நெடுங்கதை - சுதந்திரபுரத்தில்... - முல்லைஅமுதன் -
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி : VNG
1அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.
கடைக்கு பலரும் வந்து போவார்கள்.
சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.
'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.
'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது.அதற்காக வீட்டைவிற்ரு கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல்போனால் வீடாவது மிஞ்சுமே?கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே..வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேணும்'
சுப்பையா அண்ணர் மறு பேச்சு பேசவேயில்லை..தலையை ஆட்டினார்..