சிறுகதை : பூக்கொத்து! - கடல்புத்திரன் -
ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ? , வடக்கு , கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்.....அரைவாசி பிரச்சனையே மாயமாகி மறைந்து விடுமே ! . இங்கேயும் மகிழ்ச்சியற்று வாழ வேண்டிய அவசியமும் இல்லையே . அங்கே , போரிற்குப் பின்னரான படை அமைப்புகளையே கலைத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் கிடக்கிறது . செய்வார்கள் எனப் படவில்லை . குற்றவாளிகளைக் கொண்டே ஆண்டு கொண்டு இருக்கப் போறார்கள் . இன்று , பஞ்சம் , பசி என்றால் அனைவருக்குமே தெரிகிறது . மனிதர்களை மனிதர் நம்புறதால் , நம்பினால் தான் சிறந்த வாழ்வு கிடைக்கும் . அல்லா விட்டால் , வட்டிக்கு வாங்கிற கடன்களே ஏறிக் கொண்டே இருக்கப் போகிறது . பொலிஸ் , பயங்கரவாதி என்றே பார்க்கிற பார்வையால் ஒரு நிமிசம் கூட நிம்மதியாக வாழ முடியாத குழப்பம் நிலவினால் எப்படி தமிழரும் விவசாயம் செய்து அவர்களுக்கு உத முடியும் ? விவசாயத்தையும் , பொருளாதாரத்தையும் வளர விடாது ....படையினர் குதறிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் .
இங்கே மாமர நிழல் இல்லை ,கீச்சூ ,கீச்சூ என்ற பறவைச் சத்தமில்லை , சுத்தமான நீர்,காற்று...சுகம் காண முடிகிறதா ? என்ன . ஒரு ஏலியன் குடியிருப்புக்குள் வந்து இருப்பது போல இருக்கப் போறார்கள் .நகரத்தின் புறப்பகுதியில் கொண்டோவில் இருக்கிறான் . பல்கணியை அடைக்கலாம் என்ற அனுமதி இருப்பதால் கண்ணாடியால் அடைத்து விட்டிருக்கிறான் . அதிலே திரைச்சீலையை இழுத்து விட்டு ஆசையுடன் இரவில் வானத்தையும் சாலையையும் பார்த்துக் பார்த்துக் கொண்டு நிற்பான் . விண்மீன்களைத் தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை . அப்பாவிற்கு அதிலே சீலைக்கதிரையைப் போட்டு இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார் . " அது என்னப்பா சீலைக் கதிரை ? " என்று அவனுடைய வால் ஆறுமுகம் கேட்கிற போது " அது ஈசி செயார் " என்றான் . ஐஞ்சு வயசாகிற அவனுக்கு விளங்க மாட்டாதே ...எனத் தோன்ற கையில் வைத்திருந்த அப்பிள் பலகையில் எடுத்துக் காட்டினான் . " ஒரு பாடியோ கதிரை ". ஒன்லைனில் வாங்கலாம் தான் .உடைந்து விழுகிற அதற்கு விலை அதிகமாகவே போட்டிருந்தது . தமிழ்க்கடைகளில் குறைவாக இருக்கலாம் . கிராமத்தில் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறது .