ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்! -சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
357,386 கி.மீற்றர் பரப்பளவுள்ள ஒரு நாடு ஜெர்மனி. இது இரும்பைக் கொண்டு உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பூமி என்று அழைக்கப்படக் கூடிய நாடு. அதன் முக்கிய வளமே இரும்புதான். இங்கு 83.02 மில்லியன் மக்கள் வாழுகின்றார்கள். வடக்கே வட கடலும், டென்மார்க்கும், கிழக்கே போலந்து, தெற்கே ஆஸ்திரியா, சுவிற்ஸலாந்து, மேற்கே பிரான்ஸ் லக்ஸம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளன. 16 மாநிலங்களைக் கொண்ட ஒரு குடியரசு நாடாகும். இங்குள்ள மக்கள் ஜெர்மனிய மொழி பேசுகின்றார்கள்.
இலங்கை மண்ணில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றம் ஒரு வகையில் மக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்திருக்கின்றது, அவர்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது, ஏற்றத்தாழ்வுகளை மாற்றியும் அமைத்திருக்கின்றது, கல்வியறிவில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றைவிட கலாசார மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போரின் தாக்கம் பாதிக்கப்பட்ட மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதனால் பின்விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
தாய்நாட்டில் வாழ்ந்த மக்கள் போரின் காரணத்தினால், உடைமைகளை இழந்து வெறும் கையுடன் புலம்பெயர்ந்த நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்த சொத்து மதிப்பு 10 விரல்களும், நம்பிக்கை என்னும் உயரிய ஆயதமும் மட்டுமே. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் கற்றவர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கொழும்பு விமானநிலையத்தை முதல் தடவையாகப் பார்த்தவர்களும், வீட்டை விட்டு வெளியே போகாமல் குடும்பம், பிள்ளை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டு வாழ்ந்த எத்தனையோ தாய்மார்களும் இவர்களுக்குள் அடங்குகின்றார்கள்.