சக்கரங்கள் நிற்பதில்லை! மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு ! ஒரு பார்வை ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!........
மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய் அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.
இம் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக நான்கு மணி. மெல்பனில் பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் அந்தக்குரல் ஒலிக்கிறது. மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.
நான் எனது கண்களை மெதுவாக நிமிர்த்திப் பார்க்கிறேன்.
மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன் என்னை நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட அந்தப் பார்வை.