எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'தாகம்' நாவல் மற்றும் அவர் பற்றிய சிந்தனைகள் ! - வ.ந.கிரிதரன் -
- ஜீவநதி சஞ்சிகையின் எழுத்தாளர் தாமரைச்செல்வி சிறப்பிதழில் வெளியான கட்டுரை. -எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
தாமரைச்செல்வி அவர்களின் ஓவியங்கள் பற்றி நினைவு கூர்கையில் இன்னுமொரு நினைவும் தோன்றுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்த என் அக்கா முறையிலான உறவுக்காரரான மீனா நகுலன் (அவரும் ஓர் ஓவியர்) தாமரைச்செல்வியைப்பற்றியும், அவரது சகோதரியைப்பற்றியும் கூறியது நினைவுக்கு வருவதுண்டு. தாமரைச்செல்வியின் சகோதரி அப்பொழுது யாழ் இந்து மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அவரும் தாமரைச்செல்விபோல் ஓவியர். எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சகோதரியும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படிப்பதாகவும், அவர் சிறந்த ஓவியரென்றும் மீனா நகுலன் அவர்கள் கூறுவதுண்டு. மீனா நகுலன் தன் இறுதிக்காலத்தில் நகுலேஸ்வரி என்னும் பெயரில் வரைந்த ஓவியங்கள் சில பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன.
இவ்விதம் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பெயர் பல்வேறு தருணங்களில் என் வாழ்வில் எதிர்பட்டுக்கொண்டிருந்தது. இன்னுமொரு விடயத்திலும் அவரது பெயர் என்னைக் கவர்ந்திருந்தது. எனக்குப் பிடித்த புனைபெயர்களிலொன்று. அதற்கான காரணத்தை அண்மையில் முகநூலில் அவரது பதிவொன்றின் அல்லது எதிர்வினையொன்றின் மூலமே அறிந்துகொண்டேன். எழுத்தாளர் மீ.ப.சோமுவின் கல்கி சஞ்சிகயில் வெளியான நாவலான 'நந்தவனம்' நாவலில் வரும் நாயகி தாமரைச்செல்வியின் தாக்கத்தால் அவர் வைத்துக்கொண்ட புனைபெயர் என்பதை அப்போதே அறிந்துகொண்டேன். அது போல் மீ.பா.சோமுவின் இன்னுமொரு புகழ்பெற்ற் வரலாற்று நாவலான 'கடல் கொண்ட கனவு' நாவலின் நாயகி யாழ்நங்கையின் தாக்கமே எழுத்தாளர் அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் தன் புனைபெயராக 'யாழ்நங்கை' என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்பதையும் அண்மையில்தான் அறிந்தேன். அதுவும் எனக்குப் பிடித்த இன்னுமொரு புனைபெயர்.