(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (4 & 5) - ஜோதிகுமார் -
4.
ஏய்டன் என்பவன் அயர்லாந்தில் இருந்து வந்த ஒரு ஆங்கில அதிகாரியாக இருந்தாலும், ஒரு ஆங்கிலேய ராணுவ பள்ளியில் படித்து வளர்ந்திருந்தாலும், ஷெல்லியின் எழுத்துக்களை அவன் உருப்போட்டிருப்பதால், அது, அவனை சமயங்களில் அலைக்கழித்து சமூக நீதிக்கான மன உலைச்சல்களை, சலனங்களை அவனில் ஏற்படுத்துவதாய் நாவல் சித்தரிக்கின்றது. ஷெல்லியின் மானுட நோக்கானது அல்லது அவனது சமூக நீதிக்கான குரல் எவ்வளவு வலிமை பொருந்தியது என்பதெல்லாம் ஏற்கனவே வரலாற்றில் பதியப்பட்டுள்ள சங்கதிகள்தாம். ஷெல்லி மாத்திரம் என்றில்லாமல் ஷெல்லிதாசன் என அறியப்பட்ட பாரதி முதல் இன்னும் இருக்ககூடிய அனந்த எழுத்தாளர்கள், மானுட நேயத்தின் பார்வையால் தூண்டப்பெற்று ஓரணியாய் நின்றதும், நிற்பதும் கூட வரலாறுதான். இதன் தொடர்ச்சி இன்றும் எம்மிடை அவதானிக்கக் கூடியதுதான். இவ்வெழுத்துக்கள் மனிதனை அப்படி என்னதான் செய்கின்றன? இவ்வெழுத்துக்களின் தேவைப்பாடுதான் என்ன?
ஒரு முறை ஜெயகாந்தன் ஒரு கதையைக் கூற நேரிட்டது:
ஒரு கிராமத்து திருடன். நீண்ட நாள் சிறை வாசத்தின் பின், ஊரார் அவனைத் தீண்டாத நிலையில் இருத்திய போது ஒரு பாதிரி, அவனைத் தன் வாசஸ்தலத்திற்கு இட்டு வந்து அவனை அன்பால் திருத்தும் பொருட்டு அவருடன் தங்கவைத்து கொள்கின்றார். நடு இரவில் கண் விழிக்கும் அவன் தன் பழக்க தோசத்தாலோ என்னவோ மாதா கோயிலின் இரண்டு விளக்குகளில் ஒன்றைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகின்றான். இருந்தும் ஊர் எல்லையில் காவலாளர்களிடம் பிடிபட்டு போகின்றான். விளக்கைப் பார்த்துவிட்டு அவனை அவர்கள் மாதா கோயிலுக்கே திருப்பி அழைத்து வருகின்றார்கள். இவர்களைக் கண்ட மதகுரு, ‘நண்பரே வாருங்கள்’ ஏன் மற்ற விளக்கையும் எடுத்துக் கொள்ளாமல் மறந்து போய் விட்டிருந்தீர்கள்…இந்தாருங்கள், எடுத்து செல்லுங்கள் என்று மற்ற விளக்கையும் அவனிடம் கொடுத்து விடுகின்றார். மதகுருவின் இந்நடவடிக்கை அவனில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்து சேர்ப்பதாய் கதை.
இதைக் கூறும் ஜெயகாந்தன் “இப்படித்தான் - நூல்கள், புத்தகங்கள் எம்மைப் பாதிக்கின்றன. எங்கோ, தொலைதூரத்தில் எழுதப்பட்ட இந்த சிறுகதை எனது மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யாரோ ஒரு நண்பர் ஒருமுறை சில தென்னங்கன்றுகளை எனக்குத் தத்திருந்தார். அவை கிடு கிடு வென வளர்ந்து ஒவ்வொரு மரத்திலும் குலை குலையாக காய்களை ஏந்தியிருந்தன. இளநீர் குடிக்க ஆசை இருந்தும் அண்ணாந்து பாரப்பதோடு நான் சரி. மரமேற தெரியாது. யாரையாவது கொண்டு தேங்காய்களைப் பறிக்கலாம் என்றாலும் யாருமே அகப்படவில்லை.