மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (1) - எல்.ஜோதிகுமார் -
- இளைஞன் எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை - ... டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiiah) -
- 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே' - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் எழுத்தாளர் சக்தீ அ. பால ஐயா (சக்தீ அ.பாலையா) அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு பாக்கியா பதிப்பகத்தால் இரு பதிப்புகள் 1956, 2007 இல் வெளியிடப்பட்டன. மேலுமொரு பதிப்பு செய்தி பதிப்பகத்தால் 1969இல் வெளியிடப்பட்டது. -
முன்னுரை:
“அமர காவியம் இது” என ஆர்ப்பரித்து மொழிப்பெயர்த்துள்ள சக்தீ பாலையா கூறுவார்: ‘நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்ப்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள்’ (மேற்கோள்:திலகர்:சூரியகாந்தி:25.12.2023).
இக்கூற்றில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்றாலும் திரு.சக்தீ பாலையா அவர்களே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.
கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரில் இருந்து சற்றே மாறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாய் இருக்கக்கூடும்.
1952இல், மலையக மக்களின் வாக்குரிமை பறிபட்டமைக்கு எதிராக, காங்கிரஸ், பிரதம மந்திரியின் அலுவலக வாயிற்படியில், காந்திய மோஸ்தாரில் ஒரு சத்தியாகிரகத்தை நடத்தியிருந்தது. கிட்டத்தட்ட 798,000 தொழிலாளர்களை அன்று கொண்டிருந்த மலையகம் இக் கொடுஞ்செயலுக்கு எதிராக, ஏன் வேலை நிறுத்தங்களில் இறக்கப்படவில்லை என்ற கேள்வி முக்கியமானதொன்று. வெறும் 6000 தொழிலாளர்களை மாத்திரமே, வேலை நிறுத்தம் அல்லாமல், வெறும் சத்தியாகிரகம் என்ற பெயரில் பங்குபற்ற செய்தமை ஒரு வரலாற்று கேள்வியாகின்றது.