ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்!
1. நிகர் செய்திடாத நியாயங்கள்.
வாய்விட்டழும் இவ்வேளையில்
வடித்த கண்ணீருக்கு
மதிப்பற்று கழிந்த நாட்கள் அவை.
நீங்கள் விரிந்து
நாங்கள் சுருங்கிய நரகமது.
சமன் செய்திடாத அசுரத்தன வீக்கத்தின்
புரையோடிய அவலம்.
விட்டு
வெறுண்டோடிய புலம்பெயர்தலின் ரண ஓலம்
இதயம் எட்டவில்லை ஒருபோதும்.
கூடிய நெருக்கடி கூத்தில்
மீளாய்வு செய்திடாத ஓட்டத்தில்
இதயம் தொலைத்த
இயந்திரங்களின்
சிதிலத்தில்
மகிழவில்லைதான்
சேர்மானமாகி இருப்பதால்.
காடும் மலையும்
காணக் கிடைக்காத ஏரியும்.
ஓடியாடிய நதிகளும்
அதில்
ஒட்டுறவாக இருந்த உயிர்களையும்
கொன்றழித்த
கொடூரத்திற்கு முன்
இவ்வழுகையும்
அவலமும்
குறைவுதான்
தனக்கு
மட்டுமென
இவ்வுலகை
நினைக்கும் வரை.