப்பாளிகளை இனங்காண வைத்தது என்றால் மிகையல்ல.
நாளேடுகளாக 1930 -ல் வீரகேசரியும் 1932 -ல் தினகரனும் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கின. வேறு சில நாளேடுகளும் வெளிவரத்தொடங்கி சிறிது காலத்திலேயே அவை நிறுத்தப்பட்டுவிட்டன.