தொடர்கதை: தீவுக்கு ஒரு பயணம்! (1) - கடல்புத்திரன் -
கண்ணால் சிரித்து ,பேசி காவியம் பாடிய மகள் இறந்து போன பிறகு , வெளியில் எங்கையாவது போய் வந்தால் நல்லது ' என தோன்றியது . நோவாகோர்ஸியாவிலிருந்த பூமலர் , தில்லையையும் , ஜெயந்தியையும் " எங்க வீட்டிற்கு வாருங்களன் . துக்கத்திற்கு ஒரு மாற்றமாக இருக்கும்" என அழைத்திருந்தாள் .மகள் பிறந்ததிலிருந்து ஆஸ்பத்திரியும் , வீடும் , மருத்துவர் ...என அதில் ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு .....இருபது வருசம் ஓடியதே தெரியவில்லை ." போவோம் " என முடிவெடுக்க ...இந்த கொரோனா ... குறுக்கிட்டு விட்டது . நாம் ஒன்று நினைக்க வைரஸொன்று நினைக்கிறது .
நடக்க முடியாத அதிசயமாக வர்த்தகம் , அரச நிர்வாகக் கதவுகள் எல்லாம் அடைப்பட்டன . 'ஒன் லைன்' என்கிற 'ஈ' வழித் தொடர்ப்புகளால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் . மக்கள் , அனைவரும் கட்டாயம் பழகத் தான் வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது . இந்த இறுக்கம் தளர் நிலைக்கு வந்த போது தெரிந்தவர்கள் சிலரின் மரணங்கள் , எம் வீட்டுக் கதவையும் வந்து தட்டி விடலாம் என்ற பயபீதியை ஏற்றியது . புயல் கடக்கவில்லை . ஒருவாறாக கோவிட்டுக்கு வக்சீன் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது . ரஸ்யா தான் ... முதலில் கண்டு பிடித்தது . ரஸ்யாவுடன் சேர்ந்திருந்தால் வேளைக்கே எமக்கு வக்சீன் கிடைத்திருக்கும் . பிறகு , ஒரு மாதிரியாக மாற்றம் மெல்ல படர தொடங்கிது . ஒரு முறை...ஏற்றல் நடந்து . பிறகு இரண்டாவது முறை . பதற்றத்தை வக்சீன் வெகுவாக குறைத்து விட்டது . இருந்த போதிலும் மனிதர் பலியாகிக் கொண்டேயிருந்தனர் . ' பலி ' நிற்கவில்லை .