கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.
கீழடி அகழாய்வில் 5000 திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சங்க கால மக்களின் வாழ்வில் பண்பாட்டை வெளிக்கொணர்வதாக இருக்கின்றன. அவை செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், கூரை ஓடுகள், அணிகலன்கள், இரும்புக் கருவி பாகங்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி, செம்பு பொருட்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், மட்பாண்ட ஓடுகள், ரெளலட்டட் மட்பாண்டங்கள், அரட்டைன் ஓடுகள், தமிழி என்றழைக்கப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்கல துண்டுகள், கீறல்கள், குறியீடுகள், வடிவங்கள் போன்றவையாகும்.
இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் தொடக்க வரலாற்றுக் காலக் கணிப்பில் பல மாற்றங்களும் புதிய அவதானிப்புகளும் ஏற்பட்டுள்ளன. கீழடியில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாய்வு முடிவுகள் கீழடி மக்கள் பண்பாட்டின் காலம் கி.மு 6 முதல் கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நகரமயமாதல் ஏற்படவில்லை என்ற கருத்தை மறுக்கும் விதமாகக் கீழடிச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் தமிழ் பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு.5 என்ற காலக்கணிப்பு கீழடி மூலம் கி.மு.6 என்று மாற்றமடைந்துள்ளது.