கனடாவில் நடைபெற்ற எழுத்தாளர் கோமகன் நினைவு கூரலும், நடு 50 இதழின் வெளியீட்டு நிகழ்வும்! - வ.ந.கிரிதரன் -
இன்று 3600 கிங்ஸ்டன் 'றோட்'டில் அமைந்துள்ள ஸ்கார்பரொ சமூக நிலையத்தில் நடு இணைய இதழாசிரியரும், எழுத்தாளருமான கோமகனின் நினைவு கூரல் நிகழ்வும், நடு 50 இணைய இதழ் வெளியீடும் நடைபெற்றது. நேரிலும் ZOOM செயலி மூலமும் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் , பதிவுகள் இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வு அமரர் கோமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது.
முதலில் வ.ந.கிரிதரன் கோமகனுடனான தனது அனுபவங்களையும், அவரது பன்முகப்பட்ட ஆளுமைகளைப்பற்றியும் , அவரது இலட்சியக் கனவான நடு இதழ் .அதன் எதிர்காலம் பற்றிய அவரது எண்ணங்களையும் குறிப்பிட்டு, நடு 50 இதழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். நடு 50 இதழானது சிறந்த வடிவமைப்பில் மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகள், போர், சீதனப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு, காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியற் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றைப் பேசுமொரு காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது என்று கூறியதுடன் , நடு இதழில் வெளியான படைப்புகள் சிலவற்றைப்பற்றிய தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார்.
அடுத்துப் பேசிய 'காலம்' இதழின் ஆசிரியரும், சிறந்த புனைகதை ஆசிரியருமான செல்வம் அவர்கள் பாரிசில் தான் சந்தித்த கோமகனுடான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் புலம்பெயர் இலக்கியமென்பது அக்காலகட்டத்து மக்களின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. அவ்விலக்கியத்தில் கோமகனின் பங்களிப்பு முக்கியம் மிக்கது என்னும் கருத்துப்பட தன் கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் நடு இணைய இதழ் மூலம் பல்வேறு கருத்துகளைக்கொண்ட படைப்பாளிகளையெல்லாம் அரவணைத்துச் சென்றார். புதிய படைப்பாளிகள் பலரை (ஓவியர்கள் உட்பட) அறிமுகப்படுத்தியது அது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.