சிறுகதை: சில துரோகங்கள் மன்னிப்பதற்கல்ல! - ஸ்ரீராம் விக்னேஷ் –
என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.
அன்னராஜ் பாதிரியார் எனது மாமனாரிடமும், அத்தையிடமும்ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.
“சாரி ஜோசப்…. சாரி ரெஜினா…..மணப்பொண்ணே கலியாணத்தில இஸ்டமில்லைங்கிறப்ப என்னால எதுவுமே பண்ண முடியாது….. ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் உங்களுக்கு புரியவைக்கணும்னு இல்லை…. உங்க பொண்ணுகிட்ட பேசி, அவளை ஒத்துக்க வையுங்க….”
“அவள்கிட்ட பேசமுடியாது பாதர்…. சொன்னதையே சாதிப்பா….”
“பெத்தவங்க உங்களாலையே பேசமுடியல்லைங்கிறப்போ, நான் பேசிமட்டும் என்ன ஆகப்போவுது…. ஆனா ஒண்ணைய்யா ஜோசப்… உங்க பெரியமவ ஸ்டெல்லாவால நீங்க குனிஞ்ச தலையை, உங்க சின்னமவ திரேசா, அவ சொன்னமாதிரியே நிமித்திப்புட்டாயா…. ஆனா தாலிகட்டுறப்ப பாத்து ஏன் கலியாணம் வேண்டாங்கிறாண்ணு தெரியலியே....”
திரேசாவைச் சரிசெய்யும் பொறுப்பிலே நான்.
“ கலியாணப் பேச்சு எடுத்த நாளிலயிருந்து இப்போ கடைசி நிமிசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.…ஸ்டீபன் அப்பிடி என்னதான்டி பண்ணிப்புட்டாரு…..”
இந்த சம்மந்தத்தை பேசி ஒழுங்குபண்ணுறதுக்கு உங்க அண்ணன் என்னபாடெல்லாம் பட்டாருன்னு தெரியுமா….”
என்னை வேண்டாவெறுப்புடன் பார்ப்பதுபோல பார்த்தாள் திரேசா.
“அதுக்கு முன்னாடி நீங்க ஒரு சம்பவத்தைநெனைச்சுப் பாக்கணும் அண்ணி…. ஒரு வருசத்துக்கு முன்னாடி இதேசர்ச்சில வெச்சு, எல்லாரு முன்னாடியும் ஒரு சத்தியம் பண்ணினேனில்லியா….”
அவள் சொல்லும்போது, நடந்த சம்பவமெல்லாம் மனத்துள்ளே படமாக ஓடின.
எனது கணவர் ஆபிரகாமின் மூத்த தங்கை ஸ்டெல்லாவின் திருமண நிகழ்வு இரண்டு ஆண்டுக்குமுன் நடைபெற்றது.