தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (15 - 20)! - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. இத்தொடரின் இறுதிப்பகுதியிது. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துக்ளை எழுதுங்கள். அவை பதிவுகளில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
15
பாரதி, தன் தேடல்களுக்கூடு, தன் வாழ்க்கை தரிசன பரப்பெல்லையை, நாளும் நொடியும், விஸ்தரித்து செல்வதை, அவனது வாழ்வும் வரிகளும் எமக்கு எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. இருந்தும் மஹாகவி, குறித்த ஓர் சித்தாந்த சார்பினை தேடிச் செல்லாதது அவரது பலம் என்ற வகையில் போற்றப்படுவதைப் பின்வரும் வரிகள் எதிரொலிக்கின்றன:
“மஹாகவிக்கு இத்தகைய இடர்பாடுகள் இல்லை. அவர் (முருகையன் போல்) ஒரு தத்துவத்தை மட்டும் தமக்குரியதாக வரித்து கொண்டவருமல்லர். எல்லாவற்றுள் இருந்தும் ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு மானுடம் பாடியவர் அவர்…” ப-320
மறுபுறம், கைலாசபதியின் கூற்று வருமாறு:
“சித்தாந்த சார்பொன்றினை தேடிச்செல்லும் ஆத்ம துடிப்பின் எல்லையிலேயே அவரது (முருகையனது) கவிதைகளில் பெரும்பாலானவை பிறக்கின்றன…”து குறித்து கருத்துகூறும் பேராசிரியர் பிரசாந்தன், “இத்தகைய ஒரு சித்தாந்த சார்பு, படைப்பாளியின் பிற சிறகுகளை வெட்டி விடக்கூடிய தன்மையுடையது… தத்துவ சார்பு (என்பது), அச்சித்தாந்த சார்பு குழுமத்துக்குள் முதன்மை வழங்குமே தவிர முழு இலக்கியப் பரப்புள்ளும் முதன்மையை வழங்காது. பதிலாக, கேள்விக்குள்ளாகும்…” என்பார்.