எழுத்தாளர் அகணியின் 'இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு', 'கட்டுரைச் சாரல்' மற்றும் 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' நூல்களைப்பற்றிய சிந்தனைகள். - வ.ந.கிரிதரன் -
எனக்குப் பொதுவாக அதிகம் வாசிப்பவர்களை, அதிகமாக எழுதுபவர்களை. அதிகமாகத் தம் தர்க்கரீதியிலான சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்களைப் பிடிக்கும், அவர்கள்தம் கருத்துகள் முரண்பட்டவைகளாக இருந்தால் கூட அவர்கள் தமக்குச் சரியென்று பட்டதைத் தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென்பதற்காக இயங்குபவர்கள் என்பதால் நான் அவர்களை மதிப்பவன். எழுத்தாளர் அகணி சுரேஷ் (சி.அ.சுரேஷ்) அத்தகையவர்களில் ஒருவராக நான் அடையாளம் காண்பவன்.
பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் ஐக்கிய இராச்சியத்தில் கணனித் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். தற்போது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தலைவராகவும் இருந்து வருபவர். இவரது எழுத்துலகப் பங்களிப்பு கவிதை (மரப்புக்கவிதையுட்பட), சிறுகதை, நாவல், கட்டுரை (அறிவியல், ஆன்மிகம், இலக்கியம்) , இசைப்பாடல் எனப் பன்முகப்பட்டது. சிறந்த பேச்சாளர். இவரது கரகரத்த குரல் கேட்பதற்கு இனிமையானது. தமிழகத்துத் திமுகப் பேச்சாளர்களை நினைவூட்டுவது.