நோர்வேப் பயணத்தொடர் (2): சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே! - ஶ்ரீரஞ்சனி -
- நள்ளிரவிலும் சூரியன் துயிலாத நாடு எனப் பெயர்பெற்ற நோர்வே -
நோர்வே பற்றிய எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்தபடி, அந்த நாடு தொடர்பான எங்களின் தனிப்பட்ட சரித்திரத்தை மீளவும் மீட்டிக்கொண்டு டென்மார்க் ஊடான எங்களின் நோர்வே பயணத்தை சங்கியும் நானும் ஆரம்பித்தோம்.
ரொறன்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே Copenhagen விமானநிலையத்தைச் சென்றடைந்தது. Stavangerக்கான எங்களின் விமானத்துக்கு ஐந்து மணி நேரக் காத்திருப்பு இருந்தமையால், ஏற்கனவே திட்டமிருந்தபடி, Copenhagen நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு அந்தக் காலை நேரத்தைப் (அது ரொறன்ரோவின் நடு இரவாக இருந்தபோதும்) பயன்படுத்தினோம். விமானநிலையத்திலிருந்து நகருக்குச் ரெயினில் செல்ல 20 நிமிடங்களே தேவையாகவிருந்தன.
நகரைச் சுற்றி நடந்தபோது, மேடும் பள்ளமுமாக இருந்த சமச்சீரற்ற நிலத்தில் மிகவும் இயல்பாக நிரைநிரையாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம்செய்தோரே எங்களின் கவனத்தை முதலில் ஈர்த்தனர். அதைப் பார்த்தபோது மிகுந்த வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்கிருந்த கட்டடங்களும் பல்வேறு வண்ணங்களில் கண்களுக்கு விருந்தாயிருந்தன என்றால் சடைத்திருந்த பெருமரங்களும் அவற்றில் கீழ் நிறைந்திருந்த நிழலும் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த இதத்தைத் தந்தன. இப்படியாக இயற்கையையும் செயற்கையையும் ரசித்தபடி அங்கிருந்த உயர்ந்த மரங்களின் நிழலிருந்த வாங்குகளில் அமர்ந்து, அருகிலிருந்த bakery இல் வாங்கிய danish pastryகளைச் சாப்பிட்டோம். ரொறன்ரோவில் விற்கப்படும் danish pastryஐவிட, அது அதிக ருசியாக இருக்கிறதென்றா சங்கி. எனக்கோ கறுவாத் தூள் வாசத்துடன் இருந்த அந்தப் pastry அமிர்தமாக இருந்தது.