முன்னுரை
பதினெண் மேற்கணக்குநூல்களில் இடம் பெற்ற பத்துப்பாட்டில், பத்தாவதாய் இடம்பெற்ற நூல் மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார், கல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்சூவன் நன்னன் சேய் நன்னனைப் பாடிய ஆற்றுப்படைநூலாகும். கூத்தரை ஆற்றுப்படுத்திப் பாடியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை எனவும் பெயர் பெறும்.
மலைபடுகடாம்
இலக்கியங்கள், அவை தோன்றிய காலத்திய மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் 583 அடிகளைக் கொண்ட இந்நூல் அக்காலத்திய மக்களின் வாழ்க்கைமுறை, மன்னன் ஆட்சி, இயற்கை வளம் போன்றவற்றை அழகுற எடுத்துரைக்கிறது. காட்டில் கேட்கின்ற பலவகையான குரல்களும் ஒருங்கிணைந்து மலையில் மோதி எழும்புகின்ற முழக்கத்தை 56 அடிகளில் தொகுத்துக் கூறிமலையாகிய யானையின் பிளிறல் எனும் பொருள்படும் படி மலைபடுகடாம் என புதுமைப் பெயர் பெற்று இசைச் செறிவோடு, பண்பாடும் காட்டி நிற்கின்றது.
பண்பாடு
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டுமுறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியல் அமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழா, உணவு, பொழுதுபோக்கு போன்றவற்றைக் குறிக்கும்.
Culture என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லே பண்பாடு ஆகும். “மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவியே பண்பாடு”என சி.சி. நார்த் குறிப்பிட்டுள்ளார். பண்பாடு என்றால் ஒரு குழுவின் வரலாறு, மொழி, பண்புகள், சமய நம்பிக்கைகள், தொழில்கள் போன்றவற்றை, அடுத்தடுத்து வரும் மற்ற மக்களுக்குக் காட்டும் அளவு கோலாகும். காட்டு மிராண்டியாய் சுற்றித்திரிந்த மனிதன் பல்வேறு கட்ட பண்பட்ட, பண்பாட்டு வளர்ச்சியினால் தனக்கென பல அடையாளங்களைப் பதித்துச் சென்றான். மனிதனின் பரிணாம வளர்ச்சியின் படிக்கட்டுகளாய் பண்பாடு பயணித்து வருகிறது.