பதிவுகள் முகப்பு

பாரதி தமிழன்னைச் சொத்தாகும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தாய் நாட்டின் விடுதலைக்காய்
தமிழெடுத்துக் கவி பாடி
தலை நிமிர்ந்த கவிமன்னன்
தான் எங்கள் பாரதியே
ஓய் வறியாக் கொடுத்தானே
உணர்வு எழச் செய்தானே
தாய் மண்ணை நேசித்தே
தன் வாழ்வை மறந்தானே !

பெண் போற்றி வாழ்ந்தானே
மண் போற்றி நின்றானே
தன் துன்பம் மறந்தானே
தமிழ் எண்ணி நின்றானே
பொன் பற்றி எண்ணாமல்
பொழுது எல்லாம் தாயகத்தின்
விடிவுதனை மனம் எண்ணி
வெகுண் டெழுந்தான் பாரதியும் !

பன் மொழிகள் கற்றான்
பன் நூல்கள் கற்றான்
என்றாலும் தமிழ் மொழியே
இனிமை எனச் சொன்னான்
தமிழ் என்று சொன்னாலே
அமிழ் தூறும் என்றான்
அவன் வார்த்தை அகமிருத்தி
அவன் நினைவில் நிற்போம்  !

மேலும் படிக்க ...

கண்டுணராத கண்கள்! - ரவி அல்லது -

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
11 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இனியொரு
விதி செய்து
கடக்க முடியாது
பாரதியின்
பாடல்களைத் தவிர்த்து
நாம்.

ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமேயென
அங்கலாய்த்து
கடக்க முடியாது
பாரதியின்
சவ ஊர்வலத்தை
நாம்.

மேலும் படிக்க ...

தேடல்கள் மிக்க மகாகவி பாரதி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதியார் என் ஆளுமையில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திய மானுட ஆளுமைகளில் ஒருவர். குறுகிய வாழ்வில் அவரது சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. தான் வாழ்ந்த  சூழலில் நிலவிய சமூக, அரசியல்  மற்றும் பொருளியல் நிலைகளை எதிர்கொண்டு, அவற்றால் நிலவிய அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுத்தார். செயற்பட்டார். வர்க்க விடுதலை, தேசிய விடுதலை, பெண்  விடுதலை, மானுட விடுதலை என அவரது அவரது சிந்தனைகள், எழுத்துகள், செயல்கள் அமைதிரூந்தன, அதே சமயம் இருப்பு பற்றியும்  சிந்தித்தார். அத்தெளிவுடன் அவர் தான் வாழ்ந்த மண்ணின் அவலங்களை நோக்கினார்; அணுகினார்.

அவரது எழுத்துகள் எளிமையானவை. ஆழமானவை. சிந்திக்க வைப்பவை. உற்சாகம் தருபவை. தட்டி எழுப்புபவை. அவரது முரண்பாடுகள் அவரது ஆழ்ந்த தேடலின் விளைவுகள். அவரது சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள்.

இன்று அவரது நினைவு தினம். நாளும் பொழுதும் என் நினைவில் நிற்பவர் அவர். மீண்டுமொரு தடவை அவரை நினைத்துக்கொள்கின்றேன். அவரது சிந்தனைகளை வெளிப்படுத்தும் வரிகளை நினைவில் கொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
10 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.

இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.

மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த  இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

யாழ்நகரில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா..!

விவரங்கள்
தகவல்: வி. ரி. இளங்கோவன் -
நிகழ்வுகள்
10 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

முத்து முத்துத் தேடல்! -பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம் -

விவரங்கள்
-பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம் -
கவிதை
10 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முத்துமுத்துத் தேடலுண்டு முத்தம்மா உன்றன்
முன்னும் பின்னும் ஆடலுண்டு மொத்தமா
கத்தும்கடல் பாடலுண்டு கண்ணம்மா – அந்தக்
காதல்வரும் செந்தமிழே எண்ணம்மா

கானமுண்டு தேனுமுண்டு ககனமே – கன்னற்
கவிதை உண்டு தமிழ்வழங்கும் கணிதமே
மானமுண்டு வீரமுண்டு மனிதமே – கொஞ்சும்
மத்தளத்தில் மகிமையுண்டு புனிதமே

முந்துதமிழ் சிந்துதரும் முன்னமே – அங்கு
மொய்பவளம் அங்கையிடும் மன்றமே
சந்தமெனச் செந்தமிழும் சாற்றிடும் - அன்புச்
சாதனையில் சொந்தமெலாம் போற்றிடும்

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -

விவரங்கள்
- தகவல்: அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
09 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
 
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
 
‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்று கூறும் பாலகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுக்க இடையறாது பழந்தமிழ் இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு ஆகியவற்றிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். சிந்துவெளிப் பண்பாடு மற்றும் தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடப்பெயராய்வுகள் வலிமை தரும் என்பதைச் சான்றுடன் நிறுவியுள்ளார். இந்தியாவை ‘உருக்குப் பானை’ என்று சொல்வதற்குப் பதிலாக இந்தியத் துணைகண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் ‘இந்தியா ஒரு மழைக்காடு’ (Rain forest) என்கிற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பொதுவெளியில் பேசியும் எழுதியும் வருகிறார்.
 
இந்தியவியல், மானிடவியல், தொல்லியல், இடப்பெயராய்வு ஆகியவை இவரது முனைப்புக் களங்களாகும். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ’கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்கு இவர்தான் முதன்முதலாகக் கொண்டுவந்தார். சிந்துவெளி நகரங்களின் ‘மேல் மேற்கு, கீழ் கிழக்கு வடிவமைப்பும் அதன் திராவிட அடித்தளமும்’ என்கிற தலைப்பிலான இவரது ஆய்வு பரவலாகக் கவனம் பெற்ற ஒன்றாகும். சிந்துவெளிப் பண்பாட்டிற்கான திராவிட அடித்தளத்தைப் பண்பாட்டு ஆய்வுகளின் பின்புலத்தில் நிறுவியவர் பாலகிருஷ்ணன். இவரது சிந்துவெளி ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 2017இல் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்: எழுத்தாளர் அரங்கம் (25) - எழுத்தாளர் வ.ந.கிரிதரன் எழுத்துலக அனுபவம்!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
08 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய எழுத்தாளர் அரங்கம் (25) நிகழ்வில் கடந்த வெள்ளி கலந்துகொண்டு உரையாற்றினேன்.

அதில் என் எழுத்துலக அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்துகொண்டேன். எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை அறிவதில் பெரு விருப்பு மிக்க எனக்கு என் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் முக்கியமான அனுபவம்.

நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை, கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு நீங்கள் கேட்கலாம். கேட்டுப் பாருங்கள். என் எழுத்துலக ஆர்வத்தினை, வாசிப்பிலுள்ள பெரு விருப்பினை, என் எழுத்துலகக் காலகட்டங்களை, என் சிந்தனைகளை எனப் பலவற்றை இங்கு நீங்கள் கேட்கலாம்.

இணையகக் காப்பகத்தில் (archive.org) ' வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



தற்போது இணையகக் காப்பகத்தில் (archive.org) 'வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!' ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாசிக்க விரும்பும் எவரும் வாசிக்கலாம். பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுடருக்கு ஆரோக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றது. செயற்கை அறிவும் அத்தகைய தொழில் நுட்பமே. எனது பாடல் வரிகளுக்குச் செயற்கைத் தொழில் நுட்பம் இசையமைத்ததுடன் அல்லாது பாடுவதற்கான குரலையும் வழங்குகின்றது.  பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல் வரிகளைப் பல் வகைகளில் இசையமைத்து, பாட வைத்துப் பரிசோதிக்க இத்தொழில் நுட்பம் வழி சமைத்துள்ளது. அவரது பாடல் எழுதும் திறமையினையும் வளர்ப்பதற்கும் இத்தொழில் நுட்பம் உதவுகின்றது.

இவ்விதமாகச் செயற்கை அறிவு இசைமையத்துப் பாடிய பாடல்களை நீங்கள் எனது யு டியூப் சானலான வ.ந.கிரிதரனின் பாடல்கள் சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு.  அட்டைப்பட ஓவியம்: செயற்கை அறிவு (AI) | இசை & குரல்: செயற்கை அறிவு (AI) SUNO.

ஆய்வு: கம்பராமாயணத்தில் நலம் விசாரித்தல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
07 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உறவினர்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்களையும் நலம் விசாரிப்பது சிறந்த பண்பாடும், பழக்க வழக்கமாகும். அத்தகைய பண்பாட்டிற்கும், பழக்கவழக்கங்களுக்கும் கொண்ட நலம் விசாரித்தலுக்கு கம்பர் தன் இராமாயணத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதனைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

1.நகர மக்களின் நலனை இராமன் விசாரித்தல்

இராமன் தன் எதிரே வரும் ஊர் மக்களிடம் மிகுந்த கருணையோடு, செந்தாமரை மலர் போன்ற தன் முகம் ஒளி வீச,உமக்கு நான் செய்யத்தக்க செயல் எது? துன்பம் ஏதும் இல்லையல்லவா? உம் மனைவியும், புத்திசாலிகளான புதல்வர்களும் சுகமாகவும், நோயற்று வலிமை பெற் றவராகவும் இருக்கின்றனரா? என்று வினவுவான்.

"எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிதும் நும் மனைவியும்
மதி தரும் குமரரும் வலியர்கொல் எனவே"
(திரு அவதாரப்படலம் 312)

2.தசரதன் நலம் விசாரித்தல்

இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக தசரதன் தன் படைகளுடன் மிதிலை வருகிறான். அவனை எதிரே சென்று ஜனகர் வந்து வரவேற்கின்றார். ஜனகர் தேரை விட்டு இறங்கி வருகிறார். தசரதன் தன் செய்கையினால் ஜனகனை தனது தேருக்கு அழைக்கின்றான். ஜனகன் தேரில் ஏறியவுடன் அவனைத் தசரதன் கட்டித் தழுவுகின்றான். பின்பு ஒவ்வொருவராக தசரதன் நலம் விசாரிக்கின்றான்.

மேலும் படிக்க ...

என் எழுத்துலக அனுபவங்கள் (1) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எண்பதுகளில் நியூ யோர்க  மாநகரத்து வீதி ஓவியர் என்னைப் பார்த்து வரைந்த பென்சில் ஓவியம். -

நேற்று மலை மெய்நிகர் வழி மூலம் எனது எழுத்துலக அனுபவங்களைப் பற்றி உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நிகழ்வு சிறப்பாக  அமைந்திருந்தது. கனடா (டொராண்டோ, மொன்ரியால்), ஆஸ்திரேலியா, இலங்கை பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டார்கள்.  இந்நிகழ்வைக் கனடாத்  தமிழ் எழுத்தாளர் இணையம் ஒழுங்கமைத்து நடத்தியிருந்தது. அவ்வமைப்புக்கு என் நன்றி. இந்நிகழ்வில் கால எல்லை காராணமாக எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் முழுமையாக உரையாற்றியதாகக் கூற முடியாது. முடிந்தவரையில் என் எழுத்துலக அனுபவங்களை விபரித்திருந்தேன். இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கும், தூண்டுதலாகவிருந்த அதன் முன்னாள் தலைவர் எழுத்தாளர் அகணி சுரேஷ் அவர்களுக்கும் நன்றி.

நிகழ்வின் பின் என் எழுத்துலக அனுபவங்களை ஏன் விரிவாக எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரைத்தொடர். இத்தொடரை என் எழுத்துலக அனுபவங்கள் பற்றி விளக்குவதற்குரிய ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இத்தொடரில் என் வாழ்க்கைப்பருவத்தின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றிய அனுபவங்களை, அக்காலகட்டச் சிந்தனைகளை எல்லாம் மனந்திறந்து வெளிப்படுத்தலாம் என்று கருதுகின்றேன்.

பொதுவாகவே நான்  எழுத்தாளர்களின்  எழுத்துலக அனுபவங்களை, அவர்கள் தம் நனவிடை தோய்தல்களை அறிவதற்கு பெரு விருப்பு மிக்கவன். நீங்களும் அவ்விதமான மனப்போக்கு உள்ளவர்களாகவே இருப்பீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. நிச்சயம் நீங்கள் இத்தொடரை ஆர்வத்துடன் வாசிப்பீர்கள்  என்பதும் அவ்விதமானதொரு நம்பிக்கையே.

எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம். நான் அறிவியலூடு இருப்பு பற்றிய தேடல்களை மேற்கொள்பவன்.

மேலும் படிக்க ...

ஸ்ரீரஞ்சனியின் “அடர் இருள் என் செயும்” - சிறுகதை பற்றிய நயவுரை -ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
-ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
06 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவர்கள்,  தாயகத்தில் இருந்து மேற்குலகின் பல பாகங்களுக்கும் புலம்பெயர்ந்த  பலரது வாழ்வியல் மற்றும் மனப்போராட்டங்கள் பற்றி பல வித்தியாசமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். அக உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கதைசொல்லலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் இவர். அத்துடன் கருவுக்கும் களத்திற்கும் பொருத்தமான அழகியல் உணர்வுடன் கூடிய வித்தியாசமான தலைப்புகளைத் தெரிவு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார். வாசகரைக் கதைக்குள் கவரும் முதல் ஈர்ப்பாக அதன் தலைப்பே அமைவதால் ஒரு சிறந்த உத்தியாகவும் இதைப் படைப்பாளர் கையாள்கிறார் .

இவரது 'ஒன்றே வேறே' என்னும் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஆண்டு இலங்கை அரசின் சாகித்ய விருதினையும் பெற்றுக் கொண்டது. அந்தத் தலைப்பும் பல ஊகங்களைத் தரக் கூடிய தலைப்பு ஆகும். இங்கும் இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு பொருத்தமான தலைப்பினை எடுத்திருக்கிறார். அதே சமயம் 'அடர் இருள் என் செயும்' ? இதுவும் கடந்து போகும் என கதையின் ஆரம்பத்திலேயே மனோதிடம் கொண்ட ஒரு நேரம்ச சிந்தனைக்குள் வாசகரை இழுத்துக் கொள்கிறார்.

இவர் எடுத்துக் கொண்ட மூலக்கரு மிகவும் புதியதல்ல.ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். எனினும் எழுதப்படும் முறையாலும் வெளிக்காட்டப்படும் உணர்வுகளாலும் கதையின் கரு புதிய பரிமாணங்களை எடுக்கிறது. அந்த விதத்தில் ஸ்ரீரஞ்சனியின் கதைகள் வித்தியாசமானவை. புலம் பெயரும் பெற்றோருக்கு விழிப்புணர்வு தரும் கதையாகவும் அமைகிறது.

மேலும் படிக்க ...

Kursk! ரஷ்யா-உக்ரைன் போர் நிலவரம்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி I

இரண்டாம் உல மகா யுத்தத்தின் பின், அல்லது நெப்போலியனின் படையெடுப்பின் பின், ரஷ்யா, பரந்த அளவில் தாக்குதலுக்கு உட்பட்டது என்றால், அது 06.08.2024 அன்று, உக்ரைனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆகும் என உலக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 1150 ஏக்கரில், 80 குடியிருப்புகளை நிர்மூலமாக்கும், பரந்த வகையிலான தாக்குதல் இதுவாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், போலந்து போன்ற நாட்டின் வீரர்களும், அந்நாடுகளின் பல்வேறு நவீன ஆயுதங்களும் நேரடியாக களமிறக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்பட்டாலும், ஏனைய நேட்டோ நாடுகளும், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் என ஊகிக்கப்படுகிறது.

இந்திய இராணுவ வல்லுநர்களும் விமர்சகருமான சாணக்கியாவின் பார்வையில், இது உண்மையில், புட்டின் வகுத்த திட்டத்தின் மொத்த பெறுபேறே இது என கூறப்பட்டாலும், இத்தாக்குதலின் நோக்கம் குறித்து பல்வேறு செய்திகளும் வந்தப்படியே இருக்கின்றன. (20.08.2024)

சாணக்கியாவின் பார்வையில், இதுவரை, ஒப்பீட்டளவில், ஒடுங்கிய ஒரு நிலப்பரப்பில் நடத்தப்பட்ட, உக்ரைனிய-ரஷ்ய போர், இப்பொழுதே, பரந்த அளவில், பல கிலோமீட்டர் நெடுக நடத்தப்படும் ஓர் போராக மாறியிருக்கின்றது. அவரது பார்வையில், இது ரஷ்யாவுக்கே சாதகமானது. இரண்டாம் உலகப்போரை எடுத்தாலும் சரி அல்லது நெப்போலியனின் படையெடுப்பை எடுத்தாலும் சரி பரந்த எல்லை நெடுக போர் நடத்தும்  ஒரு நடைமுறை என்றால் அதனை ரஷ்யா என்றும் வரவேற்க செய்யும் என்பதே அவரது முடிவாகின்றது. இதன் அடிப்படையிலேயே, இந் நிலைமையானது புட்டினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என அவர் முடிவு செய்கின்றார்.

படையெடுப்பை அடுத்து, ரஷ்யா கிட்டத்தட்ட தனது 133,190 குடிமக்களை, போர் நடக்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தியது (France 24- 12.08.2024).). இதனையடுத்து, உக்ரைன் சந்தோஷத்துடன் உள் இறங்கி பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டது. ரஷ்யாவும், தன் படைகளை பின்வாங்க செய்து, உக்ரைனிய படைகளின், தங்கு தடையற்ற முன்னேற்றத்திற்கு ஒத்தாசை புரிந்தது. (அப்படியே ரஷ்யாவானது, எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும், ஒப்பீட்டளவில் அது ஓர் பேச்சளவிலான எதிர் தாக்குதல் என்ற வகையிலேயே இருந்தது).

மேலும் படிக்க ...

சேரனின் “காஞ்சி” கவிதைத் திரட்டு - ஒரு சிறிய கண்ணோட்டம்! - க. நவம் -

விவரங்கள்
க. நவம் -
நூல் அறிமுகம்
06 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மிக நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்க் கவிதை மரபில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், பாரதி. தமிழுக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்து என்பதை தமிழினம் உணரத்தவறியிருந்த காலத்தினைக் கடந்து, மறைந்துபோன பாரதியை, கற்றோரும் மற்றோரும் இனங்காணக்கூடிய வகையில், சரிவர அறிமுகம் செய்தவர்களில், ஈழத்து அறிஞர்கள் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சுவாமி விபுலானந்த அடிகள்; மற்றவர் பேராசிரியர் கைலாசபதி.

தமிழ்க் கவிதை இலக்கியம் நவீன தமிழ்க் கவிதை எனும் வடிவத்தினைக் கண்டடைந்த போது, அதன் பிதாமகராக இன்றும் நன்றியோடு நினைவுகூரப்படுபவர், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட, இன்னொரு ஈழத்தவரான ’பிரமிள்’ எனப்படும் அரூப் தர்மு சிவராமு (தருமலிங்கம் சிவராமலிங்கம்).

தமிழ்ப் புதுக் கவிதையினை, ஈழத்தில் பிறிதொரு தளத்தில் நின்று, பரிசோதித்து, வெற்றி கண்டவர், உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட மஹாகவி. இவரது வழிநடந்து, கவிதை படைத்து, ஈழத் தமிழ்ப் புதுக்கவிதை மரபின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் சண்முகம் சிவலிங்கம், நுஃமான், வில்வரத்தினம் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இன்று, சேரன், ஜெயபாலன் உட்பட, எண்ணிறந்த நவீன தமிழ்க் கவிஞர்கள் பலரும் ஈழத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும்சரி காத்திரமான ஒரு நவீன தமிழ்க் கவிஞர் பரம்பரையினராகத் தோற்றம் பெறுவதற்கு, இவர்கள் காரணர்களாக அமைந்திருந்தனர் எனத் துணிந்து கூறலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளியின் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு! - தகவல்: இலக்கியவெளி -

விவரங்கள்
- தகவல்: இலக்கியவெளி -
நிகழ்வுகள்
04 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெளியின் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

நாள்: 14-09-2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3.30

இடம்:
எங்கட புத்தகங்கள்  இல்லம்
18/2, திருவடி நிழல்
அம்மன் வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் த.இராஜகோபாலன் (இராஜகோபாலன் மாஸ்டர்) மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் த. இராஜகோபாலன் (மல்லிகை ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவால் இராஜகோபாலன் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவர்) வயது தொண்ணூறுகளைக் கடந்த நிலையில் மறைந்த செய்தியினை அவரது உறவினர் எழுத்தாளர் வதிரி சி ரவீந்திரன் அறியத்தந்தார். இவர் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர் ராஜா மதியழகன் அவர்களின் தந்தையாரும் கூட.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இவரது படைப்புகள் அதிகமாக வெளிவந்ததா என்பது பற்றி நான் அறியவில்லை. ஆனால் இவரது சிறுகதைகள் சில சுதந்திரனில் ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளியாகியிருந்தன. 3.3.1967  வெளியான சுதந்திரனில் இவரது 'எங்கே போவேன்' சிறுகதை வெளியாகியுள்ளது. எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  பற்றிய முக்கிய ஆவணச்சிறப்பு மிக்க தகவல்களை உள்ளடக்கிய இவரது கட்டுரையொன்று மல்லிகையின் செப்டம்பர் 1972 இதழில் 'இலக்கிய நினைவு - அமரர் அ.ந.கந்தசாமி' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அ.ந.க பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்காத தகவல்களை உள்ளடக்கிய ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை.

த.இராஜகோபாலன் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ஒரு காலத்தில் இவர் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த விபரத்தை இவரை அட்டைப்பட நாயகனாக்கி ஏப்ரல் 2009 வெளிவந்த மல்லிகை சஞ்சிகையில் இவர் பற்றிய எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் புதிய பாடல்கள் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
02 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                       இசை & குரல்:  AI SUNO | ஓவியம்: AI -  - 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில்  கேட்டுக் களிக்க    

1.  அலைந்து திரியும் அகதி மேகமே!

நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=k5ayU9KObjc

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

நாடு விட்டு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

போரில் நீயும் குடும்பம் இழந்தாயோ?
இருந்த வீடும் இடிந்து போனதுவோ?
படையினர் உன் வீட்டை அபகரித்தனரோ?
புகலிடம் நாடி புலம் பெயர்ந்தாயோ?

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

மேலும் படிக்க ...

தோண்டத் தோண்டத் துலங்கும் உண்மைகள்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
- சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
ஆய்வு
02 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

            சைபீரிய ஐஸ் இளவரசி இப்படித்தான் இருந்திருப்பார்.


பல உண்மைகளை மனத்துக்குள் போட்டு மறைத்து, அதனை வெளியே விடாமல் வைத்திருப்போர்களிடம் சில கேள்விகளை நாம் கேட்கின்றோம். அக்கேள்விகள் கொண்டு வரும் பதில்கள் உள் மன ஆழங்களை வெளியே கொண்டு வருகின்றது. மூடி வைத்திருக்கும் பல உண்மைகள் வெளிப்படுகின்றது. வழக்கறிஞன் கேட்கின்ற கேள்விகளே உண்மைக் குற்றவாளியை இனம் கண்டு பிடிக்கிறது. உண்மை நிரபராதிகளை வெளிக் கொண்டுவருகின்றது. சொல் படாமல் எதுவும் வெளிவராது. அதுபோல் உழியில்லாமல் மண் உண்மையைத் தராது.

மனிதனின் ஆரம்பம் எங்கே இருக்கின்றது? மொழி எப்போது தோன்றியது? எந்த இனம் முதல் தோன்றிய இனம்? மனிதனின் கலாசாரம் எவ்வாறு அமைந்திருந்தது? கலைகள் எவ்வாறு அமைந்திருந்தன? வேற்று இனத்தவர்களுடைய இனம் எவ்வாறு அமைந்திருந்தது? இவ்வாறான ஆராய்ச்சிகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்பவர்களிடம் மேம்பட்டுக் காணப்படுவதே பல உண்மைகளை வெளியே கொண்டு வந்து கொட்டிவிடுகின்றன. ஆராய்ச்சிகளில் மேம்படுவோர் நிலத்தைக் குடைகின்றார்கள், நீரினுள் பயணம் செய்கின்றார்கள், பனிமலையின் அருகே போய் ஆய்வுகள் செய்கின்றார்கள், கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் அருகே நின்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றார்கள். முடிவில் உண்மைகளை வெளியே எடுத்து வருகின்றார்கள். ஆனால், சிலரோ எம்முடைய வரலாற்றில் பாதகம் ஏற்படும் என்ற பட்சத்தில் உண்மைகள் மறைக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்கின்றார்கள்.

எகிப்திய நாட்டிலும், ரஷ்யாவிலும், இந்தியாவிலும் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் காட்டியுள்ள உண்மைகளை இக்கட்டுரையில் நான் எடுத்து வருகின்றேன்.

மேலும் படிக்க ...

சிறுகதை: அடர் இருள் என்செயும் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
01 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                              - ஓவியம் - AI -

அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.

அன்றையப் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, வினோ வேலையிலிருந்து ஒரு மணிநேரம் முன்னதாக வந்திருந்தாள். சர்மி வகுப்புக்கு நேரத்துக்கு வரவில்லை எனப் பாடசாலையிலிருந்து இந்த மாதம் இரண்டு தடவை அழைப்பு வந்திருந்தது. அவளின் இந்தத் தவணைத் தேர்ச்சியறிக்கையும் திருப்தியாக இருக்கவில்லை. இன்றைய சந்திப்பு நிறைய அசெளகரியம் தருவதாக இருக்கப் போகிறதென்ற யதார்த்தம் அவளின் மனதை நெருடியது கூடவே சர்மியுடன் முதல் நாளிரவு நடந்த வாக்குவாதமும் அவளின் நினைவுக்கு வந்தது. சர்மியுடனான பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வுகாணலாம் என்பது உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. தகப்பன் இல்லாத பிள்ளை என்ற என அவள் கேட்டதையெல்லாம் நிறைவேற்றி அவளைச் செல்லமாக வளர்த்ததுதான் பிழையா?

“பத்தாம் வகுப்புக்கு வந்திட்டாய். கொஞ்சமெண்டாலும் பொறுப்பு வேண்டாமே? ஒழுங்காய்ப் படிச்சால்தானே யூனிவசிற்றிக்குப் போகலாம், ஒரு நல்ல வேலையைத் தேடலாம். அல்லது என்னைப்போல பஃற்ரரி வேலையிலைதான் மாயவேண்டியதுதான்!” சர்மி பற்றிய கரிசனையுடன்தான் அவள் சொன்னாள்.

“அம்மா, என்னால முடிஞ்சதைத்தான் நான் செய்யலாம். உங்களுக்குக் கெட்டித்தனம் இருந்தாதானே, அதை என்னட்டை நீங்க எதிர்பாக்கலாம்?” கொம்பியூட்டரில் விளையாடிக் கொண்டிருந்த சர்மி, அதிலிருந்த கண்களை விலக்காமல் எள்ளலாகப் பதிலளித்தாள்.

வேலைமுடிந்த களைப்புடன் வந்திருந்த வினோவுக்குச் சர்மியின் எதிர்வாதம் கோபத்தைக் கொடுத்தது. சடாரென்று அவளின் தோளில் எட்டித் தட்டினாள். “யோசிச்சுக் கதை. பொம்பர் போடுற குண்டுகளுக்கேயும், செல்லடிகளுக்குள்ளேயும் வாழ்ந்துகொண்டு நாங்க நிம்மதியாய்ப் படிச்சிருக்கேலுமே. எவ்வளவு கஷ்டப்பட்டனாங்க எண்டது உனக்கு விளங்கினால்தானே. உன்னைச் சொகுசா இருக்கவிட்டிட்டு எல்லாத்தையும் நான் செய்யிறன். கவனமாய்ப் படி எண்டதைத் தவிர வேறை என்னத்தை நான் உன்னட்டைக் கேட்கிறன்? மேக்கப் போட்டுக்கொண்டு சுத்துறதிலைதான் உனக்கு அக்கறையே தவிர, படிப்பிலை இல்லை,” சிவந்துபோன வினோவின் முகத் தசைகள் துடித்தன. மூச்சு வாங்கியது. ஒரு நிமிடம் ஆழமாக மூச்செடுத்தவள், தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, “எழும்பு, பிள்ளை. முதலிலை வீட்டுப் பாடங்களைச் செய். இந்த அறையை ஒதுக்கு. பிறகு விளையாடலாம்,” சர்மியைப் பார்த்துக் கனிவாகக் கூறினாள்.

மேலும் படிக்க ...

சிறுகதை: இலக்கியப் போட்டி - எஸ். அகஸ்தியர் -

விவரங்கள்
- எஸ். அகஸ்தியர் -
சிறுகதை
31 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை. தினகரன் பத்திரிகையில் வெளியானது. அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அனுப்பி வைத்த சிறுகதை. அவருக்கு நன்றி. )


அன்புள்ள செயலாளருக்கு,

தங்கள் எழுத்தாளர் சங்கம் நடத்துகின்ற அகில இலங்கைச் சிறுகதைப் போட்டிக்கென, எனது ‘ஒரே வழி’ என்ற கதை இத்துடன் வருகிறது. போட்டியின் பெறுபேற்றை உரிய காலத்தில் அறிவிக்கவும்.

செல்வி ரோகினி, 28- 4- 63

அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
 
நாம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்களின் ‘ஒரே வழி’ என்ற கதை, ‘இரண்டாம் பரிசுக்குரியதென’ நீதிபதிகளால்  தெரிவு செய்யப்பட்டுள்ளது. பரிசளிப்பு வைபவம், மட்டக்களப்பிலே இம்மாத ஈற்றில் நடைபெறும் முத்தமிழ் விழாவின் ஓர் அங்கமாக இது அமையும். தாங்கள் நேரில் வந்து பரிசு பெற வேண்டும் என விரும்புகிறோம்.  
 
தங்களின் கதை, நமது வெளியீடாக விரைவில் வரும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெறவுள்ளது. ‘பாஸ்போட்’ அளவிலான தங்கள் புகைப்படமொன்றைச் சீக்கிரம் அனுப்பவும்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஹைதராபாத் நாவல்கள்! -பெரம்பலூர் காப்பியன் -

விவரங்கள்
-பெரம்பலூர் காப்பியன் -
நூல் அறிமுகம்
30 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் 1984-92 வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது.

 அவரின் முதல் நாவல்  மற்றும் சிலர் மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த,  திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நடராசா சுசீந்திரனின் ‘சொற்கள் வனையும் உலகம்’ , ‘தடங்களில் அலைதல்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
30 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
‘சொற்கள் வனையும் உலகம்’, ‘தடங்களில் அலைதல்’  நடராசா சுசிந்திரனின் கட்டுரைத்தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைத்தமை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரு நூல்களும் ‘சுவடு வெளியீடாக’ 2023 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுமே கட்டுரை வடிவத்தைக் கொண்டிருப்பது என்பது அவற்றினை வகைப்படுத்திப் பலவிடயங்களை திரும்பிப்பார்த்து அசை போடுவதற்கும், பலவற்றை அறிந்து கொள்வதற்கும் மிகச் சுவையாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

   சொற்கள் வனையும் உலகம் : புகலிட செயற்பாடுகளின் சில முக்கியமான தடயங்களையும், ஜேர்மன் மொழியுடனான தனது ஆளுமையையும் புலப்படுத்தும் வகையில் கட்டுரைகளை வெளிப்படுத்தியிருப்பது மிகச்சிறப்பான விடயம். தமிழ் மக்கள் அறிந்திராத பல விடயங்களை அனுபவச் செறிவோடும் குறிப்புகளோடும் கட்டுரைகளாக்கி வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இக்கட்டுரைத் தொகுதியை ‘தன் பலத்தின் பாதியாயிருந்த அவரது அப்பா சின்னத்தம்பி நடராசாவுக்கே’ சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

    ‘கோதேயின் ‘பவுஸ்ட்’’, ‘எதுவரை தொடரும் மனிதரின் கதை’, ‘மக்ஸ் ஃபிறிஷ்ஷின் ‘ஹோமோஃபாபர்’, ‘செ. வே.காசிநாதனின் ‘விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்’, ஜாக்லண்டனின் ‘கானகத்தின் குரல்’, செல்லத்தம்பி  சிறீகந்தராசாவின் ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’, அப்துல்றசாக் குர்நாவின்; ‘சொர்க்கம்’, ‘பேராசிரியர் கைலாசபதியும் பாரதி ஆய்வுகளும்’, ‘கே.கணேஷின் மொழியாக்கத்தில் லாஓ ஷேயின் ‘கூனற்பிறை’, ‘அவலங்களின் காட்சியறை குந்தவையின் சிறுகதைகள்’, ‘உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும் தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ்மனம்’, ‘பாரதிதாசனின் ‘ஓ..கனடா’, ‘வாசுதேவனின் ‘தொலைவில்’ கவிதைத் தொகுப்பு’, ‘விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல்’, ‘பிராங்போர்ட்’ றஞ்சனியின் ;றஞ்சினி கவிதைகள்’, ‘சி.சிறீறங்கனின் ‘சிவப்புக்கோடு’, ‘என். சரவணனின் ‘பண்டாரநாயக்க கொலை’, ‘இரா. றஜீன்;குமாரின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு’, ‘எவ்வகையில் அமையலாம் பொறுப்புக் கூறுதல் ஜப்பானிய அட்மிரல் தக்கிஜீரோ ஒனிஷி (1891-1945)யின் பதில்’, ‘நிக்கொலாய் கோகோலின் மேலங்கி’, மரணமுகாமிங்கு நேரம் தவறாது ரயில் அனுப்பிய அடொல்வ் ஜஸ்மான்’, ஓய்.பி.சத்தியநாராயணனின் ‘என் தந்தை பாலய்யா’, ‘ஸ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரை’ போன்ற இருபத்திமூன்று கட்டுரைகள் 168பக்கங்களை உள்ளடக்கியமைந்துள்ளன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=--s_We6LiGg

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: இலங்கையின் தாய்மார்கள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
சிறுகதை
28 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                                             - ஓவியம் - AI -

(1996- லண்டன்  'தமிழ் டைம்ஸ்' சஞ்சிகையில்  ஆங்கிலத்தில் வெளியான இந்தக் கதை நான் ஏன் இலங்கையில் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் பிரச்சாரம் செய்கிறேன் என்பதை விளக்கும்.)
லண்டன் 1996

"இது ஒரு சூடான நாளாக இருக்கப் போகிறது" தேவிகா திரைச்சீலைகளை விலக்கி வெளியே வானிலை பார்ப்பதற்காக தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

தெளிவான நீல வானம் மெதுவான இயக்கத்தில் நகரும் அலைந்து திரியும் மென்மையான வெள்ளை மேகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை ஏழு மணி மட்டுமே என்பதால் தெரு கிட்டத்தட்ட காலியாக இருக்கும்ம, ஆனால் எந்த நேரத்திலும் சத்தம் மற்றும் கூட்டம் இருக்கும்.

பக்கத்து வீட்டுக்காரர் வழக்கம் போல சத்தமாக ரெக்கே இசையை இசைக்கிறார். தேவிகா ஆடியோ டேப்பை போட்டுக்கொண்டு பாத்ரூம் செல்கிறாள். சில நொடிகளில் தமிழ் தேவhர பாடல்கள் அமைதியான தாள லயங்களால் வீட்டை நிரப்புகின்றன.

அவள் தயாராகி தேநீர் தயாரிக்க கீழே வருகிறாள். அவளது குழந்தைகள் அவளது அறைக்கு அருகிலேயே தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேற்று இரவு வரை தங்கள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தன, அவர்கள் தாமதமாக எழுந்திருக்கப் போகிறார்கள். அவர்களின் பூனை ஜோசி அறையைச் சுற்றி அலைந்து காலையில் வழக்கம் போல் தனது கால்களை நக்குகிறது. கருப்பு பூனை மிகவும் அழகாக இருக்கிறது மற்றும் நன்கு வளர்க்கப்பட்ட இளம் பெண்ணைப் போல நேர்த்தியாக நகர்கிறது. பூனை தேவிகாவைப் பார்த்து கத்துகிறது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zrIMuysVSN0

தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோ

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

ஆகாயம் பார்த்து நிற்கும் பொழுதுகள்
ஆகர்சிப்பவை என்னை எப்போதும் எப்போதும்.
விரிவெளியில் என்னிருப்பு எவ்விதம் இவ்விதம்?
விடைநாடி வினாக்கள் எழும் பொழுதுகள்.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

இவ்விதப் பொழுதுகளை நான் விரும்புகின்றேன்.
இருப்பு பற்றிய கேள்விகளில் விருப்புண்டு.
சிந்திக்கத்  தூண்டும் வினாக்கள் அல்லவா.
சிந்திப்பதில்தான் எத்துணை மகிழ்ச்சி.களிப்பு.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. இருபத்து நான்காம் வயதில் பாரதி : பகுதி III - ஜோதிகுமார் -
  2. வ.ந.கிரிதரன் பாடல் - ஒட்டகங்கள்!
  3. சிறுகதை: புற்றுப் பாம்புகள்! - அ.கந்தசாமி -
  4. வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.
  5. இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
  6. எழுத்தாளர் முருகபூபதி விரைவில் பூரண நலத்துடன் மீண்டிட வேண்டுவோம்!
  7. ஒஸ்லோவில் தமிழ் மரபோடு இணைந்த அரங்கேற்றம் - மாதவி சிவலீலன் -
  8. என் அபிமான டியூசன் மாஸ்டர்களில் ஒருவர் எழுத்தாளர் அ.கந்தசாமி! - வ.ந.கிரிதரன் -
  9. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 41 -"நீலாவணனின் பன்முக ஆளுமை" -- தகவல்: அகில் -
  10. சிறுகதை: காற்றில் கரைந்த நதியின் ஓசை! - டீன் கபூர் -
  11. திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதி வெளியிட்டு விழா! - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
  12. லக்ஷ்மி சிரித்தாள்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  13. இரு கவிதைகள் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  14. ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
பக்கம் 17 / 104
  • முதல்
  • முந்தைய
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • அடுத்த
  • கடைசி