கூவாமல் கூவும் கோகிலம்: கலைஞர் போட்ட தவறான கணக்கால் வாழ்விழந்த மு.க.முத்து! - குயில் -
எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு.
மு.க.முத்துவின் மீது இன்னுமொரு விதத்திலும் எனக்கு அவர் மீது அனுதாபமுண்டு. அவரது தாயான கலைஞரின் முதல் மனைவியும், பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே காச நோய் காரணமாக இறந்தபோது அவருக்கு வயது 20. குழந்தையிலேயே தாயன்பை இழந்து வளர்ந்தவர் மு.க.முத்து. குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை அவரது தந்தையின் செயற்பாடுகளாலேயே முடிவுக்கு வந்தது. இவ்விதமான வாழ்க்கைப் போராட்டங்களே பின்னர் மு.க.முத்துவின் வாழ்வின் சீரழிவுக்கும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டுமென்றே தெரிகின்றது.