அளவெட்டியின் நாடகர்: சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும்! - இரவி அருணாசலம் -
முதற்குறிப்பு: அளவெட்டி, வீரகத்திக்கும் தெய்வானைக்கும் ஏழு பிள்ளைகள். அவர்களுக்கு முதற்பிள்ளை பெண்! தம்பதியினரின் நிறைவுக் குழந்தையும் புதல்வியே ஆனாள்! இடையில் ஐவர், ஆண்பிள்ளைகள். 'பஞ்ச பாண்டவர்' என்று ஊரில் அவர்களைச் சொன்னார்கள். நாகமுத்து என்னும் முதற்பிள்ளையின் இளைய மகனாக வந்துதித்தவர் பெயர்: அருணாசலம். இளைய மகளான விசாலாட்சியின் மூத்த மைந்தன், வாமதேவன். அருணாசலமும் வாமதேவனும் ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி. அருணாசலத்துக்கு இரண்டு பிள்ளைகள்: மூத்தவள் பெண்.(சியாமளா) அடுத்து ஆண்.(இரவி) அவ்வாறே வாமதேவனுக்கும். மூத்தவள் தமிழினி என்றானவள். வலவன், இளையவன். அஃதோர் ஒற்றுமை. ஆலமரத்துக்கும் அப்பாலான பெரிய மரம், வீரகத்தி குடும்பம். அக்குடும்பத்தினர் முழுமையாக வாழ்ந்த இடம்: அளவெட்டி வடக்கில் இலகடி என்னும் குறிச்சி. இனித் தொடருங்கள்.
வாமதேவுச் சித்தப்பா என்றால் எனக்கு இரண்டு விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. 1964, 65ஆம் ஆண்டுகளில் நாங்கள் அளவெட்டி, இலகடியில் வசிக்கிறோம். எனக்கு நாலைந்து வயது. வாமதேவுச் சித்தப்பா வீட்டையும் எங்களது வீட்டையும் ஒரே வேலியே பிரிக்கிறது. அவர்களும் நாங்களும் புழங்குகின்ற பொதுக்கிணறு நாம்பிரான் கோயிலடியில். சித்தப்பா கொழும்பிலோ எங்கேயோ வேலை. விடுமுறைக்கு வீடு வந்தால் காலையிலேயே பொதுக்கிணற்றில் குளித்துவிடுவார். அதற்குமுதல் குளிப்பதற்காக அவர் செய்கின்ற சடங்கு பெரிது. அதிலொன்று பல்லுத் தேய்த்தல்.