எழுத்தாளர் கோமகனுடனுடனோர் 'உட்பெட்டி' உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.
எப்பொழுதும் ஏதாவது ஆக்கமொன்று தேவையென்றால் 'வணக்கம் கிரிதரன், உங்களால் எனக்கு ஓர் உதவி வேண்டும் .' என்று உட்பெட்டியில் தகவல் அனுப்புவார். ஆனால் அவ்விதமான தகவல்கள் அவரிடமிருந்து இனி வரபோவதில்லை என்பது துயர் தருவது.
'நடு' இதழ் வெளியானபோது அதற்கான படைப்புகளை அவர் எழுத்தாளர்களை அணுகிப் பெற்று வெளியிட்டார். பின்னர் அது முக்கிய இதழாக நன்கறியப்பட்டதும் அதற்கான தேவை இருந்திருக்காது. பலரும் படைப்புகளைத் தாமே விரும்பி அனுப்பியிருப்பார்கள். 'நடு' இதழ் மீது அவர் காட்டிய ஆர்வத்தை, அதை வெளியிடுவதில் அவர் கொடுத்த உழைப்பினை இவ்வுரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அதனால் இலக்கியப் பெறுமதி மிக்கவை.