அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்விக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - முருகபூபதி -
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 10 ஆம் திகதி, சிட்னியில் நடத்திய 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் , படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால இலக்கியச்சேவையை பாராட்டி வழங்கப்பட்ட சாதனையாளர் விருது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பாராட்டுரை. இவ்வுரையை சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் தற்போதைய துணை நிதிச்செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நிகழ்த்தினார். சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனின் தலைமையில் நடந்த எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் லிஸா லேக் அவர்கள் தாமரைச்செல்விக்கான விருதினை வழங்கினார்.
திருமதி. ரதிதேவி கந்தசாமி என்ற இயற்பெரைக்கொண்டிருப்பவரும், அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தற்போது வதிபவருமான படைப்பிலக்கியவாதி , நீண்ட காலமாக தாமரைச்செல்வி என்னும் புனைபெயரில் படைப்பிலக்கிய பிரதிகளை எழுதிவருகின்றார். அங்கயற்கண்ணி, கானா மணிவண்ணன், வெண்ணிலா சூரியகுமாரன், இந்துமதி முதலான புனைபெயர்களுக்கும் இவர் சொந்தக்காரர்.