கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களின் பதிப்பிலான கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” - இக்பால் அலி -
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலுள்ள தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆவது ஆண்டைக் கடந்து செல்லுகின்றது. அந்த வகையில் மலையக எழுச்சிக்காக பங்காற்றிய பல ஆளுமைகள் உள்ளன. அதில் கோ. நடேசய்யரின் பங்களிப்பு மகத்தானது. இத்தருணத்தில் கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” என்ற நூலை கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் மீளவும் பதிப்பித்து வெளியிடுவது இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் அவசியமான தொன்றாகும்.
இரத்தத்தையும் வியர்வையையும் தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கி இந்நாட்டை வளமாக்கியவர்களின் வரலாறு தோற்றம் பெறுவதற்கு உந்து சக்தியாக அமைந்த கோ. நடேசய்யர் அவர்கள் எழுதிய இந்த “இந்திய இலங்கை ஒப்பந்தம்”; என்னும் நூல் மலையக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பேசுகின்றன.
இம்மக்கள் சமூக, பொருளாதார அரசியல் அரங்கில் கொடுங்கோன்மையுடன் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு இந்நூலே போதுமானதாகும்.
தேசபக்தன் கோ. நடேசய்யர் அவர்கள் “ இலங்கை இந்தியா ஒப்பந்தம்” என்கின்ற தலைப்பில் முதல் பதிப்பாக 1941 இல் வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பாக கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களைப் பதிப்பாசிரிரியராகக் கொண்டு 2022 இல் மலை வாசகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
1820 களின் ஆரம்பத்தில் கோப்பி பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்ட வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே இன்றைய மலையக மக்களின் ஆரம்ப கர்த்தாக்களாகும். 1823 முதல் 1920 வரை இவர்கள் தோட்டங்களில் அடைபட்ட ஒரு தொழிலாளர் கூட்டமாகவே கருதப்பட்டனர். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் காலனித்துவ அடிமைகளாகவும், கங்காணித்துவ அதிகாரத்திற்குட்பட்டவர்களாகவும் வாழ்ந்த தோட்டத் தொழிலார்களை முதன் முதலில் தொழிற்சங்க அடிப்படையில் ஒன்று திரட்டி பல்வேறு களச் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு போராட்டங்களையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தொடக்கி வைத்தவர் கோ. நடேசய்யர் அவர்களே.