கணினித் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும், தீர்வுகளும்! - பி.ஆர்.இலட்சுமி.,(முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) -
-* இக்கட்டுரையை எழுதியவர்: - பி.ஆர்.இலட்சுமி , (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்), பி.லிட்.,எம்.ஏ , (தமிழ்,மொழியியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத்துறை ) எம்ஃபில் , பிஎச்.டி.,டிசிஎஃப்இ , புலவர் , பிஜிடிசிஏ , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -
ஆய்வுச் சுருக்கம்
கணினி உருவானபோது தமிழ்க் கணினிக்கான ஏற்பாடுகளும் 1980களில் தொடங்கப்பட்டு வந்துள்ளன. முதன்முதலில் தமிழை இணையத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி.1995 அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.பாலாபிள்ளை மடலாடுதலின் வழி இணையத் தமிழ் வளரும் என்ற நோக்கில் தமிழ்.நெட் என்ற இணையத் தளத்தை உருவாக்கினார். தமிழர்கள் மொழிப் புலமைக்காக இணையத்தில் தமக்குத் தெரிந்த செய்திகளைத் திரட்டி எழுதி வருகின்றனர்.(வலைப்பூக்கள்)
காரணம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ,இந்தியா என கூகுள் பிரித்து வைத்து இணையத்தில் கொணர்ந்துள்ளது. இதனால், தமிழ் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கம் மிகுந்துள்ளது. பழமை மிகுந்த தமிழ்நாடு குமரிக்கண்டத்திலிருந்து அழிந்து உயிர்த்தெழுந்த நாடு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு நாட்டினரிடையேயும் அவர்கள் பேசி வரும் தமிழ்தான் பழமையானது என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இதனால் சிக்கல்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதற்கான தீர்வுகள் இக்கட்டுரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.