என் நினைவில் நிலைத்து நிற்கும் கவிஞர் மஹாகவியின் கவிதை வரிகள்! - வ.ந.கிரிதரன் -
கவிஞர் மஹாகவியின் நினைவு தினம் ஜூன் 20. அதனையொட்டிய நினைவுக்குறிப்புகளிவை!
யாழ்ப்பாணம் பற்றி எத்தனையோ கவிஞர்கள் கவிதைகள் பல இயற்றியிருக்கின்றார்கள். ஆனால் கவிஞர் மஹாகவியின் 'யாழ்ப்பாணம்' பற்றிய வரிகளைப்போல் இதுவரை வேறெவரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அவ்வரிகளைக் கீழே தருகின்றேன். இவ்வரிகள் அவரது புகழ் பெற்ற காப்பியமான 'கண்மணியாள் காதை'யில் இடம் பெற்றுள்ளன.
"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!
"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!
"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உயர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!"